மீன்பிடித் தடைக் காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துடுச்சு!

இந்த ஏப்ரல், மே மாதங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் என்பதால், இக்காலங்களில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவும் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதாவது மீன் இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த காலத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு, தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியான கன்னியாகுமரி கடல் பகுதி முதல் சென்னை திருவள்ளூா் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றம் இழுவைப் படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப் படும். அதே வேளையில், கடற்கரையோரங்களில் ஃபைபர் மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கத் தடையில்லை. மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வந்ததால், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டு கரையில் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன படகுகளை பழுது பார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வந்ததால், ராமநாதபுரம் மாவட்டத்தில், 60 ஆயிரம் மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரம் பேர் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.