December 8, 2021

சந்தேகமா? எங்கள் நடத்தை மீதா? – தேர்தல் கமிஷன் காட்டம்!

மத்திய அரசின் உத்தரவின் பேரில் தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது என்றும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றும் ஆணையம் காட்டமாக பதிலளித்துள்ளது.

கொல்கத்தா போலீஸ் கமிஷனர் உட்பட ஏழு பேரை இடமாற்றம் செய்ய மேற்கு வங்க அரசிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அதில், அதிகாரிகள் இடம்மாற்றம் மூலம் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதைக் பிரதிபலிகிறது. இந்த உத்தரவு உள்நோக்கம் கொண்டது துரதிருஷ்டவசமானது. சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியலமைப்புபடி செயல்படுகிறதா அல்லது மத்தியில் பா.ஜ.,வை சமாதானபடுத்தும் வகையில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். இந்த இடமாற்றம் மூலம் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்தால், அதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்குமா? எனக் கூறியுள்ளார். மேலும் இதுக்குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றத்துக்கான காரணம் தெரியும் எனவும் கூறியுள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜியின் கடிதத்திற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், எப்போதும் சுதந்திரமகவும் மற்றும் நியாயமாகவும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான நம்பகத்தன்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனக் கூறி உள்ளது. மேலும் இது குறித்து, “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 28ஏ பிரிவின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் அதிகாரிகள் பணியிடமாற்றம் மற்றும் நியமன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் விளக்கமளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைமுறைகளை மேற்பார்வையிட்ட துணை தேர்தல் ஆணையர் மற்றும் காவல்துறை சிறப்பு பார்வையாளர் ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பணியிடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கு வங்கத்துக்கு மட்டுமன்றி ஜார்க்கண்ட், திரிபுரா, அருணாசலப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் காவல்துறை சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுப்பதாக விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது என்றும், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.