அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் முகநூல் இரு ஆண்டுகளுக்கு முடக்கம்!

டந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். இதனையடுத்து, ஜனவரி 7-ம் தேதி புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் நாடாளுமன்றக் கூட்டம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிர் இழந்தனர், பலர் காயம் அடைந்தனர். தேர்தலில் தோல்வி அடைந்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி, தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது பேஸ்புக், டுவிட்டர், யூ ட்யூப் கணக்குகள் முடக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கலவரத்தை தூண்டும் விதமாக ட்ரம்ப் வெளியிட்ட முகநூல் பதிவு குறித்து, முகநூல் நிர்வாகம் விசாரணை மேற்கொண்ட. நிலையில், டிரம்ப் கலவரத்தை தூண்டியது உண்மைதான் என அறிவித்து, 2023 ஜனவரி வரையில் டிரம்பின் முகநூல் கணக்கை முடக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, முகநூலின் விதிகளை மீறும் உலகத்தலைவர்கள் மீது இனி இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகநூல் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, டிரம்பின் முகநூல் கணக்கை அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப்,”இது எனக்கு வாக்களித்த அமெரிக்க மக்களை அவமானப்படுத்தும் செயல்” என்று கூறியுள்ளார்.