ஜம்மு காஷ்மீருக்கு விசிட் அடித்த ஐரோப்பிய யூனியன் எம்.பி,க்கள்!
பங்காளி பாகிஸ்தான் முனங்கலை கண்டு கொள்ளாமல் காஷ்மீர் நிலவரத்தை நேரில் பார்த்து அறிந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள 23 ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜம்மு காஷ்மீர் வந்தடைந்தனர். அதை அடுத்து வெளிநாட்டு எம்.பிக்களின் வருகை குறித்து பிராந்திய அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
இன்று வந்த ஃபாரின் எம்.பிக்கள் அனைவரும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தரும் முதல் வெளிநாட்டு பிரதிநிதிகளாகும். இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்த 27 ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
அதன் பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எம்.பிக்களுக்கு மதிய விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜம்மு காஷ்மீரின் சில அரசியல் தலைவர்கள், ஊரக வளர்ச்சி கவுன்சில் தலைவர்கள், சில முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.
அவர்களிடம் ஜம்மு காஷ்மீர் நிலவரம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய எம்.பிக்கள் இன்று ஜம்மு காஷ்மீர் வந்தடைந்தனர். நேற்று இந்தியாவுக்கு வந்த 27 எம்.பிக்களில் 23 பேர் மட்டுமே இன்று ஜம்மு காஷ்மீர் வந்துள்ளனர். மீதி 4 பேர் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திருப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரிகள் எம்.பிக்களிடம் நிலைமையை எடுத்துரைப்பார்கள். மேலும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்களிடம் எம்.பிக்கள் கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐரோப்பிய எம்.பிக்கள் காஷ்மீருக்கு வந்துள்ள நிலையில் தலைநகர் ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயம்டைந்தனர்.
இந்த மோதல் காரணமாக ஸ்ரீநகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கமாக மதியம் வரை திறக்கப்படும் கடைகள் கூட இன்று நடந்த போராட்டம் மற்றும் வன்முறைகள் காரணமாக திறக்கப்படவில்லை.
அரசியல் கட்சிகள் விமர்சனம்
ஜம்மு காஷ்மீருக்கு ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் அழைத்து வரப்பட்டுள்ளதற்கு பிராந்திய அரசியல் கட்சிகளான தேசிய மாநாடு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) கடும் விமர்சனம் செய்துள்ளன. மேலும் வருகை தந்துள்ள எம்.பிக்கள் அனைவரும் வலதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதும் விவாத பொருளாகியுள்ளது.