August 17, 2022

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார்!

சையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும், சிறந்த நடிகராகவும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர், பல விருதுகளுக்கு சொந்தக்காரர் மாணிக்க விநாயகம் ! உலகம் போற்றிய வழுவூர் ராமையா பிள்ளையின் மகனிவர்.

நம் கட்டிங் கண்ணையா முன்பொரு முறை இவரை நேர்காணல் செய்த போது சொன்ன தகவலிது

மயிலாடுதுறையில் 1948 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். எனக்கு ஏழு வயசிருக்கும் போதே என்னோட மாமாவும், குருவுமான இசை மேதை சிதம்பரப்பிள்ளை யிடம் சங்கீதம் கத்துக்கிட்டேன். இது தவிர குடும்பக்கலையுமான நாட்டியத்தையும் கற்றுக் கொண்டேன். பின்னர் இசையின் மீது கொண்ட ஈர்ப்பால் 1980களில் ஒரு வானொலியில் இசையமைப்பாளராக செல்க்ட செய்யப்பட்டு சென்னையிலுள்ள தொலைக்காட்சிகள், வானொலிகளில் பல நூறு பாடல்களுக்கு இசையமைச்சு வந்தேன். அதன் பின்னர் சில காலங்களில் பல ஒலி நாடாக்களுக்கு பக்திப் பாடல்கள், காதல் பாடல்கள், தேவாரங்கள், திருப்புராணங்கள் போன்றவற்றுக்கு இசையமைத்து உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடிச்சேன். அது மட்டுமல்ல, எனது இசையில் பழைய பாடகர்களில் இருந்து தற்போது உள்ள பாடகர்கள் வரை பல பாடகர்கள் பாடியிருக்காங்க. இதுவரையில் 15,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து பாடியிருக்கிறேன். இதற்காக தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருது கொடுத்தது. 2008 இல் கலைஞர் கருணாநிதி ‘இசைமேதை’ என்ற பட்டம் கொடுத்தார்.

அப்பதான் என்னோட பாடல்களை வித்தியாசாகர் கேட்டுவிட்டு ‘தில்’ படத்தில் முதன் முதலாக நடிகர் விக்ரமுக்காக பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த படத்தில் “கண்ணுக்குள்ள கெளுத்திசு என்ற பாடல் எனக்கு பெரும் புகழையும் வெற்றியையும் தேடித்தந்துச்சு. அதுக்கு அப்புறமாக வித்தியாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், யுவன் சங்கர் ராஜா இப்படிப்பட்ட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வெற்றிப் பாடல்களைப் பாட சந்தர்ப்பம் கிடைத்தது.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியிருக்கிறேன். கூடவே தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி திரைப்படத்தில் தனுஷிற்கு தந்தையாக நடித்தேன். அந்தப் படம் முதல் சில படங்களில் நடித்துள்ளேன்.” என்றார்

கடைசியாக தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடலும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தது. அதேபோல் பக்தி பாடல்களில் இவர் விநாயகர் தொடர்பாக பாடிய பாடல் பலரின் மனம் கவர்ந்த பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவை தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பல ரசிகர்கள் தங்களுடைய அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.