ஆன்லைன் வர்த்தகச் சேவையைத் தொடங்கப் போகுது பேஸ்புக் & இன்ஸ்டா!

ஆன்லைன் வர்த்தகச் சேவையைத் தொடங்கப் போகுது பேஸ்புக் & இன்ஸ்டா!

ந்த கொடூர வைரஸான கொரோனாவால் உலகப் பொருளாதாரமும், பங்குச் சந்தைகளும் வரலாறு காணாத வீழ்ச்சிகளை தொடர்ந்து சந்தித்து வரும் சூழலில் கூட, ஆன்லைன் பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகப் பெரிய பொருளாதார முரணாக விளங்குகின்றது. இந்த ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களும் கூட கொரோனா விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் – என இந்திய அரசு தனது 15 அம்ச வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டு இருந்த நிலையிலும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பொழுது போக்குக்குத் தேவையான பொருட்களையும் ஆன்லைனில்தான் ஆர்டர் செய்கின்றனர். இன்னொரு பக்கம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதையே சிலர் பொழுது போக்காகவும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மன நிலையை புரிந்து கொண்ட பேஸ்புக் நிறுவனமும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வெளியே செல்ல முடியாததால் ஆன்லைன் வர்த்தகத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், எட்ஸி உள்ளிட்டவை நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றன. இதனைக் கவனித்து போட்டிக்காகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னரே தனது வலைதளப்பக்கத்தில் வணிகர்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பேஸ்புக் அப்டேட் செய்திருந்தது.

அதன் அடுத்தக் கட்டமாக இப்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரப் படத்தப்படும் பொருட்களை நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் வாங்கும் வகையில் வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் அதிக அளவிளான வணிகர்களை உலகளாவிய வர்த்தகத்தில் ஒன்றிணைக்க முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், சிறு வணிக நிறுவனங்களில் பொருட்களையும் உலகளாவிய அளவில் பிராண்டிங் செய்வதே எங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெளியிடப்பட்டுவரும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை கிளிக் செய்தாலே பொருட்களை ஆர்டர் செய்யும் வகையில் தொழில்நுட்பத்தில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச அளவில் இந்த புதிய வசதி இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது

 

Related Posts

error: Content is protected !!