February 7, 2023

ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது சரியே! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது தேர்தல் சீர்திருத்தச் சட்டமான ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் சட்டம். இனி குடியரசுத் தலைவரின் கையொப்பத்திற்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற வேண்டும். மக்களவையில் இச்சட்டம் கடைசி நிமிடத்தில் அரசினால் கொண்டு வரப்பட்டது என்றும், உறுப்பினர்கள் படித்துப்பார்க்கவே நேரமில்லை என்றும் கூறி எதிர்க்கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். எனினும் சட்டம் நிறைவேறியது. மாநிலங்கள் அவையில் 3 மணி நேரம் ஒதுக்கினாலும் 1 மணி நேரத்தில் எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டதால் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சரி, இப்போது ஏன் இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது எனும் ஐயம் பலருக்கு இருக்கலாம். வாக்காளர் அட்டையுடன் ஏன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற கேள்வி பலரது மனதில் எழலாம்.

ஆதார் எனும் குடிமக்களுக்கான தங்களது தனிநபர் அடையாளத்தை நிறுவும் பொருட்டு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி அனைத்து குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் நடைமுறையும், அதில் தேவையான திருத்தங்களை செய்து கொள்ளும் வசதியும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் குடியுரிமை அட்டையல்ல என்பதை துவக்கத்திலிருந்தே அரசு கூறி வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்தவரை இந்த ஆதாரை அரசின் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் பதவிக்கு வந்த நரேந்திர மோடி அரசு இதனை வாக்காளர் அட்டை, வருமான வரிக்கணக்கு, குடிமைப்பொருள் வழங்கும் அட்டை ஆகியவற்றுடனும் இணைத்து போலிப் பயனாளிகளை களையும் நோக்கில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநில அரசுகள் டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்களை வழங்கும் முறைக்கு மாறியதோடு உணவு வழங்கு அட்டையுடன் ஆதாரையும் இணைத்து வருகின்றனர். இதன் மூலம் இலட்சக்கணக்கான போலி குடும்ப உணவுப் பொருட்கள் வழங்கு அட்டைகள் ஒழிக்கப்பட்டன. சுமார் 4.4 கோடி போலி அட்டைகள் ஒழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உண்மையான பலனாளிகளுக்கு முறையான அரசின் உதவிப் போய்ச் சேர்ந்ததுடன் அரசிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவு மிச்சமானது. இதனால் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் அரசினால் ஏழை – எளிய மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்க ஏதுவானது.

இந்நிலையில் ஆதாருக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது எனவே அதை அரசின் நலத்திட்ட உதவிகள் தவிர பிற சேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு அதற்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. ஆயினும் இன்னும் ஆதாரை அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்துக்கூடாது என்று பல அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னால் புட்டசாமி எனும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதாருக்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு அமர்வு ஆதாரை தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்தது. மேலும் அதனை தனி நபர் உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதையும் தடை செய்தது. குறிப்பாக, தொலைபேசி ஒட்டுக்கேட்பு போன்ற அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதாரை பயன்படுத்தக்கூடாது என்பதே இந்த தீர்ப்பின் சாராம்சம். இப்போது தேர்தல் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் இந்த நடவடிக்கையையும் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கிறார்கள். இதில் வேடிக்கையான முரண் என்னவென்றால் ஆதார் குடும்ப உணவு வழங்கல் அட்டையிலிருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்பட்டது. அதே போலத்தான் வாக்காளர் அடையாள அட்டையும் குடும்ப உணவு வழங்கல் அட்டையிலிருந்துதான் பெயர்கள் பெறப்பட்டு வழங்கப்பட்டது.

எனவே அவை இரண்டின் தோற்றமும் குடும்ப உணவு வழங்கல் அடையாள அட்டையை அரசின் அடிப்படை அடையாள அட்டையாக்கி விட்டது. இப்போது அவை இரண்டையும் ஆதாருடன் இணைக்கும் போது போலிகள் அடையாளம் காணப்படுவது எளிதாகும். ஏற்கனவே அரசு போலி உணவு வழங்கல் அட்டைகளை ஒழிக்க ஆதாரைப் பயன்படுத்தியதில் பல பேருக்கு ‘வருமான இழப்பு’ ஏற்பட்டுள்ளது. இப்போது டிஜிட்டல் முறையில் உணவு வழங்கல் நடப்பதாக சொல்லப்பட்டாலும் முறைகேடுகளுக்கு குறைவில்லை. வாங்காத பொருட்களை வாங்கியதாக அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்திகள் வருவது வழக்கமாகிவிட்டது. இதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை.

ஏற்கனவே ஆதாருடன் வருமான வரிக் கணக்கை இணைத்தபோது வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே வந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது புதிய வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பேரளவில் கூடியதும் பின்னர் குறைந்ததும் தெரிந்ததே. ஆனால் ஆதாருடன் இணைத்தப்போதே மீண்டும் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. கடைசியாக சுமார் 6 கோடி பேர் வருமான வரி கட்டுவோராக உள்ளனர். ஆனாலும் இதில் வருமான வரியை உண்மையிலேயே செலுத்தியர்கள் வெறும் 1.5 கோடி பேர்கள் மட்டுமே. இதரர்கள் சலுகைகளால் வரி ஏதும் கட்டுவதில்லை. எனவே அரசிற்கான நேரடி வருவாய் பாதிக்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகம் பேரை அடையாளம் காணும் நோக்கிலேயே ஆதாருடன் வருமான வரி எண்ணை அரசு இணைத்துள்ளது. தற்போது பொதுமுடக்கத்தின் பாதிப்பினால் ஏதும் செய்யாத அரசு அடுத்த நிதியாண்டு முதல் வரி செலுத்துவோரின் எண்ணைக்கையை விரிவாக்கும் என எதிர்பார்க்கலாம்.

தேர்தல்களில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் வாக்களித்தோரின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருப்பதாக பலமுறை புகார்கள் எழுந்ததை ஒட்டியே போலி வாக்காளர்களைக் களையும் நோக்கில் அரசு ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க முடிவெடுத்து சட்டம் நிறைவேற்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7.5-8.0 கோடி வரை இருக்கும் என்ற மதிப்பீட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் மேலாக உள்ளது. அதில் 60-75% பேர் வரை தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் வெளி மாநிலத்தவரின் உண்மையான எண்ணிக்கைத் தெரியாது. அடுத்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வரலாம். அந்தக் கணக்கெடுப்பும் கொரோனா தொற்றால் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் போது போலி வாக்காளர் எண்ணிக்கை தெரிய வரலாம். எனவே இணைப்பு நடவடிக்கையால் நன்மையே ஏற்படுகிறது; அதனால் இதை எதிர்ப்பது அரசியல் காரணங்களுக்காகவே என்பதும் புரிகிறது.

ரமேஷ்பாபு