February 6, 2023

வர விருக்கும் தொழில் நுட்ப புரட்சி!- இந்தியா மொபைல் மாநாடு 2020 ல் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்கவுரையோடு ஆரம்பித்த இந்திய மொபைல் மாநாடு 2020-இன் முதல் நாளான இன்று, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவில் தகவல் தொடர்பு வலைப்பின்னல் கண்டு வரும் மாற்றங்கள் குறித்து ஐந்து அமர்வுகள் நடைபெற்றன.

தொழில்துறை தலைவர்கள் அதிகளவில் இந்த மாநாட்டில் பங்கேற்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் எதிர்காலத்தை குறித்து பேசினர். ‘தொழிற்சாலை 4.0 – திறன்மிகு பணியிடங்கள் மற்றும் தொழிலகங்கள், தானியங்கி முறை’ என்னும் தலைப்பில் முதல் அமர்வு நடைபெற்றது. ‘தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் கூட்டம் – நாளைய வலைப்பின்னல்கள் – 5ஜி-க்காக வலைப்பின்னல்களை மாற்றியமைத்தல்’, ‘தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் – அனைவரையும் உள்ளடக்கிய புதுமைகள் – டிஜிட்டல் பாகுபாட்டை சரிசெய்தல்’, ‘தொலை தொடர்பு மேகம் – வலைப்பின்னல் மாற்றத்தின் முன்னோடி’ மற்றும் ‘5ஜி-க்கு அப்பால்: அடுத்த தலைமுறைக்கான தரநிலைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியாவுக்கிடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது’ ஆகியவை மற்ற நான்கு அமர்வுகளின் தலைப்புகளாகும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவர் மற்றும் மத்திய தொலைதொடர்பு துறையின் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷின் வரவேற்புரையுடன் தொடங்கிய இன்றைய தினத்தின் நிகழ்வுகளில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு முகேஷ் அம்பானி, பாரதி நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்களின் உரைகள் இடம் பெற்றன.\

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை சாராம்சம் இதோ:.

வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை சிந்தித்து திட்டமிட வேண்டியது அவசியம். சிறந்த சுகாதாரம், சிறந்த கல்வி, சிறந்த தகவல் தொடர்பு மற்றும் நமது விவசாயிகளுக்கான வாய்ப்புகள், சிறு வணிகங்களுக்கான சிறந்த சந்தை அணுகல் ஆகியவை நாம் நோக்கிச் செல்லக்கூடிய சில குறிக்கோள்கள் ஆகும்.

தொற்றுநோயையும் மீறி உலகம் செயல்பட்டது உங்கள் கண்டுபிடிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாகும். ஒரு மகன் தனது தாயுடன் வேறு நகரத்தில் தொடர்பிலிருப்பது உங்கள் முயற்சியால் தான், ஒரு மாணவர் வகுப்பறையில் இல்லாமல் தனது ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டார், ஒரு நோயாளி தனது வீட்டிலிருந்து தனது மருத்துவரை அணுகினார் இதற்கெல்லம் காரணம் மொபைல்தான். மொபைல் உற்பத்தியில் நாம் அதிக வெற்றியைப் பெற்றுள்ளோம், மொபைல் உற்பத்திக்கான விருப்பமான இடங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது.

கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிக்கு மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மொபைல் தொழில்நுட்பம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நன்மைகளை அளித்துள்ளது. தொற்று நோய்களின் போது ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் உதவியது. எதிர்காலத்தில் லட்சக்கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் 5 ஜி தொழிநுட்பத்தை சரியான நேரத்தில் கொண்டு வருவதை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, மொபைல்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் நம்மிடம் உள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை கையாளுவதற்கான ஒரு சிறந்த வழியைப் பற்றி சிந்திக்கவும், பொருளாதாரத்தை உருவாக்கவும் ஒரு பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.

தொலைதொடர்பு உபகரணங்கள், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். வர விருக்கும் தொழில்நுட்ப புரட்சியுடன் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதை சிந்தித்து திட்டமிட வேண்டியது அவசியம்

ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய பொருளாதாரம் மிக விரைவாக மீண்டு வருவதோடு மட்டும் அல்லாமல், இது வரை கண்டிராத வளர்ச்சியை எட்டும். 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுக்கும்.

நாட்டில் 30 கோடி பேர் 2ஜி போன்களில் சிக்கி தவிக்கின்றனர். பின்தங்கிய மக்களுக்கு மலிவான ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதனால், நேரடி மானியத்தை வங்கிகளில் எளிதில் சேர்க்க முடியும்.

டிஜிட்டல் மூலமாக இணைந்துள்ள மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதனைத் தக்க வைக்க, நாட்டில் 5ஜி சேவையை விரைந்து கொண்டுவர தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.2021ம் ஆண்டின் மத்தியில், புரட்சிகரமான 5ஜி சேவையை கொண்டுவருவதில் ஜியோ முன்னோடியாக இருக்கும்.

மத்திய கல்வி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே மற்றும் மத்திய தொலைதொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம் & நீதி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்