October 19, 2021

ஜிம்பாப்வே அதிபர் தேர்தல் : எம்மர்சன் மீண்டும் தேர்வு!

ஜிம்பாப்வே நாட்டில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறையில் மிகப் பெரிய அளவிலான வன்முறை ஏதும் இல்லாமல் பொதுத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்த நிலையில் இத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 10 மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி ஆளும் கட்சிக்கு 50.8 சதவீத ஓட்டும், எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சாமிசாவுக்கு 44.3 சதவீத ஓட்டும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் இந்தத் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

1980-ல் சுதந்திரம் பெற்றது ஜிம்பாப்வே. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது. சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனு பி.எப். கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர்.

தொடர்ந்து முகாபேவுக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு புரட்சி வெடித்தது. இதையடுத்து, தாமாக முன்வந்து கடந்த 2017 நவம்பர் மாத இறுதியில் அவர் பதவி விலகினார்.முகாபே பதவி விலகலை தொடர்ந்து எம்மர்சன் நங்கக்வா என்பவர் அந்நாட்டின் அதிபரானார். அந்நாட்டில் மொத்தம் உள்ள இடங்கள் 270. ஆனால் 210 இடங்களுக்குத்தான் நேரடி தேர்தல் நடத்தப்படும். மீதி இருக்கும் 60 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவர். ஜிம்பாப்வேயில் கடந்த ஜூலை 30ஆம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறைகள் வெடித்தன. இதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஆகையால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. பலத்த பாதுகாப்புடன் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில், அதிபர் எம்மர்சன் நங்கக்வாவின் ஆளும் ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்றுள்ளது. அவரது கட்சி பதிவான வாக்குகள் மொத்தம் 50.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் அவரது கட்சி 140 இடங்களில் அந்த கட்சி வெற்றிபெற்றுள்ளது. நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி எம்.டி.சி, 58 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணி 44.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயின் தேர்வு செய்யப்பட்ட அதிபராக எம்மர்சன் நங்கக்வா பொறுப்பேற்பார் என ஜிம்பாப்வே தேர்தல் ஆணையர் பிரிசில்லா சிகும்பா அறிவித்தார்.