September 25, 2021

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – திரை விமர்சனம் = சல்யூட்!

நம்மில் பலருக்கும் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு, பண்டிகைகள், பதவி உயர்வு எனப் பல காரணங்களை முன்னிட்டும் பிரியமானவர்களுடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது காலம் காலமாக நடைபெறுகிறது. அது வெஜ் விருந்தாக இருந்தால் சாதம், பொரியல், காரகறி, அவியல், சாம்பார்,ரசம், பருப்பு,நெய், வத்தல் குழம்பு, மோர் குழம்பு, பாயாசம், அப்பளம், மோர், ஊறுகாய் என்றும் நான் வெஜ் என்றால் மினிமம் 10 ஐட்டங்களாவது பரிமாறி அசத்துவார்களே.. அதே டைப்பில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற டைட்டிலில் ஒரு படத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்திய பார்டரில் பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றை லட்சியம் கொண்ட ராணுவவீரன். ஆனால் இந்தக் குணமே அவருக்கு எதிராகத் திரும்பி நண்பர்கள், காதலியை இழப்பதோடு, தான் நேசிக்கும் ராணுவ பணியையும் இழக்க நேரிடுகிறது. இதையொரு மன நோயாக கருதும் ராணுவ உயர் அதிகாரி, மனநல மருத்துவரான அர்ஜுனிடம் சான்றிதழ் பெற்று வரும்படி உத்தரவிடுகிறார். அந்த தி கிரேட் சைக்கிரியாரிஸ்ட்-தான் இந்த நாயகனின் அப்பா..

வழக்கம் போல் அவரிடமும் தனது ஆவேசத்தைக் காட்டுகிறார். அதையடுத்து ’21 நாட்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து காட்டினால், சான்றிதழ் தருவதாக’ சொல்கிறார் அர்ஜுன். அதன்படி, தனது கோபத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, அமைதியான வாழ்க்கை வாழ முயற்சிக்கும் போது, தாதா சரத்குமார் ரூபத்தில் வருகிறது தொல்லை. கண் முன்னே பல அநியாயங்கள் நடக்க, ராணுவ வீரனாக எல்லையைக் காப்பதையே லட்சியமாக கொண்ட அல்லு அர்ஜுன், அநீதி கண்டு மீண்டும் பொங்கினாரா? அல்லது அதைக் கண்டும் காணாமல் இருந்து சான்றிதழ் பெற்றாரா? என்பது மீச்சக்கதை.

`பசிச்சா நல்லா சாப்பிடுவேன், தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன், கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்’ என்று சொல்வதைக் கேட்கும் போதே கோபம் வரும் தொணியில் , ஃபேஷன் என்ற பெயரில் ஹேர்ஸ்டைலில் ஒரு பார்ட்டர் போட்டு தெனாவட்டாக வரும் ஆர்மி சோல்ஜரான் அல்லு அர்ஜூன் நம்மூர் பல ஹீரோக்களை விட எவ்வளவோ பெட்டர்.

அதிலும் மிலிட்டரி சோல்ஜர் மையப்படுத்தித் தொடங்கும் கதை, ராணுவம், ஊர், தேசியம், எல்லை, வீரன், பொறுக்கி, சாமான்யன், குடும்பம், காதல் என பல பதார்த்தங்களை ருசிக்கக் கொடுத்து விட்டு கிளைமாக்சில் ராணுவம், இந்தியா என்று அதிலும் ஜன கன மன-வில் டைட்டில் போட்டு நிற்கிறது.

குறிப்பாக வசனங்கள் தனி கவனம் பெறுகிறது.. ராணுவ வீரன் கதை என்பதால் அளவுக்கதிகமாக உணர்ச்சியை தூண்டாமல் அதே நேரம் தேச பக்தியை பாந்தமாக வெளிப்படுத்துவதுவதில் வசனக்கர்த்தா ஜெயித்து இருக்கிறார். சாம்பிளுக்கு “இந்தியாவுல இருக்கிறதால இந்தியன் ஆகிடமுடியாது…. இந்தியன்ங்கற அடையாளம் ஆதாரா , பாக்கெட்ல அல்ல … இங்க நெஞ்சுல இருக்கணும்….”, இந்தியாவுல நார்த் இந்தியன் ,செளத் இந்தியன் , ஈஸ்ட் வெஸ்ட் இந்தியன் …. அப்படின்னு எதுவும் கிடையாது …
ஒரே இந்தியா தான் … நாமெல்லோரும் இந்தியன்தான் .

நாயகி அனு இம்மானுவேல், டோலிவுட் பட நாயகிகள் எப்படியிருப்பார்களே அப்படியே இருக்கிறார்; கொஞ்சம் ட்ரஸ், கொஞ்சூண்டு நடிப்பு. அல்லு அர்ஜுனின் அப்பாவாக `ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன். அமைதியான, அலட்டலில்லாத நடிப்பு என்றாலும் அவரிடம் என்னவோ மிஸ்ஸிங். ரெண்டு மூன்ரு சீன்களே வந்தாலும் நதியா-வைப் பார்த்தவர்கள் பரவசமானதென்னவோ நிஜம்.

மொத்தத்தில் ஆரம்பத்தில் சொன்னது போல் சினிமா ரசிகருக்கு என்னவெல்லாம் விருப்பமோ அத்தனையையும் சரியான மிக்சிங்கில் கொடுத்து திருப்திப்படுத்தி சல்யூட் பண்ண வைத்து விட்டார்கள்!

மார்க் 5/ 3.25