August 4, 2021

தேவையில்லாமல் அமித்ஷா ஏன் விவசாயிகள் பிரச்னையில் தலையிடுகிறார்?

கொஞ்சம் கூட பொது அறிவோ, பொருளாதார ஞானமோ கிடையாது. தெரிந்ததெல்லாம்… அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆள்தூக்கும் வேலை மட்டுமே.

தமிழக நீர்வழி திட்டங்களாகட்டும், ஐதராபாத் மாநகராட்சித் தேர்தல் ஆகட்டும் எல்லா இடங்களிலும் மூக்கை நுழைத்து பந்தா காட்ட நேரம் இருக்குமளவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் என்கிற பதவி வேலைவெட்டி இல்லாததாகி விட்டது.

நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு. முந்தைய உள்துறை அமைச்சர்கள் பெரும்பாலும் இவற்றைத்தான் செய்தார்கள்.

ஆனால் தற்போது இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சிக்கலைப்பு, எம்.எல்.ஏக்கள் கொள்முதல், சிபிஐ, ஐ.டி, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அமைப்பினரை ஏவி விடுவது போன்ற பணிகளில் மட்டும் கவனம் செலுத்தும் அமித்ஷா நிச்சயம் இந்திய அரசியலின் கரும்புள்ளியே.

உலகின் கவனத்தை உலுக்கியுள்ள டெல்லி விவசாயிகள் போராட்டத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பேச்சுவார்த்தை அது, இதுவென கதையளந்தார்.

‘’ எங்கள் பிரச்சனை பற்றி பேச வேளாண்துறை அமைச்சர், இணையமைச்சர், அதிகாரிகள் தேவைப்பட்டால் பிரதமரும் இருக்கிறார். இந்த நிலையில் தேவையில்லாமல் அமித்ஷா ஏன் இதில் தலையிடுகிறார்? எங்களின் பிரச்சனைகள் பற்றி அவருக்கு என்ன தெரியும்?’’ என ஏகமாக சாடி அறிக்கை வெளியிட்டிருக்கிறது அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு.

நல்ல மனிதருக்கு ஒரு சூடு!

மணிமாறன்