October 20, 2021

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி காலமானார்!

எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட உலகில் 70 நாடுகளில் உள்ள சிகரங்கள் மீது ஏறி சாதனை படைத்த ஜப்பானிய சாதனைப்பெண் ஜுன்கோ தபி மரணமடைந்தார். இவருக்கு வயது 77.

everest oct 23

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிகாரு எனும் மலைக்கிராமத்தில் கடந்த 1939-ம் ஆண்டு ஜுன்கோ தபி பிறந்தார். இவர் 4-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது தனது ஆசிரியருடன் ஜப்பானில் உள்ள மவுன்ட் நசு மீது ஏறினார். இதுதான் இவரின் முதல் மலை ஏற்றமாகும். அதன்பின், ஜுன்கோ தலைமையில் வந்த ஜப்பான் மகளிர் அணியினர் கடந்த 1975ம் ஆண்டு மே 16-ந்தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். இதன்மூலம் எவரெட்ஸ்ட சிகரத்தை அடைந்த முதல் பெண் எனும் பெருமையை ஜுன்கோ பெற்றார்.அதுமட்டுமல்லாமல் கடந்த 1992-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள 7 முக்கிய உயரமான சிகரங்களில் ஏறி இறங்கிய பெண் எனும் பெருமையையும் ஜுன்கோ பெற்றார்.

ஆம்..ஜப்பானில் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்தவர். 1969ம் ஆண்டு, பெண்களுக்கான தனி மலையேற்ற பயிற்சி மையத்தை ஆரம்பித்தார். அதில் ஆசிரியர்கள், ஆலோசகர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் போன்ற பெண்களும் இல்லத்தரசிகளும் சேர்ந்தனர். ஜுன்ேகாவுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் குழந்தைகள் இருந்தன. பயிற்சி ஆரம்பமானது. முதல் முயற்சியாக நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலையில் ஏற முடிவு செய்தனர். ஜுன்கோவும் ஹிரகோ கிரகாவும் சேர்ந்து அன்னபூர்ணா மலை மீது வெற்றிகரமாக ஏறிவிட்டனர். அந்த வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையில் எவரெஸ்ட் நோக்கி அவர்கள் கவனம் தீவிரமாகத் திரும்பியது.15 பேர் அடங்கிய குழுவுக்குத் தேவையான நிதி சேரவில்லை. கடைசி நேரத்தில் செய்தித்தாள் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் நிதி கோரப்பட்டது. குறைவான நிதியே கிடைத்தது. பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்ய முடிவெடுத்தார் ஜுன்கோ.

தண்ணீர் புகாத பழைய கார் ஷீட்டுகளை வாங்கி பை, கையுறைகளைத் தைத்துக் கொண்டார். சீனாவிலிருந்து வாத்து இறகுகளை வாங்கி, தூங்குவதற்கான பைகளைத் தைத்துக் கொண்டார். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயன்படுத்தாத ஜாம் பாக்கெட்டுகளைச் சேகரித்து, பயணம் மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள். நீண்ட பயிற்சிகளுக்குப் பிறகு எவரெஸ்ட் பயணம் ஆரம்பித்தது. காத்மாண்டுவில் இருந்து எட்மண்ட் ஹிலாரி பயணம் செய்த பாதையில் ஜுன்கோ குழுவினர் ஏறினர். இவர்களுக்கு வழிகாட்டியாக நேபாளத்தின் ஷெர்பா ஒருவரும் சென்றார். 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் ஜுன்கோ குழுவினர் முகாமிட்டிருந்தனர். திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவால் அத்தனைப் பெண்களும் பனிக் குவியல்களுக்குள் புதைந்து போனார்கள். ஜுன்கோவை ஷெர்பா வெளியே இழுத்து வந்தார். 6 நிமிடங்கள் வரை பேச்சு, மூச்சின்றி சுயநினைவை இழந்திருந்தார் ஜுன்கோ. ஷெர்பாவின் உதவியால் ஜுன்கோவும் மற்றவர்களும் பிழைத்தனர்.

இந்த விபத்தால் பல பெண்கள் மேலும் பயணத்தைத் தொடர விரும்பவில்லை. அங்கேயே தங்கிக்கொண்டனர். ஜுன்கோவும் சிலரும் ஷெர்பாவுடன் பயணத்தைத் தொடர்ந்தனர். ஆங்காங்கே மேலும் சில பெண்கள் தங்கிவிட்டனர். 12 நாட்களுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தை நெருங்கினார் ஜுன்கோ. அது ஒரு கத்தி முனைச் சரிவு. ஒருபக்கம் சீனப் பகுதி. இன்னொரு பக்கம் நேபாளப் பகுதி. பாதி உடலை சீனப் பகுதியிலும் மீதி உடலை நேபாளப் பகுதியிலும் வைத்தபடி கைகளால் தவழ்ந்து முன்னேறினார் ஜுன்கோ. பதற்றமில்லை… பயமில்லை… நிதானமாக உச்சியை அடைந்தார். வரலாற்றின் பக்கங்களில் அந்தச் சாதனை பதிக்கப்பட்டது!

‘‘நான் எவரெஸ்டுக்குச் செல்லும் போது 3 வயது மகன் இருந்தான். கணவரிடம் குழந்தையை விட்டுவிட்டு, பயணம் மேற்கொண்டேன். எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் கூடுதல் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைதான். அதற்காக நம் கனவுகளையும் லட்சியங்களையும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகம் முழுவதும் உள்ள உயர்ந்த மலைச் சிகரங்களை நான் எட்டியிருந்தாலும், என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். திருப்தியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். அதனால் குடும்பத்தைக் காரணம் காட்டி, பெண்கள் தங்கள் விருப்பங்களை விட்டுத் தரவேண்டியதில்லை. நம்மால் பல வேலைகளையும் திறமையாகச் செய்ய இயலும்’’ என்றார் ஜுன்கோ.

“உலகம் முழுவதும் உள்ள உயர்ந்த மலைச் சிகரங்களை நான் எட்டியிருந்தாலும், என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். திருப்தியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். அதனால் குடும்பத்தைக் காரணம் காட்டி, பெண்கள் தங்கள் விருப்பங்களை விட்டுத் தரவேண்டியதில்லை. நம்மால் பல வேலைகளையும் திறமையாகச் செய்ய இயலும்.” ‘ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில்,புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஜுன்கோ தபி டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.