October 18, 2021

அவமான வார்த்தைகளை ஆடையாக்கி புன்னகைக்கும் இங்கிலாந்து லேடி!

முன்னொரு காலத்தில் – அதாவது கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் சில கோயிலுக்கு வரும் பெண்கள் கண்ணாடி இழை நூல் புடவையைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள். இது மாதிரியான புடவை அங்கங்களையெல்லாம் காட்டுகிறது. இப்படியெல்லாம் அசிங்கமா வரலாமா?,இது தமிழ் பண்பாடுக்கு எதிரானதில்லையா?, இந்தியக் கலாசாரத்திற்கு புறம்பானது அல்லவா, ஏன் இப்படி பெண்கள் இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது. அலட்டிக் கொள்ளப்பட்டது. அபத்தம் என்று முடிவாயிற்று. வேறென்ன செய்வது கலிகாலம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தமிழர் நாகரிகத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார்கள்.

women ocy 21

அந்தக் கண்ணாடித் துணி என்பது இப்போது பல பெண்களாலும் அணியப்படுகின்றன சிந்தடிக் புடவைகள். நைலான், நைலக்சின் வேறு விஷயங்கள். இன்று கோட்டாவும் டஸ்சரும் வேறு சில புடவைகளும் பெண்களைக் கவர்ச்சிகரமாகத் தான் காட்டுகின்றன. அவற்றை யாரும் குறை சொல்வதில்லை. அவை நல்ல உடைதானே. நாகரிகமான உடைதானே என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. டீ ஷர்ட்டும், அரைபேண்டும் மிகக் கேவலமாக வர்ணிக்கப்பட்டன, பிதுங்கி வழிகிறது என்றெல்லாம் பத்திரிகைகள் சொல்லி ஓய்ந்து போனது.

இந்நிலையில் தி கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த 31 வயது பிசினஸ் உமன் ஜோஜோ. மிக புதுமையான உடை ஒன்றை டிசைன் செய்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். ஆம்.. தன் உடையில் தான் குழந்தையாக இருந்த போது தொடங்கி இப்போது வரைக்கும் தன்னோட உடல் அங்கங்கள் எப்படியெல்லாம் மற்றவர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது என்பதை நினைவு கூறும் வகையில், எக்கச்சக்கமான் வார்த்தைகளை வைத்தே அந்த உடையை டிசைன் செய்திருக்கிறார்.

கொஞ்சம் அதிகப்படியான் மோசமான வார்த்தைகளும், ரொம்ப அரிதான சில பாராட்டு வார்த்தைகளுமாக கலர்ஃபுல்லாக இருக்கிறது அந்த உடை. அந்த உடைப் பற்றி கேட்ட போது “என் ஃப்ரண்டோட ஒரு பார்ட்டிக்கும் நான் 11 வயசிருக்கும் போது போயிருந்தேன். அன்னிக்கு எனக்கு ரொம்ப விரும்பும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டிருந்தேன். ஆனா அங்கே என் ஃப்ரெண்ட் என்னைப் பார்த்துட்டு, ‘உன்னோட கை மாமிச மலை மாதிரி அவ்ளோ குண்டா இருக்கு’னு சொன்னா. உடனடியா ஓடிப் போய் கண்ணாடியில என் கைகளைப் பார்த்தேன். கூடவேஇனிமே இந்த டாப்ஸை போடக்கூடாதுனு முடிவு பண்ணினேன். அது மாதிரி என்னோட மார்பகங்கள் ரொம்பப் பெரிசா இருக்கிறதாகவும் அதை எனக்கான பாராட்டாவும் சொன்னான் ஒருத்தன். வேறொரு சமயத்தில் அதையே எனக்கான அடையாளமா வச்சு அவன் கூப்பிட்டதை என்னாலே இன்னுமும் மறக்க முடியலை.

இன்னொரு முறை வேறொரு பிளேஸ்…. முன்னப் பின்ன தெரியாத ஒரு ஆள் நான் சிரிச்சதை பார்த்துட்டு, ஹேய்.. உன்னோட பல் கொஞ்சம் பயங்கரமா இருக்குதுன்னு கமெண்ட் அடிச்சான். அன்னிலேருந்து பல் தெரியற மாதிரி சிரிக்கிறதையே நிப்பாட்டிட்டேன். இன்னும் இப்படி எக்கச்சக்கமான மோசமான நினைவுகள்…. இதெல்லாம் எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்கு.

உடல் சார்ந்து பெண்ணை இழிவுபடுத்துவதை பெரும்பாலான சமூகம் ஒரு குற்ற நடவடிக்கையாகவே நினைப்பதில்லை. வரலாற்றுக் காலந்தொட்டு யுத்தங்களிலும், யுத்தங்களின் வெற்றி தோல்விகளிலும் பெண்ணின் உடலே கருவியாக்கப் பட்டிருக்கிறதா கேள்விப் பட்டிருக்கேன். அது சமூகவியல் போல் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து வந்திருக்கிறது. இன்றைக்கும் யுத்தங்களில் ஆண் உடல் காயப்படுத்தப்படுகிறது. அல்லது கொல்லப்படுகிறது. ஆனால் பெண் உடல் பலவந்த உறவுக்கு உள்ளாக்கப்படுகிறது. கொல்வதைக் காட்டிலும் பலாத்காரம் அதிகபட்ச தண்டனை என்பதாலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.

