August 16, 2022

ஓட்டு போடப் போடறவங்க கை விரலில் வைக்கும் அழியாத மை ரூ. 33 கோடி!

நடைபெற இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை இந்திய தேர்தல் ஆணையம் வாங்குகிறது. கடந்த 1962 தேர்தலில் இருந்து பயன் படுத்தப்படும் இந்த மை 2006ம் ஆண்டில் இருந்து வாக்காளர்களின் விரலில் ஒரு சிறிய கோடாக வரையப்படுகிறது. இடது ஆள்காட்டி விரலில், நகத்தின் உச்சியிலிருந்து முதல் இணைப்பு அடிவரை இந்த கோடு போடப் படுகிறது. அதற்கு முன் இந்த மை நகமும், தோலும் சேருமிடத்தில் இடப்பட்டது. இந்த மையில் சில்வர் நைட்ரேட் அடங்கியுள்ளது. இந்த ரசாயனத்தில் புற ஊதா வெளிச்சம் படும்போது, அது தோலில் கறையை ஏற்படுத்துகிறது. இந்த அடையாள கறையை நீக்குவது எளிதல்ல. வெளித் தோல் செல்கள் மாறும்போது தான், இந்த கறை அகலுகிறது. இந்த சில்வர் நைட்ரேட்டின் அடர்த்தி 7 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரை மாறுபடுகிறது. பாட்டிலில் இருந்து பஞ்சால் சுற்றப்பட்ட குச்சிமூலம் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் இந்த மையானது.., சில வேளைகளில் விரல் முழுவதும் வழிந்து, விகாரமாக காட்சியளிப்பதாக இளைய தலைமுறையினரிடம் இருந்து தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வருவதெல்லாம் சகஜம் மேலும் இந்த அழியாத மை குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வோமா?

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16-வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிக் கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கிடையே, வாக்களிக்க உரிய அடையாள அட்டையுடன் வருபவரே வாக்களித்தாலும் ஒருவரே பல முறை ஓட்டுப் போட முயல்வது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, ஓட்டளிக்கும் வாக்காளரின் கைவிரலில், ஓட்டளித்ததற்கான அடையாளமாக அழியாத மை வைக்கப்படுகிறது. இந்த மை, பல நாட்களுக்கு அழியாமல் இருக்கும். இந்த மையை கர்நாடக மாநில அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரிக்கிறது. தேர்தல் ஆணையம், தேசிய இயற்பியல் சோதனைக்கூடம், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் ஆகியன இணைந்து, அழியாத மையை உற்பத்தி செய்கின்றன. டெல்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம், `மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்’ நிறுவனத்துக்குச் சிறப்பு உரிமத்தை 1962-ல் வழங்கியது.

இந்நிறுவனம் 1937ல் அப்போதைய மைசூர் மகாராஜாவாக இருந்த, நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் துவக்கப்பட்டது. தொடக்கத்தில் மைசூர் அரக்கு மற்றும் பெயின்ட் பணி என்ற பெயரில் இயங்கியது. 1989ல் தற்போதைய பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1962ல் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைபடி இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநில பொது தேர்தலுக்கான மையை வழங்கி வருகிறது. கடந்த, 1962ல் இருந்து, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அழியாத மை தயாரித்து வழங்கி வருகிறது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல்கள் மட்டுமின்றி, நேபால், கம்போடியா, துருக்கி, தென் ஆப்ரிக்கா மற்றும் நைஜீரியா உட்படப் பல வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களுக்கும் இந்த நிறுவனம் இதே அழியாத மையை வழங்குகிறது.

இந்நிலையில்தான், அழியாத மைக்கு பதிலாக நவீன மார்க்கர்களின் மூலம் அடையாளம் பதிக்கும் புதிய நடைமுறை பற்றி மத்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகின்றது என்று நாலைந்து ஆண்டுகளாக ஒரு செய்தி வெளியான நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மையை இந்திய தேர்தல் ஆணையம் வாங்குகிறது. மேலும், 26 லட்சம் பாட்டில் அழியாத மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அந்த நிறுவனத்தில் தரப்பினர், “ஏறக்குறைய 10 மில்லி அளவு கொண்ட 26 லட்சம் குப்பிகள் தயாரிக்கிறோம். இதுவரை 20 லட்சம் குப்பிகள் தயார் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் உத்தரவின்படி பல்வேறு மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு குப்பியில் இருக்கும் மை மூலம் 700 முதல் 750 வாக்களர்களின் விரலில் மை வைக்க முடியும்\’ எனத் தெரிவித்தனர்.

மேலும் எம்பிவிஎல் நிறுவனத்தின் மேலாளர் சி. ஹராகுமார், “கடந்த 2014-ம் ஆண்டு அளித்த ஆர்டரைக் காட்டிலும் கூடுதலாக 4 லட்சம் குப்பிகளை தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. நாங்கள் 22 லட்சம் குப்பிகளை கடந்த மக்களவைத் தேர்தலுக்கு அனுப்பி வைத்தோம். இந்த முறை அதைக்காட்டிலும் 4 லட்சம் கூடுதலாகும்’ என்று சொன்னாராக்கும்