தேர்தல் வாக்குறுதிகள்: வாக்குகள் உறுதியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
நடைபெறவுள்ள 16 ஆவது பேரவைத் தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை’களை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. தற்போது முன்னணியிலுள்ள மூன்று முக்கியக் கட்சிகளான ஆளும் அ இ அதிமுக, திமுக அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் (பகுதியாக) ஆகியவை தங்களது அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
ஆளும் அ இ அ திமுகவைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தப் பிறகு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளோடு புதிதாக சிலவற்றைச் சேர்த்துச் சொல்ல வேண்டியக் கட்டாயம் உள்ளது. அதன்படி, விலையில்லா சலவை இயந்திரம், சோலார் அடுப்பு, பெண்களுக்கு மாத நிதியுதவி, வீட்டிற்கே வரும் நியாய விலைக்கடைப் பொருட்கள், பெண்களுக்கு போக்குவரத்து பயணக்கட்டணச் சலுகை, எரிபொருள் விலைக் குறைப்பு, பாரம்பரிய உணவு தானியங்களுக்கு ஆதரவு விலை, இயற்கை வேளாண்மைக்கு ஆய்வு மையம் எனப்பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. இவற்றோடு, வீட்டு மனைகள், மானிய விலையில் வீடு, திருமண உதவித் திட்டம், ஓய்வூதிய பலன்கள் எனப் பலவும் உள்ளன. இவற்றை நிறைவேற்றத் தேவையான நிதியாதாரங்களைத் திரட்டும் வழிமுறைகளைக் கண்டறிவோம் எனவும் முதல்வர் கூறியுள்ளார். அதிமுக, திடீரென்று சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம் என உறுதியுளித்து இருந்தது.. உடனே பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, யாரும் சிஏஏவை எதிர்க்க கூடாது. அது ரத்து செய்யப்படாது எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் சி.ஏ.ஏ.வை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றுதான் கூறியுள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திமுகவைப் பொறுத்தவரை மகளிருக்கு மாத நிதியுதவி, அடிப்படைக் கட்டமைப்புகள், சூழல் காப்பு, மத்தியச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மறுத்தல் என பல அம்சங்களை கூறியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சென்ற மாதம் தங்களது குடும்பங்களைப் பராமரிக்கும் பெண்கள் தாயாக இருப்பதோடு அவர்களது கடமை முடிந்து விட்டது எனக்கூறாமல் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கோடு மாதச் சம்பளம் போன்ற நிதியுதவி வழங்கப்படும் என்றார். கூடவே எங்களிடம் பலத் திட்டங்கள் உள்ளன; வெளியே சொன்னால் காப்பி அடித்து விடுவார்கள் என்றார்.
அது போலவே ம நீ மவின் மகளின் நிதியுதவித் திட்டத்தை இரு கழகங்களும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளன. மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை பல்வேறு தலைப்புகளில் தங்கள் கொள்கைக் குறிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் முக்கியமாக பூரண மது விலக்கு இடம் பெற்றுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். ஆனாலும் டாஸ்மாக் வருமானத்திற்கான இழப்பை ஈடு செய்ய என்ன வழி என்பதை அவர்கள் சொல்லவில்லை.
அ இ அதிமுக சென்ற முறையே படிப்படியாகக் கடைகளை மூடுவோம் என்றனர். ஆனாலும் முழுமையாக மது விலக்கு கொண்டு வரப்படவில்லை. மது விற்பனையும், எரிபொருள் விற்பனையுமே மாநில அரசுகளுக்கு அட்சயப் பாத்திரங்கள். இது ஜி எஸ் டிக்குப் பிறகு இறுக்கமாகி விட்டது. மாற்று நிதியாதாரங்களை மாநில அரசுகள் தேடிக்கொள்ளாதவரை எரிபொருள், மது விற்பனை இரண்டையும் கட்டுப்படுத்த இயலாது. எரிபொருள் விற்பனையை சூழல் மாசு காரணங்களுக்காக கட்டுப்படுத்த வேண்டும். பாரிஸ் மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.
அ இ அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இதில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தும் விதமாக பாரம்பரிய தானியங்களை உற்பத்திச் செய்ய ஆதார விலை அளிப்பது எனும் அம்சம் முதன்மையானது. தமிழகத்தில் பெண்களும், குழந்தைகளும் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனைப் போக்க ஊட்டச்சத்து மாத்திரைகளை அரசு விநியோகித்து வருகிறது. ஆயினும் ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய தானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சிகள் போதவில்லை. இதைப் போக்கும் விதத்தில் இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே போல இயற்கை வேளாண்மைக்காக தன்னை அர்ப்பணித்த நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் அமைப்பதாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கார்த்திகேய சிவசேனாபதிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வு விலக்குகளை திமுக அரசு நிராகரிக்கும் என்று அறிவித்துள்ளது. சத்துள்ள ஏ-2 பாலிர்காகவே ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றது. இதைப் பள்ளிச்சிறுவர்களுக்கு வழங்குவோம் என்று கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குழந்தைகளுக்கு பாலும், காலை உணவும் வழங்குவோம் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதுவும் நாட்டுப் பசும்பாலா என்று தெரியவில்லை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியான அறிக்கையில் 69% இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது உரிய அளவில் கணக்கீடு செய்து எந்த சமூகமும் பாதிக்காத வகையில் சம உரிமை மற்றும் சமூகநீதியை பெறும் வகையில் அமமுக சரியான நிலைப்பாட்டை முன்னெடுக்கும்.அனைத்து கிராமங்களிலும் அம்மா கிராம வங்கி துவங்கப்படும்.வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடை முறைப் படுத்தப்படும் விஐபி பாதுகாப்பு பணியில் சாலையோரம் பெண் காவலர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் நெல்லுக்கான ஆதார விலையாக ரூ.3000/- மற்றும், கரும்புக்கான விலையாக ரூ.4000/- கிடைக்கவும் உறுதி செய்வோம் மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும்முறை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை. என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்..அத்துடன் பூரண மது ஒழிப்பு அமலுக்கு வரும். புதிய மதுபான தொழிற்சாலைகள் திறக்கப்படாது என்று கூறியதுடன் சுற்றுப் பயணத்தின் போது பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதெல்லாம் எந்த அளவு நடைமுறை சாத்தியமென்று தெரியவில்லை
மக்கள் நீதி மய்யம் மக்கள் நல அரசு அமைப்போம், ஊழல் ஒழிப்போம் என்ற வழக்கமான உறுதிமொழிகளையே அதிகம் அளித்துள்ளது. இது வாக்காளர்களை எந்தளவு ஈர்க்கும் என்பது தெரியவில்லை. ஆயினும் இம்முறை அக்கட்சி டாஸ்மாக் ஒழிப்பிற்காகவும், பெண்கள் ஊக்க ஊதியம் அளிக்கும் திட்டத்திற்காகவும் அதிக வாக்குகளைப் பெற வாய்ப்புண்டு. மத்திய ஆளுங்கட்சியான பாஜக தமிழகத்திற்கு என்று தனியாக தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. பாமகவும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரமேஷ்பாபு