டெல்லி : ஆடல், பாடலுடன் ஊர் திரும்பிய விவசாயிகள்! – வீடியோ!

டெல்லி : ஆடல், பாடலுடன் ஊர் திரும்பிய விவசாயிகள்! – வீடியோ!

டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் கூடாரங்களை அகற்றி, ஆடி, பாடி போராட்ட களத்திலிருந்து இன்று வீடு திரும்பினார்கள்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லி எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய போராட்டம், ஓராண்டை கடந்தும் நீடித்தது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்தில் முறைப்படி சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. இருப்பினும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் நிபந்தனை விதித்தனர். அவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர்.

இந்தநிலையில் டெல்லியை ஒட்டிய சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய எல்லைகளில் ஓராண்டுக்கு மேல் முகாமிட்டிருந்த விவசாயிகள் வீடு திரும்புவதற்கான ஆயத்த பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.

இதற்காக தங்கள் கூடாரங்களை அகற்றினர். தார்ப்பாய், ஏணி, கம்புகள், கயிறுகள், படுக்கை விரிப்புகள், கம்பி வேலிகள், கொசு வலைகள், பி.வி.சி. ஷீட்கள் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றினர். வாஷிங் மெஷின், உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றையும் ஏற்றினர்.

இன்று அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

சிங்கு எல்லைப்பகுதியில் இன்று காலை திரண்ட விவசாயிகள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உற்சாகத்தில் நடனம் ஆடி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அதேபோன்று திக்ரி எல்லை, காஜிப்பூர் எல்லையிலும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். காஜிப்பூர் எல்லையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கொடி அசைத்து விவசாயிகள் சொந்த ஊருக்கு புறப்படுவதை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் அனைவரும் டெல்லியில் இருந்து கலைந்து செல்ல 5 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் டெல்லி புறநகர் பகுதிகளில் இருந்து புறப்படுவதால் 380 நாட்களுக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விவசாயிகள் ஊருடுவலை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் இன்னும் 2 நாட்களில் முழுமையாக அகற்றப்படும் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் டெல்லியில் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளது.

error: Content is protected !!