January 31, 2023

இராத்திரி நேர இரயிலு சுற்றுச்சூழலுக்கு நல்லதா? ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

உலகம் முழுக்க கொரோனா அச்சம் பரவிப் பொதுப் போக்கு வரத்து அடியோடு நின்று மக்கள் வீட்டை விட்டு வெளியே போவது எனும் பழக்கத்தையே மறக்கும்படியான நிலையில் மீண்டும் மெல்ல பொதுப் போக்குவரத்து குறித்து அறிவிப்புகள் வெளிவருகின்றன. அப்படி வந்துள்ள ஒரு அறிவிப்பு நான்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து இராத்திரி இரயில் ஓட்டப் போவதாக வந்து உள்ளதாகும். அதென்ன இராத்திர இரயிலு? இரயிலுனாலே இராத்திரிதானேன்னு நீங்க கேக்குறது புரியுது! நம்மூரில் சகஜம். ஆனால் எல்லா நாடுகளிலும் சகஜமாக இருக்குமா? ஐரோப்பாவில் விமானப் பயணமே சிறந்தது. ஆனால் சுற்றுச்சூ ழல் பிரச்சினைகளால் விமானப் பயணத்தைத் தவிர்ப்போம் என்ற கோஷம் அதிகரித்த சமயம் கொரோனாவும் வந்துச் சேர்ந்தது. கொரோனா ஏன் வந்தது? அதற்கும் சுற்றுச்சூழலுக்கும் தொடர்புண்டா என்றால் உண்டுதானே?

மரங்களை வெட்டுவதால் அதில் வாழும் வௌவ்வால்கள் வேறு இடம் தேடிச் செல்லும் போது பிராணிகளின் கொட்டகைகளே அவைத் தங்கும் இடங்களாக மாறுகின்றன. அப்படித் தங்கும் போது ஏதேனும் விலங்குகளை வௌவ்வால்கள் கடிக்க அந்தப் பிராணிகள் மனிதர்கள் உண்ணப் போக கொரோனா வருகிறது. ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்றால் சாலைகள் அமைக்க, தொழிற்சாலைகள் கட்ட, வீடுகள் கட்ட இப்படி வன அழிப்பு நடைபெறுவதால் கொரோனா போன்ற கொடிய நோய்களின் வருகையும் கூடும். எனவே வன அழிப்புக் கூடாது என்கின்றனர். சரி, இராத்திரி இரயிலு எப்படி கொரோனா தடுப்பிற்கும் சூழல் கேட்டிற்கும் உதவும்?

இதற்கு ஐரோப்பிய பதின்வயது சூழல் போராளி கிரேட்டா தன்பர்க் விடையளிக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்பையே விமர்சித்த கிரேட்டா தனது நாட்டிலிருந்து ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகருக்கு 65 மணி நேரம் இரயில் பயணம் செய்து அங்கொரு மாநாட்டில் கலந்துக் கொண்டார். ஏன்? விமானப் பயணம் அதிகமான பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டு பூமிக்கு கெடுதல் விளைவிக்கின்றன என்பதால் இரயில் பயணத்தை மக்கள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கிரேட்டா.

நான்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து வியன்னா முதல் பாரிஸ் வரையிலும், வியன்னா முதல் ம்யூனிச் வரையிலும் அது போலவே பெர்லின், பிரஸ்ஸல்ஸ், ரோம் மற்றும் ஆம்ஸ்டிரடாம் போன்ற நகரங்களை இணைக்கும் காண்டினெண்டல் நெட்வொர்க் ஆஃப் நைட் டிரயின்ஸ்சை மீண்டும் துவங்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த நாடுகளின் ரயில்வே அமைப்புகள் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. முன்பெல்லாம் அதிகச் செலவு பிடிக்கும் இது போன்ற இராத்திரி இரயிலு இப்போது கட்டணம் குறைந்து கிடைப்பதற்கு ஜெர்மனியின் டாய்ச்ச பான் காரணமாகவுள்ளது. தற்போது நாடுகளுக்கு இடையிலான இணக்கத்தால் இராத்திரி இரயிலு குறைந்த செலவில் நிகழப்போகிறதாம். மேலும் இந்தாண்டை இரயில் ஆண்டாகவும் அனுசரிக்கிறார்களாம்.

ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 32 நாடுகளைக் கொண்டது. இதன் பரப்பு ஏறக்குறைய இந்தியாவின் பரப்புதான். இந்தியாவில் இரயில் சேவைகள் பிரபலம் என்றாலும் குறைந்தச் செலவில் நீண்டதூர பயணங்கள் தற்போதுதான் அறிமுகமாகின்றன. கூடவே சொகுசு இரயில்களுக்கான முன்னுரிமை சராசரி வசதி படைத்தோரை எரிச்சலுக்கு உள்ளாக்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த இரயில் பயணத்தை அரசு குறைந்தச் செலவில் அதிகம் கிடைக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஆசை.