January 31, 2023

அளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது!

கொரோனாவைக்காட்டிலும் இந்த கொடுமைகள். பரவலாக, நீங்கள் இதை காண்கிறீர்களா இல்லையா, ? திரும்ப திரும்ப மாற்றங்களை செய்யாமல் மக்கள் மனதில் எதிர்வினைகளை அதிகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு..ஆரம்பத்தில் ஒருவருக்கு கொரோனா என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என ஏரியாவையோ, அல்லது நாலைந்து தெருக்களையோ சேர்த்து சீல் வைத்தார்கள்.. அடுத்தகட்டமாக ஒரு தெருவை மட்டும் அடைத்தார்கள். இப்போது அக்கம்பக்கத்து வீட்டை மட்டும் ஷீட்டுகள் போட்டு அடைக்கிறார்கள்.

அடுத்தகட்டம், சம்மந்தப்பட்ட வீட்டை மட்டும் அடைக்கும் நிலை வரும் என்று எதிர் பார்க்கிறோம். அது அப்படியேபோய். ஏற்கனவே நாம் சொன்ன மாதிரி தனிமைப்படுத்தப் பட்டவர்கள் அல்லது தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, உஷராக இருங்கள் இனி உங்கள் பாடு. அக்கம்பக்க்த்தில் உள்ளவர்பாடு என்று சொல்லிவிட்டு போவார்கள் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யபடுத்துவதற்கில்லை..

அடுத்து சகட்டுமேனிக்கு லாக்டவுன்.. ஊர் ஊருக்கு தனி ரூல்ஸ்…மக்களிடம் சக மனுஷர் களையும் வெளியூர் ஆட்களையும் கடுமையான நோயாளிகள் என்று பார்க்கும் ஆரோக்கிய மற்ற மனநிலை பரவி வருகிறது.. அதாவது அவனுக்கும் நோய் தொற்று இல்லை, இவனுக்கும் தொற்று இல்லை. ஆனாலும் இருவரும் பரஸ்பரம் தொற்றாளர்களாக பார்த்து ஊருக்குள்ளேயே சேர்க்காமல் விரட்டி அடிக்கிறார்கள். இ-பாஸ் என்ற கொள்ளை.மக்களின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு வரும்வரை இதுபோன்ற மனநிலைக்கெல்லாம் முடிவே வராது..

உள்ளே இருங்கள் உள்ளே இருங்கள் என்று மட்டும் மாதக்கணக்கில் சொல்கிறது அரசு. அதாவது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி..இப்போது தெய்வமாக கொண்டாடப்படும் மருத்துவ உலகத்தை தாண்டி, இன்னுமொரு உலகம் இருக்கிறது. அது பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் உலகம்..தமிழகத்தில் கொரோனா தொற்று ஒரு நாளைக்கு நாலாயிரத்து சொச்சம் என்று ஓயாமல் புள்ளிவிவரம் வருகிறது. ஆனால் வருவாய் இல்லாமல், ஊருக்குள்ளேயே மன உளைச்சலால் முடங்கிக்கிடப்பவர்களின் எண்ணிக்கை தினமும் நாலு லட்சம் நாலு லட்சமாக கூடிக்கொண்டே இருக்கும் நோயால் ஒருவர் என்றால் மன உளைச்சலால் நூறு பேர் பாதிப்பு.. நூறு மடங்கு பாதிப்பு..

லாக் டவுன் ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகின்றன.. இன்னமும் ஊரடங்கு முழுஊரடங்கு, பார்ட்டைம் ஊரடங்கு, ஒரு நாள் ஊரடங்கு என்று டிசைன் டிசைனாக சொல்கிறது அரசு நிர்வாகம். அடிக்கடி தளர்வுகள் என்று யானைப்பசிக்கு சோளப்பொறியை போடுகிறார்கள். ஓட்டல்களை திறக்கலாம், சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து சாப்பிடலாம் என்றார்கள். திடீரென்று ஓட்டல்களில் பார்சல் மட்டுமே என்கிறார்கள். பல வாரங்கள் கழித்து ஊழியர்களை தேடிப்பிடித்து பெரும் செலவு செய்து ஓட்டல்களை திறந்தவர்கள் கதி அதோ கதிதான்.. இப்படித்தான் ஒவ்வொரு தொழிலும் வியாபாரமும் கடன் வாங்கி முதலீட்டால் நாசமாகிக்கொண்டிருக்கின்றன.

கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து விட்டால் அப்படியே வியாபாரம் கொட்டிவிடுமா? சினிமா தியேட்டர்கள் திருமண மண்டபங்கள், சுற்றுலா தளங்கள் போன்றவை இப்போதைக்கு அவசியமில்லாதவையாக இருக்கலாம் ஆனால் அவற்றை நம்பியிருந்த பல்வேறு அடிமட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? விசாரித்து பாருங்கள் ஒவ்வொருவரின் குடும்பமும் எந்த அளவில் இருக்கிறது என்று விசாரித்து பாருங்கள்.

மேற்படி தொழிலெல்லாம் பளிச்சென கண்ணுக்கு தெரிந்தவை.ஆனால் மறைமுக வேலை வாய்ப்பு வருவாய் என எண்ணற்ற துறைகள் இருக்கின்றன.வருவாய் இழந்தோரின் ஒரே வேண்டுகோள், ஏதாவது வேலை கொடுங்கள். வீட்டுக்கு ஏதாவது காசு எடுத்துக்கொண்டே போகவேண்டும் என்று பரிதாபமாக உருமாறிக்கொண்டிருக்கிறார்கள்..

ஒரு கடையில் ஒருவனுக்கு தொற்று என்றால், உடனே அவனுடன் பணிபுரியும் 500 பேரும் 15 நாளைக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார்கள்..இப்படி மொத்த மொத்தமாய் தனிமைப்படுத்தப்பட்ட கும்பல் பெருகிக்கொண்டே போனால், அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?

பிரேக் த செயின் என நோய் தொற்றை இணைப்பை துண்டிக்க லாக் டௌன் என்றார்கள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அளவுக்கு மீறிய அதே லாக்டௌன் கோடிக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை அறுக்கவில்லை.. அழித்துக்கொண்ருக்கிறது,, இப்போதைக்கு கூலி தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள். விரைவில், குந்தித்தின்றால் குன்றும் மாளும் என்ற அடிப்படையில் நடுத்தரம் அதற்கு அடுத்து பெரு முதலாளிகள்..

காப்பாற்றப்பட்டுவிட்டால் மட்டுமே மனுஷ உயிர் தொடர்ந்து வாழ்ந்துவிடமுடியாது. அது தொடர உணவு பணம் நடமாட்டம் போன்றவை மிகவும் அவசியம். எனவே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்ற தரப்பினரையும் கூட்டி நிதர்சனம் என்ன, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று அரசாங்கம் கேட்காவிட்டால், ஒரு சூழல் கண்டிப்பாக உருவாகும்..

‘’உங்களை கையெடுத்து கும்பிடறோம். போதும்டா சாமி, பசியில போய் சேராம கொஞ்ச நாளாவது நிம்மதியா சுதந்திரமா வாழ்ந்து, நோய் வந்தா நாங்களே செத்துககறோம். நாங்களே புதைச்சிக்கிறோம் எரிச்சிக்கறோம்’’ வறுமையில் இருந்து வளமைக்கு ஒருவன் வருவதற்கும் வளமையில் இருப்பவன் வறுமைக்கு போவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.

வாழ்ந்து கெட்டவன் என்பார்கள். இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான மக்கள் இந்த நிலையை எட்டிவிடுவார்களோ என்ற அச்சம்தான் அண்மைக்காலமாக அதிகமாய் மேலோங்குகிறது..

ஏழுமலை வெங்கடேசன்