ஃப்ளிப்கார்ட் தளத்தின் சார்பாக விரைவில் ஃப்ரீ வீடியோ ஆப் !

உலகளவில் குழந்தை பிறப்பும் கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிதாக இணையும் செயலிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கூட குறையாத நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் இந்தியக் கிளை யான ஃப்ளிப்கார்ட் தளத்தின் சார்பாக விரைவில் வீடியோ ஆப் ஒன்றும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் ப்ரைம் போல ஃப்ளிப்கார்ட் தளத்தில் வீடியோ ஆப் கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள தனது 160 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள இப்புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களே குறிக்கோளாகவும் வைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வணிகத்தில் தற்போது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதே ஃப்ளிப்கார்ட் வீடியோ தளம் உருவாவதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக திரைபடங்கள், குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றின் மீது மட்டும் கவனம் செலுத்தப்போவதாகவும் ஃப்ளிப்கார்ட் ஒரிஜினல்ஸ் வர காலம் எடுக்கும் என்றும் ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

மேலும், ஃப்ளிப்கார்ட் ஆப் மூலமாகவே வீடியோக்களுக்கான தனிப்பகுதி இருக்கும் என்றும் தனியாகக் கட்டணம் செலுத்திப் பெறும் வீடியோ ஆப் வகையில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.