September 20, 2021

இன்னாது.. நஷ்ட ஈடு வேணுமா? – அஸ்க்கு.. புஸ்க்கு.. அப்பளம் வடை! – பேஸ்புக் ரியாக்‌ஷன்!

அண்மையில் சர்வதேச அளவில் சர்ச்சை கிளப்பிய தகவல் திருட்டான  அரசியல் கணிப்புகளுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுக்கு ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை, தவறான விதத்தில் வழங்கப் பட்டுள்ள விவகாரத்தில், பயனாளிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படமாட்டாது பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகமெங்குமுள்ள கோடிக்கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுக்காக அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட அரசியல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதற்காக திருடப்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால்  பல்வேறு நாடுகளிலிருந்தும் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

இதில் ஐரோப்பிய யூனியனின் எம்பிக்களும் கடுமையாக எதிர்த்தனர். பேஸ்புக் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய எம்பிக்களுக்கு பிரஸ்ஸெல்ஸில் விளக்கம் அளித்தது. ஆனால் வழங்கப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்காக, இந்த வாரத் தொடக்கத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவர்களிடம் சாட்சியம் அளித்தார்.

அது மட்டுமின்றி, ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எழுத்துமூலமாக தனது பதில்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றிலும் வழங்கப்பட்டுள்ளது. இப்பதிலில் இனி இவ்வாறு நடக்காது என வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் அதோடு நின்றதாக தெரியவில்லை. அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்க பேஸ்புக் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலடியாக, ”இது நம்பிக்கை துரோகம். ஆனால் வங்கி கணக்கு விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை. யாருக்கும் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது. ஐரோப்பிய ஒன்றிய பயனாளிகள் தரவுகள் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரமும் இல்லை” என்று பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.