March 27, 2023

மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸூக்கு சான்ஸ் ; ஆனால் பார்லிமெண்ட் பாஜக-தான் – சர்வே ரிசல்ட்!

நாடெங்கும் பாஜக அலை வீசுவதாக அவ்வப்போது வெளிநாட்டு நிறுவனக்களின் சர்வே மூலம் தகவல் வருவது வாடிக்கை. ஆனால் தற்போது மத்திய பிரதேசம், ராஜச்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என ‘ஏபிபி-சி வோட்டர்ஸ்’நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம், இதற்கு நேர்மாறாக அதே மாநிலங்களில் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு அதிக சதவிகிதம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 12-ல் தொடங்கி டிசம்பர் 7-ம் தேதி வரை என ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடை பெறுகிறது. இதுதொடர்பாக ‘ஏபிபி-சி வோட்டர்ஸ்’ நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியானது. இதில், ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு வெற்றி முகம் தெரிகிறது.

ம.பி.யில், காங்கிரஸுக்கு 42.6 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 40.9 சதவிகிதம் வாக்குகள் கிடைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ம.பி.யில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்கிறது. இங்கு காங்கிரஸின் முதல் அமைச்சராக ஜோதிர்ஆதித்ய சிந்தியாவிற்கு 42.5 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 37 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்து தெரிவித்து உள்ளனர். காங்கிரஸின் மற்றொரு முக்கியத் தலைவரான கமல்நாத்திற்கு வெறும் 8.2 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்

பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானிலும் காங்கிரஸுக்கு சாதகமான கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில், காங்கிரஸுக்கு 44.8, பாஜகவிற்கு 33.2 சதவிகிதம் வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், முதல்வர் வசுந்தரா ராஜே ஆட்சிக்கு எதிரான சூழல் அதிகம் தெரிகிறது.

ராஜஸ்தானின் முதல் அமைச்சர் மீதான கருத்துக்களில் காங்கிரஸின் சச்சின் பைலட்டிற்கு 38.8 மற்றும் அசோக் கெல்லோட்டிற்கு 22, பாஜகவின் வசுந்தரா ராஜேவிற்கு 21.6 சதவிகிதம் ஆதரவு மட்டும் கிடைத்துள்ளன.

சத்தீஸ்கரிலும் வெற்றி காங்கிரஸுக்கு என 36.9 சதவிகித கணிப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. இங்கு மூன்றாவது முறையாக ஆளும் பாஜகவிற்கு 34.7 சதவிகிதம் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், முதல் அமைச்சருக்கான வாய்ப்பில் தற்போதுள்ள ராமன் சிங்கிற்கும், அடுத்த நிலையில் முன்னாள் முதல்வரான அஜீத் ஜோகிக்கும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த கணிப்பில், காங்கிரஸ் தலைவர்களுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது.

அதே சமயம் ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்து கணிப்பில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கும் சேர்த்து கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இது சட்டப்பேரவை தேர்தலுக்கு முற்றிலும் மாறாக, ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கரில் பாஜகவிற்கு அதிக சதவிகித வாக்குகள் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

ம.பி.யில் பாஜகவுக்கு 50.2, காங்கிரஸுக்கு வெறும் 37 மற்றும் இதர கட்சிகளுக்கு 4.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ராஜஸ்தானில், பாஜக 47.5 காங்கிரஸுக்கு 36 சதவிகித ஆதரவு வாக்குகள் காட்டியுள்ளன. சத்தீஸ்கரிலும் பாஜகவிற்கு அதிக ஆதரவாக 41.7, காங்கிரஸுக்கு 40.1 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளதுதான் ஹைலைட் சமாச்சாரம்.