June 21, 2021

சுழலும் சிவப்பு விளக்கை நீக்கியதன் மூலம் எல்லோரும் விஐபி ஆயாச்சு!- மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமை ’மனதின் குரல்’ என்ற தலைப்பில் ரேடியோவில் உரை நிகழ்த்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் பேசிய போது, “கடந்த மாதம் பேசும் போது உணவு வீணாவதை தடுக்க வலியுறுத்தினேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் அதற்கு மக்களிடம் இருந்து நிறைய ஆலோசனைகள் வந்துள்ளன, அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். தற்போது கோடை காலத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இக்கால கட்டத்தில் பறவைகளின் தாகம் தீர்க்க குழந்தைகள் குவளைகளில் தண்ணீர் வைக்கின்றனர். அது பாராட்டுக்குரியது.

modi apr 30

இந்த கோடையில் பலர் நமது வீட்டிற்கு வருவார்கள். குறிப்பாக தபால்காரர்கள், பால்காரர்கள், காய்கறி விற்பவர்கள் உள்ளிட்டோருக்கு குடிக்க தண்ணீர் தந்து உபசரியுங்கள். தற்போது தேர்வுகள் முடிந்து விடு முறையை கழிக்க இளைஞர்கள் மத்தியில் பல்வேறு திட்டங்கள் இருக்கும்.

அவர்களிடம் நண்பனாக நினைத்து பேச விரும்புகிறேன். எனது இளம் நண்பர்களே நீங்கள் உங்கள் விடுமுறை நாட்களை புது அனுபவங்கள் மற்றும் புதிய திறமைகள் மற்றும் புதிய இடங்களில் சென்று கொண்டாடி மகிழுங்கள். பணக்காரர் மற்றும் ஏழை பாகு பாட்டை போக்க வேண்டும். அதற்கு ஏழை மற்றும் பணக்கார குழந்தைகள் ஒன்றாக பேட் மற்றும் பந்துகளை எடுத்து சென்று மைதானங்களில் விளையாடுங்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டின் மிகப் பெரிய பலமாகும். நமது எண்ணங்களில் இருந்து வெளியேறி வேறு மொழியை கற்க முயற்சி செய்யுங்கள். நீச்சல் பழக மற்றும் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கு சென்று 3 முதல் 4 நாட்கள் தங்கியிருந்து பலவற்றை கற்றுக் கொள்ளுங்கள். புதிய இந்தியா உருவாகுவதை பார்க்க முடிகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறி வருகிறோம். டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை நடக்கிறது. பண பரிவர்த்தனைக்கு பலர் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.

நமது நாட்டில் முக்கிய பிரமுகர் (வி.ஐ.பி.) என்ற விரும்பத்தகாத சூழல் உருவாகியுள்ளது. இந்த கலாசாரம் நமது மனங்களில் இருந்து வெளியேறினால் நல்லது. எனவே தான் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப் பட்டன. இதன் மூலம் சில முக்கிய பிரமுகர்களின் மனதில் இருந்து தான் ஒரு வி.ஐ.பி. என்ற எண்ணம் அகற்றப்பட்டிருக்கும் என உறுதியாக நம்பலாம்.
புது இந்தியாவில் வி.ஐ.பி. மட்டும் முக்கியமானவரல்ல. அனைவரும் முக்கியமானவர்களே. மிகப்பெரிய சமுதாயம் மற்றும் சமூக சமத்துவத்தை உருவாக்க பாடுபட்ட ஸ்ரீராமானுஜர் ஆச்சாரியாவின் 1000-வது பிறந்த நாளை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மே 1-ந்தேதி தொழிலாளர் தினம் கொண்டாடும் வேளையில் உழைப்பாளர்களின் நல வாழ்வில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பங்கு நினைவு கூறத்தக்கது. இலங்கையில் நடைபெறும் விசாக் தின விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அங்கு பவுத்த மத அறிஞர்களுடன் பங்கேற்கிறேன். மே 5-ந்தேதி இந்தியா தெற்காசிய செயற்கை கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது தெற்காசிய நாடுகள் ஒற்றுமைக்கு இந்தியா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகும்”என்று பிரதமர் மோடி பேசினார்.