July 31, 2021

அன்றாடப் பட்டியலில் வறுமை இல்லையே!

கடந்த 25 ஆண்டுகளில் உலக நாடுகளின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பயனளித்த வகையில் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. முதல் முறையாக இனி, அதாவது ஒரு தலமுறைக்குப் பிறகு, அந்த நிலை மாறி, தாளமுடியாத வறுமைக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்லும் என்று உலக வங்கியின் மதிப்பீடு எச்சரிக்கிறது.

உள்நாட்டுக் கலவரங்கள், இனக்குழுச் சண்டைகள், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உலகளாவிய தாக்குதலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் கூடுதலாக 11.5 கோடி மக்கள் வரை வறுமையில் கடுமையாக வாடும் நிலைக்கு உள்ளாவார்கள் என்றும் உலக வங்கி கூறுகிறது.

உலகெங்கிலும் அன்றாடம் வறுமையில் போராடும் மக்களில் 28 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பதாக 2019 மனித வளர்ச்சிக் குறியீட்டெண் அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிதி ஆயோக் அமைப்பின் புள்ளிவிவரப்படியே, இந்திய ஏழைகளின் கணக்கு 22 கோடி (மாறுபட்ட புள்ளிவிவரங்களின்படி 27 கோடி) என அறியமுடிகிறது. இது கடைசியாக நடந்த ஏழை மக்கள் கணக்கீட்டின்படி. அடுத்த கணக்கீடு 2023-ம் ஆண்டுதான் நடக்குமாம்.

முடிவின்றி தொடரும் வறுமை குறித்து ஆய்வு செய்யும் பொருளாதார நிபுணர்கள் குழுவின் மதிப்பீடு சொல்கிறது: இந்தியாவில் 11 கோடி மக்களுக்கும் மேலானோர் எப்போதும் வறுமையில் வாடுபவர்களாகவே இருப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவர்கள் வறுமையைக் கடத்திவிட்டுச் செல்வார்கள்.

ஐந்து இந்தியர்களில் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் தத்தளிப்பதாகவும் அக்குழுவின் ஆய்வு கூறுகிறது. இந்தியாவின் உச்ச வரிசையிலுள்ள 10சதவிகித பெரும் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் 80 சதவிகித தேசிய வளம் சிக்கியிருப்பதாக ஆக்ஸ்ஃபோம் சர்வதேச அமைப்பின் புள்ளிவிவரம் கூறுகிறது. இன்னும் குறிப்பாக, முதல் வரிசையிலுள்ள1 சதவிகித செல்வந்தர்கள் நாட்டின் 58 சதவிகித செல்வத்தின் சொந்தக்காரர்கள் என்று சுட்டிக்காட்டுகிறது.
ஐ.எல்.ஓ. என்று அறியப்படும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால், இந்தியாவில் முறைசாரா மற்றும் உதிரித் தொழில் சார்ந்த 40 கோடிப் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று மதிப்பிடுகிறது.

பொய், முழுப் பொய், புள்ளிவிவரம் என்று பொருளாதார வட்டத்தில் ஒரு கூற்று உண்டு. அப்படியெனில், மேற்கண்ட புள்ளிவிவரங்களெல்லாம் பொய் என்று பொருளலல்ல. உண்மை நிலவரம், இதற்கு மேல் இருக்கலாம் அல்லது குறைவாக இருக்கலாம், ஆனால் துல்லியாக அதுவே இருக்க சாத்தியம் குறைவு என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஏற்கெனவே உள்ளவற்றுடன் கூடுதலாகப் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. பிரமிக்கவைக்கும் தாவிப் பாய்ச்சல்களை நிகழ்த்தும் மனித குலம், இன்னொரு பக்கம் அன்றாடம் பட்டினியால் மடிவோரின் எண்ணிக்கையை குறைக்கமுடியாமல் தவிக்கிறது.

வறுமை என்பது வன்முறையின் மோசமான வடிவம் என்பது காந்தியடிகளின் கூற்று. வன்முறை இன்றும் உலகின் பெரும் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் வறுமை…? நமது அன்றாடப் பொதுப் பட்டியலில் அது இல்லை.

சிந்தனையின் வறுமை.
*****
இன்று (அக்.17) உலக வறுமை ஒழிப்பு நாள்.

இளைய பெருமாள்