April 13, 2021

3 விவசாய சட்டங்கள் தற்காலிகமாக ரத்து!- சுப்ரீம் கோர்ட்!

மத்திய அரசு இயற்றிய 3 விவசாய சட்டங்களைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்தது. தலைநகர் டெல்லி எல்லையில் 1 மாத காலத்திற்கு மேலாக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனையைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக கமிட்டி ஒன்றை நியமிப்பதாக (12-1-2021) அறிவித்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பொப்தே தலைமையிலான 3 உறுப்பினர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவுகளை இன்று பிறப்பித்தது.

ஏற்கெனவே சுப்ரீம்கோர்ட் நியமிக்கும் கமிட்டியின் நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையில் விவசாயிகளோ, விவசாயிகளின் சங்கங்களோ பங்கு கொள்ளாது என்று விவசாயிகளின் சங்கங்கள் திங்களன்று இரவு அறிக்கை வெளியிட்ட போதிலும், கமிட்டி நியமிப்பதாக இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. சுயேச்சையான கமிட்டி நியமிப்பதை எந்த சக்தியும் தடை செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பொப்தே தெரிவித்தார். பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். போராட்டக் களத்தில் நிலவும் சூழ்நிலை என்ன என்று புரிந்து கொள்ளவும் விரும்புகிறோம். இதில் அரசியல் எதுவும் கிடையாது. நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தலைமை நீதிபதி விவசாயிகளின் சங்கங்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார்.

பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி சிதம்பரிஷ் கமிட்டியின் நடவடிக்கைகளில் தங்கள் சங்கம் பங்கு கொள்ளும் என்று கூறினார். மத்திய அரசு இயற்றிய விவசாய சட்டங்களினால் நாங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு என்றும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று எங்கள் சங்கம் விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நான்கு உறுப்பினர் கமிட்டிக்கு நியமிக்கப்படும் 4 பிரமுகர்கள் யார் யார் என்றும் அறிவித்தது.

1. பூபிந்தர் சிங் மான் தலைவர் பாரதிய கிசான் யூனியன்

2. டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி – முன்னாள் ஐஏஎஸ் சிஆர்ஐ.

3. அசோக் குலாதி. வேளாண் பொருளாதார நிபுணர்.

4. அனில் கன்வத். ஷேத்காரி சங்காதனா விவசாயிகள் அமைப்பு – மகாராஷ்டிரா