எழுமின் – விமர்சனம்!
நம் தமிழ் சினிமாக்களில் காதலை முன்னிலைப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன, குடும்பச் சிக்கலை அலசி பல படங்கள் வந்துள்ளன, பழி வாங்குதல் போக்கை வைத்து பல படங்கள் வந்து உள்ளன, அம்மா, அப்பா, தங்கை செண்டிமெண்டை வைத்து கூட பல வந்துள்ளன, ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து அதிலும் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படம் எப்போ வந்தது என்றே தெரியவில்லை. இந்நிலையில்தான் ‘முதல் தற்காப்பு கலை திரைப்படம்’ என்ற அடைமொழியோடு வெளியாகி இருக்கிறது ‘எழுமின்’. இது குழந்தைகளுக்கு படிப்புடன் தற்காப்பு கலையும் அவசியம் என்பதை உணர்த்தி பொடிசுகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் பாடமாக உள்ள படமிது.
டீன் ஏஜில் இருக்கும் அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என ஆறு பொடிசுகள்.. படிப்புக் கான நேரம் போக குங்ஃபூ, சிலம்பம், கராத்தே, பாக்சிங் என ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொருவர் திறமைசாலிகள். இதில் அர்ஜுன் மட்டும் தொழில் அதிபரான விவேக்-தேவயானியின் மகன். மற்ற வர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள். இவர்களுக்கு கோச்சிங் கொடுக்கும் அகாடமி நடத்திவரும் அழகம்பெருமாள், பீஸ் கட்டவில்லை என அர்ஜுனை தவிர மற்றவர்களை வெளியே அனுப்புவதுடன், அவர்களை தேசிய அளவிலான போட்டியில் கலந்துக்கொள்ளாதபடியும் செய்கிறார்
ஆனால் இந்த குழந்தைகளின் காட்பாதர் போல விளங்கும் விவேக், அதே அழகம் பெருமாள் மாஸ்டருக்கு போதிய பணத்தைக் கொடுத்து தனிப்பயிற்சி கொடுக்க வைக்கிறார். இதனிடையே இரு பெரிய அளவிலான போட்டியில் விவேக் மகனான அர்ஜுன் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் மாரடைப்பு வந்து இற்ந்து விடுகிறான். இப்படி மகனின் இழப்பால் துவண்டு போகும் விவேக்கிற்கு, தேசிய போட்டிக்கு செலக்ட் ஆன மற்ற ஏழை குழந்தைகளைகளுக்கு பதிலாக வேறு சில குழந்தை களை அழகம் பெருமாள் தேர்வு செய்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இதில் கோபமான விவேக், தனது மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டும், இந்த குழந்தைகளுக் காக விசேஷ கோச்சிங் கொடுப்பதற்காகவும் தானே ஒரு அகாடமி ஆரம்பித்து, அதில் முறையான பயிற்சி வ்ழங்கி ஐவரையும் பைனல் போட்டிக்காக ஹைதராபாத் அனுப்பி வைக்கிறார். இதனால் விவேக்கிற்கும் அழகம்பெருமாளுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. அழகம்பெருமாளின் செல்வாக்கை எதிர்த்து விவேக் தனது மாணவர்களை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதே படத்தின் கதை..
தற்காப்பு கலை என்பது பதக்கம் வாங்குவதற்கும், பாராட்டு பெறுவதற்கும் மட்டும் அல்ல, நமக்கு பிரச்சினை ஏற்படும் போது நம்மை காத்துக்கொள்வதற்காக தான், என்பதை அழுத்தமாக சொல்லும் விதத்தில் கதையம்சன் கொண்டுள்ளது மிகச் சிறப்பு. இதையொட்டி தற்காப்பு கலைகளில் இருக்கும் எக்கச்சக்கமான வகைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு அதில் சிறந்த பயிற்சியும், அனுபவம் பெற்ற சிறுவர்களையே நடிக்க வைத்திருப்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்து உள்ளது.குறிப்பாக எந்த காட்சியிலும் மது அல்லது சிகரெட் காட்சிகள் இல்லாமல் அத்துடன் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல்களைப் பிரச்சார நெடி இல்லாமல் கதையோட்டத் துடன் கொண்டு போய் சுவைபட படமாக்கி இருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர் ஆகிறார்.
இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான விஜி மீடியாக்களிடம் பேசிய போது, “நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். தன்னம்பிக்கையுடன் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து முன்னேற்றம் கண்டவன். வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை பார்க்க முடியும். சினிமா மீது எனக்கு தீராத காதல் இருந்தாலும் மக்களுக்கான சினிமா தயாரிக்க வேண்டும் என்ற வேட்கையில் உருவானது தான் எழுமின் திரைப்படம்” என்று தெரிவித்திருந்தவர், “குழந்தை கடத்தல், தனியாகச் செல்லும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆண்கள், போன்ற செய்திகள் தினந்தோறும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறும். எல்லாச் சூழ்நிலைகளிலும் குழந்தைகள், மாணவ, மாணவிகளுடன் பெற்றோர் இருக்க முடிவதில்லை. நகர வாழ்க்கையில் குழந்தைகளை வீதியில் விளையாட அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைக்கும் கலாச்சாரத்தில் மக்கள் உள்ளனர். இதற்குக் காரணம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை தரக்கூடிய தற்காப்பு கலைகளை இன்றைய சமூகம் கற்றுக் கொடுக்க தவறி வருகிறது. அபாயகரமான சூழ்நிலையில் அவர்களை தற்காத்துக் கொள்ள குறைந்தபட்சம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்துவிட்டால் நாட்டில் குற்றங்கள் தடுக்கப்படும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே ‘எழுமின்’படத்தைத் தயாரித்தேன்” என்றும் சொல்லி இருந்தார் இயக்குநர் விஜி. அவரின் இந்த நல்ல மனசுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.
முக்கிய & மெயின் பாத்திரத்தில் வரும் விவேக் இதில் பண்பட்ட ஒரு குணசித்திர நடிகராக தன்னை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக அவரது சொந்த (மகன் இழப்பு) சோகத்தின் பிரதிபலிப்பு இந்தக் கதையில் இருப்பதாலோ என்னவோ பல இடங்களில் நடித்துள்ளார் என்பதையும் தாண்டி வாழ்ந்துள்ளார். அதிலும் மற்ற குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்களிடம் மன்றாடும் காட்சியும் மனதை நெகிழ வைக்கிறது.
விவேக்கின் மனைவியாக, பாசமான அம்மாவாக, மற்ற குழந்தைகளையும் தனது குழந்தையாக அரவணைக்கும் தாயாக நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார் தேவயானி. அகாடமி நடத்துபவராக வரும் அழகம்பெருமாளின் அதிரடி பக்கா. முன்னரே சொன்னது போல் சிறுவர்களின் நடிப்பு, ஆக்ஷன் என்று அமர்க்களப்படுத்த, படத்தில் வில்லனாக வரும் ரிஷி, பழைய டெக்னிக்கான புறாவை தற்போது பயன்படுத்துவதும், பிறகு சிறுவர்களுடன் மோதும் போது ரியலாகவே அடிவாங்குவதும் கவனத்தை ஈர்க்கிறது.
இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரின் பாடல்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணையாக இருப்பது போல், கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இறுதிக் காட்சியில் வரும் ஆக்ஷன் காட்சியில் மிரட்டியிருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கில் மைக்கேலுக்கு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கலாம்.
மொத்தத்தில் நவீன உலகில் செல்போனில் பல்வேறு விளையாட்டுகளை ஆடி மழுங்கிப் போய் கொண்டிருக்கும் வாண்டுகளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தியேட்டருக்க்கு போய் பார்க்க வேண்டிய படம்’ எழுமின்’
மார்க் 3 / 5