February 6, 2023

எதற்கும் துணிந்தவன் -விமர்சனம்!

ம் நாட்டில் பல தரப்பட்டோரின் இயல்பு, உரையாடல், நடை, உடை, பாவனைகள் அவ்வளவு ஏன் அரசியல் உள்பட சகலற்றையும் திரைப்படங்கள்தான் தீர்மானித்தன. தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக திரைப்படம் என்பது, இயக்குநரின் அல்லது நடிகரின் ஊடகம்தான். ஆனாலும் கூட அது மக்களைத்தான் பிரதிபலிக்கிறது,  பிரதிநிதித்துவப் படுத்துகிறது. சினிமா என்பது ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கிறது. அந்த வகையில் பொழுது போக்கு ஊடகமான சினிமா மூலம் சமூக பிரச்னைகளை வெளிக்காட்டி அதுப் பற்றி அலசுவதும் நம்மில் பலருக்கு வாடிக்கைதான் . அந்த வகையில் தற்போதையை காலக்கட்டத்துக்கு பொருத்தமான ஒரு சமாச்சாரத்தை கையில் எடுத்து அதை இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவைகளும் சேர்த்து ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற டைட்டிலில் ஒரு படைப்பை வழங்கி இருக்கிறார்கள் சூர்யா & பாண்டிராஜ் கூட்டணி.

கதை என்னவென்றால் அட்வகேட் தொழில் பார்த்துக் கொண்டு தன் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சூர்யா சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஒருவராகவும் இருந்து வருகிறார். சகலரும் பிடித்த இந்த சூர்யா ஊருக்கும் பக்கத்து ஊரில் இருக்கும் வினய் (வில்லன்) ஊருக்கும் இடையே ஒரு பெண் தற்கொலையால் பெரும் பிளவு ஏற்பட்டு சூர்யா ஊர் பெண்களை வினய் ஊர்காரங்களுக்கும் இந்த ஊர் பெண்களை அந்த ஊர்காரங்களுக்கும் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று முடிவு செய்து முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இச்சூழ்நிலையில், வில்லனாகப்பட்ட வினய், சூர்யா ஊரில் உள்ள இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்து ஆபாச படம் எடுப்பது போன்ற மோசமான காரியங்களை செய்வதால் அடுத்தடுத்து இளம் பெண்கள் தற்கொலை அல்லது மாண்டு போகிறார்கள். அதன் காரணத்தை அறிய முற்படும் போது சூர்யாவின் குடும்பமும் வில்லன் வினய் பிடியில் சிக்கி கொள்கிறது.. அதன் பின் நடப்பதுதான் எதற்கும் துணிந்தவன் படக் கதை. தமிழகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய பொள்ளாச்சி ஸ்மார்ட் போனால் ஏற்பட்ட சீரழிவை முன்னிலைப்படுத்த முயன்று இருக்கிறார் இயக்குநர். ஆனால் அசம்பவத்தில் ‘அண்ணா அடிக்காதீங்க’ -என்று ஒலித்த ஒன்றை அலறல் குரலில் ஏற்படுத்திய அதிர்வை இப்படம் கொடுக்கவில்லை என்றாலும் கோடிட்டுக் காட்டி விட்டார்கள்.  .

நாயகன் சூர்யா சில பட இடைவெளிக்குப் பின்னர் முன்னரே சொன்னது போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக நடித்து வழக்கம் போல ஸ்கோர் செய்திருக்கிறார் . ஜெய் பீம் படத்தை போன்று இதிலும் (கண்ணபிரான் என்ற பெயர் கொண்ட) வக்கீல் ரோல் என்றாலும் கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமில்லை. ஆனால் ‘நான் கோட்டு போட்டா ஜட்ஜ் வேற, வேட்டிய கட்டுனா, நான்தான்டா ஜட்ஜ்’ என்று சூர்யா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும், அதிரடியான சண்டைக் காட்சிகளையும் கண்டு தியேட்டர் அதிர்கிறது. கதாநாயகி பிரியங்கா மோகனின் மெச்சூர்டான நடிப்பால் கவர்கிறார்.

வில்லனாக வரும் வினய் பாஸ் கூட வாங்கவில்லை. கொஞ்சம் நடிக்க ட்ரை பண்ணுங்க வினய் .. சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் தங்களின் பங்களிப்பை நிறைவாக வெளிப்படுத்தியுள்ளார்கள். சூரி & புகழ் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். ரதன்வேலும் கேமரா ஒர்க் பிரமிக்க வைக்கிறது. இமான் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக காட்டி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் தீம் மியூசிக் சூப்பர்.

உள்ளங்கைக்கு வந்து விட்ட செல்போனால் விளையும் சில தவறான நிஜ சம்பவங்களைக் கோர்வையாக்கி காட்ட முயன்றிருக்கும் பாண்டிராஜ். வசனங்கள் – குறிப்பாக . “ஆண் பிள்ளைகளை அழக்கூடாது எனச் சொல்லி வளர்ப்பதைவிட, பெண்களை அழ வைக்கக்கூடாது என சொல்லி வளர்க்க வேண்டும்”, “ஒரு வீடியோ வெளியானால் அதற்காக வெட்கப்படவேண்டியது அந்த வீடியோவில் இருப்பவர்கள் அல்ல, அதை எடுத்தவர்கள்” ” பெற்றோர்கள் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது பிள்ளைகளுக்கு இது சரி இது தவறு என்று கற்றுக்கொடுப்பதே நல்ல வளர்ப்புக்கு அடையாளம்” போன்றவைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியவை.

இப்படி பல பாசிட்டிவ் இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாகச் சொல்லாமல் விட்டிருப்பதுதான் சோகம்.

ஆனாலும் டிவி சேனல்களில் மூழ்கிப் போயிருக்கும் குடும்பத்தினர் கூட்டமாக தியேட்டருக்கும் போய் பார்க்கத் தகுந்த படமிது

மார்க்   3.25 / 5