March 31, 2023

ஃபேமிலி கோர்ட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குதுங்கோ!

குடும்பநல நீதிமன்றம் ஒன்றுக்கு சென்ற போது ஒரு பேஸ்புக் நண்பரை சந்தித்தேன். அவர் தன் கதையை சொன்னார். பரிதாபமாக இருந்தது. அவருடைய மனைவி அவரைத் தொடர்ந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தி இருக்கிறார். நான் இதை சொல்லும் போதே நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று தெரிந்தே சொல்கிறேன். சினிமாவில் ஆண்களைப் பெண்கள் அடிப்பதை பெரும் நகைச்சுவையாக்கி பார்த்து ரசிக்கிற சமூகமல்லவா நாம்! திலகவதியின் மருமகள் அவருடைய அப்பாவுடன் சேர்ந்து தன் கணவரை அடித்து சட்டையைப் பற்றி தரதரவென இழுத்துப் போகிற காணொளி வெளியான போது அதையும் ஒரு நகைச்சுவையாகக் கருதி கடந்து போன சமூகம் அல்லவா நாம்! இதுவே மனைவியை அடிக்கிற காணொளி வந்திருந்தால் அடுத்த நொடியே அவர் கைதாகி இருப்பார். சரி போகட்டும் இந்த சாடிஸ சமூகத்தில் சில ஆண்கள் இப்படித்தான் ரகசியமாக அடிவாங்கி வீட்டுக்குள்ளே அழுது அத்துன்பத்தை கழித்துக் கொள்கிறார்கள். இதைச் சொன்னால் ஒரு பெண்ணே அடிப்பதென்றால் அந்த ஆண் அவளை எந்தளவுக்கு துன்புறுத்தி இருப்பான் என்று ஒரு கும்பல் போலி விக்டிம் ஆயுதத்தை தூக்கிக் கொண்டு வரும் எனத் தெரிந்தே சொல்கிறேன்.

ஒரு கட்டத்தில் மனைவி குழந்தையை இவரிடம் விட்டுவிட்டு மற்றொரு மாநிலத்துக்கு (கேரளா) வேலை தேடி போய் விட்டார். நண்பர் இப்போது தன் மனைவி தன்னிடம் திரும்ப வந்து வாழ வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்தார். மனைவி பெரும்பாலான நீதிமன்ற ஹியரிங் அழைப்புகளை தவிர்த்து விட்டு மிக முக்கியமானவற்றுக்கு மட்டுமே ஆஜரானார். ஆனாலும் இப்படி தன்னை அலையடுவது மனைவியை கடும் கோபத்துக்கு ஆளாக்க அவர் ஒரு காரியம் பண்ணினார் – அவர் தற்போது வேலையில் செய்யும் அலுவலகம் உள்ள கேரளாவில் இருந்து தன் கணவன் தன்னை வீட்டில் வைத்து அடித்து துன்புறுத்தியதாக ஒரு வழக்கும், தனக்கு ஜீவனாம்சம் வேண்டுமெனக் கோரி மற்றொரு வழக்கும் தொடுத்தார்; அதில் புத்திசாலித்தனமாக கணவனின் பழைய வாடகை வீட்டு முகவரியைக் கொடுத்தார். இரண்டு வழக்குகளுக்கும் தனித்தனியாக சம்மன்கள் பழைய முகவரிக்குப் போய் திரும்பிட எதேச்சையாக ஒருநாள் வீட்டு உரிமையாளர் இதைப் பார்த்து நண்பருக்கு தகவல் சொல்ல அவர் வந்து தபால் நிலையத்துக்குப் போய் சம்மன்களைப் பார்த்து அதிர்ச்சியானார்.

ஒரு வழக்கில் நண்பர் ஆஜராகவில்லை என்பதால் நீதிமன்றம் எக்ஸ் பார்ட்டேவாக தீர்ப்பு வழங்கிவிட்டது – அவர் தன் மனைவிக்கு மாதம் 60,000 ரூ மாத ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். ஆனால் என் சம்பளத்தின் 80% ஜீவனாம்சமாகக் கொடுத்தால் நான் எப்படி வாழ்வது என நண்பர் கேட்கிறார். மேலும் மனைவி மென்பொருள் பொறியாளர். மாதம் லட்சக்கணக்கில் சம்பளம். அவர் குழந்தையையும் கணவரிடம் ஒப்படைத்து விட்டார். இதையெல்லாம் மறைத்து கணவனை ஓட விட வேண்டும் எனும் நோக்கத்திலும் பணத்தாசையிலும் இப்படி ஒரு வழக்குத் தொடுத்து ஜீவனாம்சத்தை கேட்டு வாங்கியிருக்கிறார். நண்பருக்கு என்ன பிரச்சினை என்றால் அவர் கேரளாவுக்கு சென்று அஜாராகி வழக்கை நடத்த முடியவில்லை என்பதால் நீதிமன்றம் அவரது தரப்பைக் கேட்காமலே, அவரது வங்கி பணவரத்து விபரங்களை சோதிக்காமலே, அவரது மனைவி முன்வைத்த பொய் சம்பளக் கணக்கை ஏற்றுக்கொண்டு அவருக்கு இப்படியான ஒரு பெரும் தொகையை விதித்து விட்டது.

இரண்டாவது வழக்கில் இரு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்க வாய்ப்புள்ளது எனத் தெரிய வந்தது. இப்போது நண்பர் கேரளாவில் ஒரு வக்கீலைத் தேடி அங்கு மாதம் இரு நாட்களும் சென்னை நீதிமன்றத்தில் இரு நாட்களும் வழக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறார். நான் அவரிடம் கேட்டேன், “நீங்கள் திருமணம் செய்து வாழ்ந்தது கேரளாவிலா? ஏனென்றால் சட்டப்படி எங்கு தம்பதியாக வாழ்ந்தீர்களோ அங்கே தானே வழக்கை நடத்த முடியும்?” அதற்கு நண்பர் கடந்த வருடம் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும், அதன்படி இப்போது பெண்கள் தாம் எந்த ஊரில் வசிக்கிறோமோ அந்த ஊரில் இருந்து கணவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்கலாம் என்று கூறினார்.

மேற்சொன்ன சட்டத்தில் என்ன ஓட்டை என்கிறீர்களா? மேற்சொன்ன சட்டத்திருத்தம் பயணம் செய்வதற்கான பணவசதியும் குடும்ப ஆதரவும் இல்லாத ஏழைப்பெண்களுக்கானது. ஆனால் இச்சட்டத்தை வகுத்த போது இதை வர்க்கரீதியாக வரையறுத்திருக்க வேண்டும். நீதித்துறை அதை செய்யாததாலே இப்போதை இதை மேல்மத்திய, மேற்தட்டுப் பெண்களே அதிகம் பயன்படுத்தி ஆண்களைப் பழிவாங்குகிறார்கள். இந்த ஓட்டையைத் தான் நண்பரின் மனைவி தான் பழிவாங்கும் பொருட்டு சாமர்த்தியமாக பயன்படுத்தி இருக்கிறார். இவரை இப்படி அலையவிட்டு மன்னிப்புக் கேட்க வைத்து ஒரு பெரிய தொகையைப் பிடுங்கி அவர் தொடுத்த வழக்கைத் திரும்பப் பெற்று சமரசம் பன்ணிக் கொள்ள வேண்டும். அவரை மண்டியிட வைப்பதற்கும் பழிவாங்குவதற்கும் சட்டத்தில் உள்ள பாரபட்சமான தன்மையை பயன்படுத்தி தன் பாட்டுக்கு பொய் வழக்கு போட்டிருக்கிறார். மாத சம்பளத்துக்கு வேலை செய்கிற ஒருவர் இப்படி இருவேறு மாநிலங்களில் உள்ள இரு நீதிமன்றங்களிலும் மாதம் சில நாட்கள் அலைந்து வக்கீல்களுக்கும் லட்சக்கணக்கில் கொடுக்க நேர்ந்தால் அவர் விரைவில் பிச்சைக்காரனாகி பைத்தியம் பிடித்து தெருவுக்கு வந்துவிடுவார்.

இப்போது அதைவிட பெரிய பிரச்சினை என்னவென்றால் 2005 ஆம் ஆண்டுக்கு கொண்டு வரப்பட்ட The Protection of Women from Domestic Violence Act, சட்டப்பிரிவின் படி நீங்கள் உங்கள் மனைவியை அடிக்கத்தான் வேண்டும் என்றில்லை. அவரை வார்த்தையால் காயப்படுத்தி இருந்தாலோ அவரது மனதளவில் துன்பப்படுத்தி இருந்தால் கூட அது “வன்முறை” தான். அதாவது உங்கள் மனைவி “என் கணவர் என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார் / என்னை கோபமாக முறைத்துப் பார்த்து பார்வையாலே அச்சுறுத்தினார்” என்று சொன்னால் கூட அது குற்றமே. சட்டம் என்ன சொல்கிறதென்றால் “verbal and emotional abuse” includes— insults, ridicule, humiliation, name calling and insults or ridicule. இதைப் படிக்கிற கணவர்களில் ஒருவர் கூட உங்கள் மனைவியை கோபத்தில் “நாசமா போனவளே” என்றோ வேறுவிதத்தில் திட்டியதோ அல்லது “ஏன் என்னை இப்படி சாகடிக்கிறே” என்று கேட்டதோ இல்லையா? அப்படிக் கேட்டிருந்தால் மேல்வரும் அவமதிப்பு, சிறுமைப்படுத்தல் ஆகிய பிரிவின் கீழ் அது குற்றமாகும்.

உங்கள் மனைவி நினைத்தால் – எந்த நேரடி சாட்சியமும் தேவையின்றியே – இப்போதே உங்களை குறைந்தது ஒரு வருடம் சிறையில் தள்ள முடியும். அதே நேரம் (செக்‌ஷன் 2 (a) மற்றும் 12இன் படி) உங்கள் மனைவி உங்களை தினமும் நாக்கைப் பிடுங்குகிற அளவுக்குத் திட்டினாலும் கெட்டவார்த்தையால் அர்ச்சித்தாலும், கொதிக்கிற எண்ணெய்யை உங்கள் மீது கொட்டினாலும் நீங்கள் அவருக்கு எதிராக குடும்ப வன்முறை வழக்குத் தொடுக்க முடியாது. (பொதுவான வன்முறைக் குற்றமாகவே அதைக் கருத முடியும்.) குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் ஒரே பிரச்சினைதான் – அது பாலின பாகுபாட்டுடன் உள்ளது. அது ஒரு குற்றத்தை நிரூபிக்க சான்றுகளை கோருவதில்லை. மனைவியின் வாக்கே போதுமானது.

அதனாலே இன்று ஆணைப் பழிவாங்குதற்கோ கட்டப்பஞ்சாயத்து பண்ணி பணம் பறிப்பதற்கோ இச்சட்டப்பிரிவுகள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு துணை போவதுடன் எல்லா தில்லுமுல்லுகளையும் பண்ணுவதற்கு வக்கீல்கள் அறிவுரையும் வழங்குகிறார்கள் என்பதே அவலத்திலும் பேரவலம்!

அபிலாஷ் சந்திரன்