March 25, 2023

தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது உண்மைதாந் சவுதி ஒப்புதல்!

ஆரம்பத்தில் அப்படியா?  அதெல்லாம் ஒன்றுமில்லையே என்று சொல்லி வந்த சவுதி அரேபிய தங்கள்  துணை தூதரகத்தில் நடைபெற்ற சண்டையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வந்த கஷோகி, அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்.இந்நிலையில் துருக்கி நாட்டை சேர்ந்த தனது காதலியை திருமணம் செய்வதற்கு, அந்நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக கடந்த 2-ம் தேதி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்ற கஷோகி மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது. பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்தார்.

இது சவுதி அரேபியாவுக்கு சர்வதேச அளவில்மேற்கு நாடுகளுடனான உறவில் நெருக்கடி ஏற்படுத்தியது. மேலும் உலக நாடுகள் பல இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத் தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஏற்பட்ட கை கலப்பில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா அட்டர்னி ஜெனரல் ஷெய்க் சவுத் அல் மொஜேப் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி அரேபியா அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசர் சல்மான் உத்தரவின் பேரில் சவுதி அல்-குஹ்தானி என்பவர் நீக்கப்பட்டு உள்ளார் என்று துணை உளவுத்துறைத் தலைவர் அஹ்மத் அசிரி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டுள்ள செய்தி வருத்தமளிப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் சாரா சாண்டர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் கஷோகி கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது. தூதரகத்தில் நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் 18 பேரை சவுதி அரேபிய அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்று சவுதி அரேபிய அட்டர்னி ஜெனரல் ஷெய்க் சவுத் அல் மொஜேப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் இந்த விளக்கத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணையை தொடர்ந்து பின்பற்றுவோம். இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வெளிப்படைத்தன்மையுடன் அமெரிக்கா வாதாடும் என்றும் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு ஐ.நா.வின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜமால் கஷோகியின் கொலை மிகவும் துயரம் அளிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆண்டோனியோ தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.