February 5, 2023

ஒருவர் வாழ்ந்த நாட்கள்….இறந்த நாட்களிலிருந்து எண்ணப்படும்!

1987 _ டிசம்பர் 23 , புதன் கிழமை ….. மாலையிலிருந்தே புரட்சித் தலைவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பரபரப்பான செய்தி பரவிக் கொண்டிருந்தது. உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும் பல்வேறு மொழிகளில் அனைத்துத் தரப்பிலிருந்தும் போயஸ்கார்டனில் இருந்த என்னிடம் தொலைபேசி மூலம் தலைவரது உடல் நிலைக் குறித்து விசாரித்துக் கொண்டேயிருந்தனர்.இது பற்றி நான் புரட்சித் தலைவியிடம் தெரிவித்தேன். “சி.எம்.க்கு உடல் நிலை சரியில்லை . போனில் யார் தொடர்பு கொண்டாலும் இது பற்றிய செய்தி எதுவும் கூற வேண்டாம். தெரியாது என்று சொல்லி விடு ” என்றார் அவர். போயஸ் கார்டன் வேதா நிலையமான ஜெ… வீட்டில் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

பாதுகாப்பு அதிகாரி முதல் ஊழியர்கள் உட்பட எல்லோரும் உறங்கி விட்டனர். நான் போன் அருகிலேயே நாற்காலி போட்டு அதில் உட்கார்ந்தபடியே உறங்கியும் உறங்காமலும் இருந்து தொடர்பு கொள்பவர்களுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தேன்.

விடியற்காலை இருக்கும். இண்டர்காமில் அழைத்தார் புரட்சித் தலைவி. அப்போது மணி 3 . “ரவி…சி.எம். இறந்துட்டார். அதிகாரப் பூர்வமான அழைப்பு வந்ததும் புறப்படணும். தயாராய் இரு” என்று சோகம் ததும்பிய குரலில் கூறினார் அவர்.

தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. நான் பாதுகாப்பு அதிகாரியை எழுப்பி செய்தியை தெரிவித்தேன். அவர் ஓ…. என்று கதறி அழத் தொடங்கினார். அவரது அழு குரல் கேட்டு ஊழியர்கள் விழித்துக் கொண்டனர். அவர்களும் அழ ஆரம்பித்தனர். அழும் சத்தம் கேட்டு சமையற்காரர் ராஜம் வரவேற்பறை நோக்கி ஓடி வந்து அம்மாவுக்கு என்னாச்ச்சு? என்று பதற்றத்துடன் ஓடி வந்தார். அம்மாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. தலைவர் இறந்துட்டாங்க என்றேன். அவர் உடனே தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

சிறிது நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி வரவேற்பறைக்கு வந்துவிட்டார் ஜெ…. என்னிடம்…. “காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு டிரைவரை தயாராக இருக்கச் சொல். இந்த போன் ரிசீவரை எடுத்து கீழே வைத்திடு” என்றார்.

ரிசீவரை எடுத்து கீழே வைக்கப் போன நான் இந்த அழைப்பை மட்டும் பேசிடலாம் என்று… “வணக்கம் ! வேதா இல்லம் …. “என்றேன். “வணக்கம்…. நான் ரஜினிகாந்த் பேசுறேன். சி.எம்.சார் இறந்துட்டாங்க. மேடம் ரொம்ப அப்சட்ல இருப்பாங்க. அவுங்ககிட்ட நான் அப்புறமா பேசுறேன். சினிமா உலகமே மேடத்துக்கு துணையா இருப்பபோமுன்னு …சொல்லுங்க. என்னோட ஆறுதலயும் தெரிவிங்க. தைரியமா இருக்கச் சொல்லுங்க… மேடத்தை பத்திரமா பாத்துக்கோங்க” என்றார்.

அதற்குள் ஜெ….. அவர்கள் கறுப்புச் சேலையில் போர்டிகோவுக்கு வந்து விட்டார். நானும் போர்டிகோ பகுதிக்கு ஓடினேன். தயாராய் நின்ற கண்டசா காரில் ஏறியதும் கார் புழுதி பறக்க ராமாவரம் தோட்டத்துக்கு சென்றது. அங்கு ஏற்கெனவே அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கட்சி நிவாகிகள் மற்றும் பொதுமக்கள் என்று கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே செல்ல அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து , சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னரே உள்ளே செல்ல வழிவிட்டனர்.

