September 27, 2021

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் துணை முதல்வரானார்!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் களை இழந்து காணப்பட்டது. கடந்த 8 மாதங்களாகவே அந்த நிலைதான் நீடித்தது. இன்று 2 அணிகளும் இணையும் நடவடிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதால் தலைமை கழகத்தில் மீண்டும் உற்சாகம் கரை புரண்டது.கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். அங்கு திரண்டுள்ள தொண்டர்களின் முகத்தில் பூரிப்பு காணப்பட்டது.

அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் அணிகள் இன்று காலை இரு அணி தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின்னர் பிற்பகல் 2 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதேபோல் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சிறிது நேரத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் 2.40 மணியளவில் தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் அணிகள் இணைந்ததை முறைப்படி அறிவித்தனர். ஒரே மேடையில் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் கூட்டத்தினரிடையே பேசிய ஓ.பன்னீர் செல்வம், “உலக அரசியலில் அரங்கில் அ.தி.முக சரித்திரத்தை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும் ஜெயலலிதாவின் ஒரு தாய் மக்கள்.எதிர்க்கும் கட்சிகளை எதிர்கொள்ள இந்த இணைப்பு வரலாற்று பாடமாக விளக்கும்.அணிகள் இணைப்புக்கு ஒத்துழைப்பு தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மனிதில் இருந்த பாரம் குறைந்து விட்டது.அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்”என்று அவர் கூறினார்.

அதன் பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ எம்.ஜிஆர் ஜெயலலிதா தங்களின் வாழ்நாளை முழுவதுமாக கட்சிக்காக அர்ப்பணித்தனர். உடனடியாக எடுத்த முடிவின் காரணமாக பல பேருக்கும் முறையாக தகவல் சென்றடையவில்லை. அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள் சார்பாக, அனைவரின் எண்ணத்தின்படி கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற, ஜெயலலிதாவின் கனவு நினைவாக வேண்டும் எண்ணத்தை நிறைவேற்றி உள்ளோம். அதிமுக மட்டும் தான் மக்களோட மக்களாக இருக்கும் இயக்கம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மீண்டும் ஒன்றுபடும் ஒரே கட்சி அதிமுக என்பதற்கு உதாரணம் இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. பிரிந்து விடுவார்கள், இடையில் புகுந்து விடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக இந்த இணைப்பு நிகழ்ந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிரிகளை வீழ்த்துவோம்”என்று அவர் பேசினார்.

மேலும் ஓபிஎஸ்-ஐ கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி இருப்பார் என்றும் அறிவித்தார். அத்துடன் மாலை 4.30 மணிக்கு துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவி ஏற்கிறார்கள். பன்னீர் செல்வத்திற்கு நிதி துறையும் வீட்டு வசதித்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மாஃபா . பாண்டியராஜனுக்கு தொல்லியல் துறையும், தமிழ் வளர்ச்சி துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜனை புதிய அமைச்சர்களாக பதவியேற்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.