January 18, 2022

இந்தியா செல்லும் சீன சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!

சிக்கிமின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினரின் சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சீன ராணுவம் அத்துமீறி இந்தியா எல்லைக்குள் புகுந்து 2 பதுங்கு குழிகளை சேதப்படுத்தியது. இந்த விவகாரத்தினால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் இந்தியா செல்லும் சீன சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னால் சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்கள் சீன எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக சிக்கிம் எல்லையில் சீனா மற்றும் இந்திய ராணுவம் தன் படைகளை குவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சீன அரசு ஆலோசனைகள் வழங்கிவருகிறது. இந்தியாவில் வாழும் சீனர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்களே எடுத்துக் கொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
அதாவது சீனர்கள் இந்தியாவில் தங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும், தேவையற்ற பயணங்க ளைத் தவிர்க்க வேண்டும், தங்கள் உடமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பயண விவரங்களை நெருங்கிய உறவுகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் ஆகிய  ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சீன தூதரகத்தின் தொலைபேசி எண்ணும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாம். இந்த அறிவிப்புகள் புதுடில்லியில் உள்ள சீன தூதரகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தி யில் ‘‘ நாங்கள் பயணிகளை எச்சரிக்கவில்லை. இந்தியாவில் தங்கள் பயணத்தின் போது கவனமாக இருக்கும்படி, ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படுகிறது ’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.