அதற்குள் புரட்சிதலைவரின் உடல் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு வேனில் ஏற்றப் பட்டது. வேன் புறப்பட்டதும் ராமாவரத்திலிருந்து எல்லா கார்களும் வேனைப் பின் தொடர்ந்து ராஜாஜி ஹால் நோக்கி சென்றன. செய்தியறிந்து அங்கும் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று காத்துக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் பார்வைக்கு தலைவரின் உடல் வைக்கப் பட்டதும் லட்சக் கணக்கான மக்கள் கதறி அழுது கொண்டே வரிசை வரிசையாக வந்து கொண்டே இருந்தனர். அரசியல் ,சினிமா, அரசுஅதிகாரிகள், தொழில் அதிபர்கள் என்று அனைத்து தரப்பினரும் நேரில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்து கொண்டிருந்தனர்.

ராஜாஜி ஹால் முழுவதும் பிரமுகர் கூட்டம்….. பிதுங்கி வழிந்தது! மலர் வளையம் வந்ததும் புரட்சித் தலைவரின் பாதங்களில் வைத்து அஞ்சலி செலுத்தினார் புரட்சித்தலைவி. பின்னர் நேராக தலைவரது தலைமாட்டில் போய் நின்றார். வெகுநேரம் தலைவரைப் பார்த்தப் படியே சோகத்துடன் இருந்தார். சொட்டு நீர்கூட அருந்தாமல் காலையிலிருந்து நாள் முழுவதும் நின்று கொண்டிருந்த அவர் சோர்வடைந்தார். இரவு 11 மணியளவில் மயக்கம் ஏற்பட்டது அவருக்கு. இதனால் அவரை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்.

போயஸ் கார்டன் சென்றதும் சாப்பாடு எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு அவரது அறைக்குள் போய்விட்டார். மறுநாள் டிசம்பர்-25_ஆம் தேதி வெள்ளிக் கிழமை… அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மாடியில் உள்ள தனது அறையிலிருந்து தயாராகி கீழே இறங்கி வந்தார். கட்சி பார்டர் போட்ட வெள்ளை சேலை அணிந்திருந்தார் அவர். காரில் ஏறி 5மணிக்கெல்லாம் ராஜாஜி ஹால் சென்றோம். சென்றதும் ….. அவரிடம் மலர் வளையம் கொடுத்தார்கள். கொடுத்தவர்களிடம் எனக்கும் கொடுக்கச் சொன்னார் . தலைவரின் உடலுக்கு மலர் வைத்து ஜெ…. வணங்கினார். அவரைத் தொடர்ந்து நானும் மலர் வைத்து தலைவருக்கு….. அஞ்சலி செலுத்தினேன்.!

தலைமாட்டில் நின்று கொண்டிருந்த ஜெ…அவர்களின் அருகில் போய் நானும் நின்று கொண்டேன். ராஜாஜி ஹாலின் மேல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நான் மக்கள் கதறும் திசை நோக்கி பார்த்தேன். கீழே லட்சக் கணக்கான மக்கள்…. தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதறியக் காட்சி மனதை கனக்கச் செய்தது. ராஜாஜி ஹாலின் ஒரு பகுதியில் இறுக்கமானவர்கள், இன்னொரு பகுதியினர் பரபரப்பாகவும் இயங்கிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் சோகமெல்லாம் கடந்து புரட்சிதலைவிக்கு எதிர்ப்பான அரசியல் ஆரம்பமானது. கட்சியின் சில விஷமிகள் , சில ரவுடிப் பெண்களை வரவழைத்து ஜெ…வின் அருகில் நிற்க வைத்தனர். அவர்கள் ஜெ…வை இடித்தும் தள்ளியும் இடுப்பில் கிள்ளவும் செய்தனர். இதனால் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. தொல்லைத் தாங்காமல் விரக்தியில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார் என அந்த விஷமிகள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. என்னையும் சில ரவுடிகள் இடிப்பதும் தள்ளுவதுமாக துன்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இதை கவனித்து விட்ட புரட்சித்தலைவி அவர்கள்…. ” ரவி! என்ன நடந்தாலும் இந்த இடத்தை விட்டுப் போய்விடாதே!” என்று சத்தமாகவும் அதட்டலாகவும் சிங்கம் போல் கர்ஜித்ததும் விஷமிகள் நடுங்கி விலகி நின்றார்கள்.

