December 1, 2021

எல்லீஸ் ஆர் டங்கன்!

எல்லிஸ் ரோட்ரிக் டங்கன், இன்னிய யங் சினிமா ஆர்வலர்கள், வெறியர்கள் மற்றும் ட்விட்டர் பாய்ஸூகள் என பலதரப்பினரும் அதிகம் கேள்விப்படாத முக்கியமான சினிமா பிரபலம். சுருக்கமா எல்லிஸ் ஆர்.டங்கன் என்று அழைக்கப்படும் இவர், அமெரிக்காவைச் சேர்ந்தவர். நம்ம தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்த அசிஸ்டெண்டுகளைக் கொண்டே தமிழ் சினிமா உலகில் தனித் தன்மை கொண்ட, வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்வரிவர். அதிலும் சினிமாவில் நாடக பாணி எதிரொலிப்பதை மாற்றி, நடிகர்களின் முகபாவனை, உடல் மொழிகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் இவர்.

புரட்சி நடிகராகி பின்னர் புரட்சி தலைவரான எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவரும் இவரே.ஆம்.. தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர், நடிகராக அறிமுகமான முதல் படம் ‘சதிலீலாவதி’. இதை இயக்கியவர்தான் டங்கன். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘மந்திரி குமாரி’ படத்தை இயக்கியவரும் இவரே!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் மிடில் கிளாஸ் பேமிலியில் (1909) பிறந்தார். செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சின்ன வயசிலிருந்தே புகைப்படக் கலை யில் ஆர்வம் கொண்டிருந்தார். புதுசா வாங்கிய கேமராவைக் கொண்டு, பள்ளி ஆண்டு இதழுக்காக புகைப்படங்கள் எடுத்தார். அதை கண்டு பாராட்டிய நிர்வாகம் அந்த பள்ளி இதழின் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டார். அப்பாலே கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத் துறையில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்தார்.

அத்தோட திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் என அனைத்துக் களங் களிலும் புகுந்து அவற்றையும் ஆர்வத்தோடு கற்றார். பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலித்த மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவரும் அங்கு படித்தார். படிப்பு முடிந்ததும், இந்தியா திரும்பி திரைப்படம் தயாரிக்கத் தொடங்கிய அவர், உதவிக்கு தனது கல்லூரி நண்பர் டங்கனை அழைத்தார்.

அப்படி இந்தியா வந்த டங்கன், ‘நந்தனார்’ திரைப்படத்தில் நண்பருக்கு உதவியாளராக சேர்ந்தார். அதில் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ.என்.மருதாச்சலம் தனது அடுத்த படத்தை இயக்குமாறு டாண்டனிடம் கேட்டார். அவர் இந்த யு எஸ் நண்பனை சிபாரிசு செய்ய, 1936-ல் ‘சதி லீலாவதி’ திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட இயக்குநரானார் டங்கன்.

தமிழ் சினிமாவின் முதல் ஹீரோவான தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய படம், டங்கன் இயக்கத்தில் வெளிவந்த ‘அம்பிகாபதி’. டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கி ருஷ்ணன், டி.ஏ.மருதம் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளிவந்த அந்தப் படம், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வந்த படங்களில் முக்கியமான வெற்றிப் படமும்கூட. முதன் முதலில் இசையமைப்பாளரின் பெயர் டைட்டில் கார்டில் போடப்பட்ட படமும் அதுவே!

தொடர்ந்து, தமிழில் பல படங்களை இயக்கிய டங்கன் இந்தியில் ‘மீராபாய்’ படத்தை இயக்கினார். ஆனாலும் இந்து புராண கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளையே அதிகம் இயக்கியுள்ளார் டங்கன். அதனால் இந்துக் கோயில்களில் படப்பிடிப்பை நடத்தவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு அதிகம் உண்டு. அந்தக் காலகட்டத்தில் இந்து அல்லாதவர்கள், இந்துக் கோயில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதால், தன்னை ‘காஷ்மீரி பண்டிட்’ போல குல்லா, குங்குமம் எல்லாம் போட்டு காட்டிக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி புடுவாராம்.

நவீன ஓப்பனைகள், கேபரே டான்ஸ், மொபைல் கேமரா (அதற்கு முன் ஒரே இடத்தில் கேமராவை நிறுத்தி வைத்து படம் பிடிக்கப்பட்டது) சிம்பாலிக் ஷாட் போன்ற பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் டங்கனையே சேரும். (ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா)

இதுக்கிடையிலே 1950-ல் வெளியான ‘பொன்முடி’ படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளை படமாக்கி கடும் விமர்சனத்துக்குள்ளானார். அமெரிக்க கலாசாரத்தை இந்திய மக்கள் மனதில் விதைக்கிறார் என்றெல்லாம் பத்திரிகையாளர்களின் பாய்ச்சலுக்கு ஆளானார் டங்கன்.

அதே ஆண்டில் குண்டலகேசி காப்பியத்தைத் தழுவி, மு.கருணாநிதியின் திரைக்கதையில், எம்.ஜி.ஆரின் வாள் சண்டையுடன் வெளியான ‘மந்திரி குமாரி’ வசூலில் சக்கைபோடு போட்டு வரலாறு படைத்தது. இதுதான் டங்கன் தமிழில் இயக்கிய கடைசி படம். இதற்குப் பிறகு, அமெரிக்கா விலுள்ள வர்ஜினியா நகருக்குக் குடிபெயர்ந்த டங்கன், அடுத்த 30 ஆண்டுகள் ஆங்கில டாக்குமென் டரி படங்களை எடுத்து வந்தார்.

தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து ‘எ கைடு டு அட்வெஞ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை வெளியிட்டார். 90-களின் தொடக்கத்தில் தமிழகம் வந்த இவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் 2001-ம் வருஷம் இதே நாள் (டிச.1) தன் 92-வது வயதில் காலமானார் இந்த மிஸ்டர்.டங்கன்.

தகவல் உதவி : கட்டிங் கண்ணையா