September 27, 2022

குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பத்வா (தடை) : முஸ்லிம் பெண் மதகுருக்கள் மாநாட்டில் தீர்மானம்!

உலகின் அதிக முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடான இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில், சைர்பான் என்னும் இடத்தில், இஸ்லாமிய பெண் குருமார்களுக்கான 3 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த பெண் மதகுருமார்களும் கலந்துகொண்டனர். நூற்றுகணக்கான பெண்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் கடைசி நாளான கடந்த வியாழக்கிழமை அன்று, பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு பத்வா எனப்படும் மதரீதியிலான தடை வழங்கப்பட்டது.

mus apr 29

முக்கியமாக குழந்தை திருமணத்திற்கு எதிராக தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்களின் திருமண வயதை 16ல் இருந்து 18 ஆக உயர்த்த இந்தோனேஷிய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் நான்கில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்குள்ளாகவே திருமணம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றது.

குழந்தை திருமணம், தவிர பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், மழைக்காடுகள் அழிக்கப்படுவது உள்ளிட்ட மேலும் சில பிரச்சனைகள் தொடர்பாகவும் பத்வா அளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சமய விவகார துறை அமைச்சர் லுக்மான் ஹகிம் சைபுதீன், மதகுருமார்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் ஆண் பெண் இடையேயான பாலினப் போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள உலேமா கவுன்சில் தான் பத்வாக்களை வழங்கும். இதற்கு முன்பு பல விவகாரங்களில் உலேமா கவுன்சில் பத்வாக்களை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை பெண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு உலேமா கவுன்சில் பத்வா வழங்கியதில்லை.