அதையடுத்து… சிறிது நேரத்தில், “ஜானகியம்மா வரப் போறாங்க ” என்று கூறி விரட்டிவிடப் பார்த்தாங்க. அப்போதும் ஜெ…. தலைவரின் தலைமாட்டிலேதான் நின்றார். அப்போது…. ஜானகி எம்ஜியார் அவர்கள் வந்தார். தலைவரது கால் பகுதியில் போடப் பட்டிருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்கள். அவர் எம்ஜியாரின் உடல் மீது முகம் புதைத்து அழுதபோது மிகவும் துயரமாக இருந்தது. ராஜாஜி ஹால் வராண்டாவில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தேம்பி தேம்பி அவர்களது நட்பைப் பற்றி கூறி அழுதபோது அங்கிருந்த அனைவரும் அவரோடு சேர்ந்து அழுது கதறினார்கள்.
தலைவரது உடல் குடும்ப சடங்குக்காக ராஜாஜி ஹாலுக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டது . தொடர்ந்து நாங்களும் பின் சென்றோம். அங்கும்
அனுமதி மறுக்கப் பட்டது. பின்னர் அவர்களோடு சண்டையிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் புரட்சித் தலைவி! உள்ளே சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்ததும் பழையபடி ஹால் படிகட்டுக்கு தலைவரது உடல் கொண்டு வரப்பட்டது.

பின்னர் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட பீரங்கி வண்டியை நோக்கி தலைவரது உடல் எடுத்துச் செல்லப் பட்டது. அந்தக் காட்சிகளை தொலைக் காட்சி நேரடி ஒலிபரப்பிற்காக வர்ணித்துக் கொண்டிருந்தார் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான். பீரங்கி வண்டியை நோக்கி தலைவி சென்றபோது தலைவியின் அரசியல் பிரவேசம், தலைவருக்கு ஆட்சியில் தந்த ஆலோசனைகள் , இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல தலைவி எடுத்துக் கொண்ட சிரத்தைகள் என ஒவ்வொன்றாக வர்ணித்துக் கொண்டிருக்கும் சூழலில்…. தலைவரின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றி வைக்கப் பட்டதும் அதனைத் தொடர்ந்து தலைவியும் பீரங்கி வண்டியின் மேலே ஏறினார். அவர் ஏறுவதற்கு சிரமப்பட்ட நிலையில் மேலே இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் தலைவிக்கு உதவினார்.

மேலே ஏறியதும் மாலைகள் சரிந்து தலைவரின் முகம் மறைக்கப் பட்டிருந்ததை தன் கைகளால் சரிசெய்தார் அவர். அப்போது இதை கவனித்த …. ஜானகியின் சகோதரர் மகன் திலீபன் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகிய இருவரும் கோபத்தில் தலைவியை கீழே தள்ளிவிட்டனர் . அந்த உயரத்தில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தலைவி சட்டென்று கீழே விழுவதை பார்த்த நான் …. எதுவும் செய்ய இயலாமல் ஐயோ…! என்று அலறினேன். கீழே விழுந்த அவர்… கோபத்துடனும் வருத்தத்துடனும் முகம் மேலும் சிவக்க மெல்ல மெல்ல எழுந்தார். தந்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
தனக்கு எல்லாமுமாக இருந்த தலைவரைச் சுமந்த பீரங்கி வண்டியை பார்த்துக் கொண்டே நின்றார். அப்போது பீரங்கி வண்டி மெல்ல நகரத் தொடங்கியது.

நாங்கள் போயஸ்கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றோம். ஒருவர் வாழ்ந்த நாட்கள் இறந்த நாளிலிருந்து எண்ணப்படும் என்பார்கள்…. உண்மைதான். 35 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாளில் ஊரெங்கும் ஒப்பாரி… திசையெங்கும் புகழஞ்சலி! அந்த….. பொன்மனச் செம்மலின் புரட்சி அலை அடித்துக் கொண்டேதான் இருக்கிறது. எத்தனையோ இல்லங்களிலும் இதயங்களிலும் அவர் ஏற்றி வைத்த விளக்கு அவர் பெயரைச் சொல்லி எரிந்து கொண்டே இருக்கிறது!

தஞ்சை ரவிராஜ். (புரட்சித்தலைவியின் முன்னாள் செயலாளர்.)