February 7, 2023

ஐந்து கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அவலம்!

லக மக்களிடம் முன்னெச்சரிக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட ஆர்வம் இல்லாத நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அவலம் நேரப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்றை இந்தியாவில் அடக்கியதில் பெரும் பங்கு தடுப்பூசிகளுக்குத்தான் உண்டு. கொரோனாவுக்கு எதிராக உலகின் மாபெரும் தடுப்பூசி இயக்கம், கடந்த ஆண்டு ஜனவரி 16–-ந் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்றது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் இதில் முக்கிய பங்கு வகித்தன. சுகாதாரப்பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், இணைநோய்களுடன் அவதிப்படும் 45 வயதுக்கு மேற்பட்டோர் என தொடங்கி பல கட்டங்களாக இந்த தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பெரும்பாலோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த ஜனவரி 10–-ந் தேதியில் இருந்து சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது. ஜூலை 10-ந் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் (2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள்) பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டன. ஆனாலும் மக்களிடம் போதிய ஆர்வம் இல்லை. வரவேற்பும் இல்லை. இந்த நிலையில் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் வீணாகி கொட்டி அழிக்கப்பட்டுள்ளதாக அவற்றை தயாரித்த புனே இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.

இந்த நிலையில் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார் தயாரித்த 5 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காலாவதியாகி வீணாகும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தடுப்பூசி உற்பத்தியும் நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில்,“மொத்த வடிவில் 20 கோடி டோசுக்கும் அதிகமான கோவேக்சின் தடுப்பூசி இருப்பு உள்ளது. அவற்றில் 5 கோடி டோஸ்கள் குப்பிகளில் உள்ளன. ஆனால் இந்த தடுப்பூசிகளுக்கு கிராக்கி இல்லை என்பதால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே உற்பத்தியை நிறுத்தி ஆகி விட்டது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குப்பி வடிவத்தில் உள்ள 5 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி காலாவதியாகி, வீணாகி நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது” என தெரிவித்தன.

இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.