இன்றைக்கும் ஒரு பெண் உடல் உண்டாக்கும் நுட்பமான அங்க அசைவுகள் தொடங்கி அவளுடைய நடை, உடை பாவனைகள் வரை அனைத்திற்கும் எல்லா நாட்டிலும் டிக்ஸ்னரி உருவாகி வைத்திருக்கிறது. கைகளைச் சுதந்திரமா வீசி நடக்கக் கூடாது, தலை நிமிர்ந்து நடக்கப் படாது, புன்னகைக்கும் போது எத்தனை செ. மீ. அளவிற்கு உதடு பிரியலாம். எங்கு சிரிக்கலாம். எங்கே சிரிக்கவே கூடாது, யார் யாரிடம் சிரிக்கலாம் எல்லாவற்றிற்கும் கலைக்களஞ்சியம் ஒன்று ரெடியா இருக்குது.

அப்போது தொடங்கி இப்போ வரைக்கும் ஆடைகள் வசதிக்கானவை என்பது ஆண்களுக்கு மட்டும்தான். எங்கெங்கு எவ்வித ஆடையணிய வேண்டும். ஆடையில் ஆணின் அந்தஸ்து, குடும்ப கெளரவம், மதத்தின் கட்டுப்பாடு எல்லாம் நூலாக இழைக்கப்பட்டிருக்க வேண்டும்..ஆனா பெண்ணுக்குரிய ஏற்பாடும், பார்வையுமே வேறு.

ஒரு நல்ல பாராட்டுங்கிறது ஒருத்தரோட நாளையே சந்தோஷமாக்கும். அப்படி இருக்கிறபோது அடுத்தவங்களோட தோற்றத்தைப் பார்த்து எதுக்காக தப்பான, மோசமான கமெண்ட்டுகளை கேஷூவலா சொல்றாங்கண்ணு தெரியலை.. ஆனாலும் என் பாடி ஷேப்பை பத்தி ஓவொருத்தர் அடிச்ச நாதாரித்தனமான கமெண்ட்டுகளை நான் பொருட்படுத்தினதே இல்லைதான். அதே சமயம் அவை என்னைப் பத்தின என்னோட பார்வையை மாத்திக்க உதவியிருக்குங்கறதை சொல்லியே ஆகணும்.

நாம எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல சிறந்தவங்கதான். என் தோள்பட்டைகள் அகலமா இருக்குங்கிறதையும், பல் பெரிசா இருக்குங்கிறதையும், கையும் காலும் எலும்பு மாதிரி தெரியுதுங்கிறதையும் தவிர்த்துட்டு, வாழ்க்கையை ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கு. அடுத்தவங்க என்ன சொல்வாங்களோங்கிற விமர்சனங்களை ஒதுக்கிட்டு, நம்ம உடம்பை, அது எப்படி இருந்தாலும் கொண்டாடற மனநிலை ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப முக்கியம்.

இப்படியொரு உடையை டிசைன் பண்றதுனு முடிவு பண்ணினதும், சின்ன வயசுலேருந்து நான் சந்திச்ச அத்தனை கிண்டல்களையும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். இது சோகம் என்னன்னா, ஒரு விமர்சனம்கூட எனக்கு மறக்கலை. என் உடம்போட ஒவ்வொரு பகுதியைப் பத்தியும் யார், என்ன கிண்டல் பண்ணினாங்கன்றது பசுமையா மனசுல பதிஞ்சிருந்தது. இது யார் மனசையும் புண்படுத்தறதுக்கான முயற்சி இல்லை. யாரும் இதுக்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கணும்ங்கிறதும் என் எண்ணமில்லை. நம்மைப் பத்தியும் அடுத்தவங்களைப் பத்தியும் எப்படியெல்லாம் மோசமா விமர்சனம் பண்ணிட்டிருக்கோம்னு யோசிக்க வைக்கிறதுக்கான முயற்சிதான் இது.

உங்களைக் கடந்து போகும் ஓவ்வொரு மனுஷங்களையும் பார்த்து, ‘இவங்களுக்கென்ன…. கவலைகளே இல்லாத ஜென்மம்னு நினைப்பீங்க. ஆனா கவலைகளோ பிரச்னைகளோ இல்லாத மனிதர்களே இல்லை. முத்தாய்ப்பா இந்த டிரஸ்ஸில் இப்ப நான் எழுதியிருக்கிறது மாதிரி ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வேதனைகளை, அவமான வார்த்தைகளை எழுதி உடையிலே பிரிண்ட் பண்ணிகிட்டு நடமாட முடியாது. ஆனாலும் அவங்களிடமுமிது மாதிரியான வலி கொடுத்த வார்த்தைகள் இருக்கும் என்பதை புரிந்து அடுத்தவங்கக்கிட்ட அன்பா பேச முயற்சி செய்யும் உத்திதான் இது…” என்று பல் தெரியாமல் சிரித்தப்ப்படி சொல்கிறார் ஜோஜோ.