பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! பேராசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! பேராசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம், தொழில்நுட்ப படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து AICTE மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயம் செய்யப்ப்பட்டுள்ளது. நடப்பில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000 , அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்த நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணமும் உயர்ந்தது. டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் உயர்த்தி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், M.E., M.Tech., M.Arch., போன்ற முதுகலை படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3,04,000 ஆகவும் என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் – அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணக் குழுவின் பரிந்துரை அறிக்கையை வெளியிட்டது AICTE. அதன்படி, 3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று AICTE உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பொறியியல் கட்டணங்களை மாற்றி அமைக்க பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. எனினும் தமிழகத்தைப் பொறுத்தளவில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழு பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யும். அதனால், ஏஐசிடிஇ பரிந்துரை, தமிழகத்தில் ஏற்கப்படுமா என்பது கட்டண நிர்ணயக் குழு முடிவெடுத்த பிறகே தெரிய வரும்.

error: Content is protected !!