July 27, 2021

செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்கள் – சீன விண்வெளி மையம் ரிலீஸ்!

தியான்வென்-1 எனப்படும் சொர்க்கத்திற்கான கேள்விகள் என்ற பெயர் கொண்ட ரோவர் செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களை சீன விண்வெளி மையம் இன்று வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல கோடிகளை செலவிட்டு குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளன. சந்திரயான் விண்கலத்தின் மூலம் நிலவில் நீர் இருந்ததற்கான ஆதாரத்தை இந்தியா கண்டறிந்தது, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்–-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.

முன்னரே குறிப்பிட்டது போல் 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். இந்த விண்கலம் கடந்த 15ந் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.

விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறையின் தன்மைகள், தண்ணீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் செவ்வாய்கிரகத்தில் புகைப்படங்களை எடுத்துள்ளது. அந்த புகைப்படங்களை விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. செவ்வாய்கிரகத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை சீன விண்வெளி மையம் இன்று வெளியிட்டுள்ளதுதான் விண்வெளி நியூஸ்களில் தலைப்புச் செய்தியாக்கும்.