உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். அதன்படி உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் பிப்ரவரி 4-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

election jan 4

5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 11-ல் எண்ணப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

உ.பி.யில் 7 கட்டமாக தேர்தல்:

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11-ல் தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15-ல் 67 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மூன்றாம் கட்டமாக 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளில் பிப்ரவரி 1-ல் தேர்தல் நடைபெறுகிறது.

4-ம் கட்டமாக 12 மாவட்டங்களில் 53 தொகுதிகளில் பிப்ரவரி 23-ல் தேர்தல் நடைபெறுகிறது. 5-ம் கட்டமாக 11 மவட்டங்களில் 52 தொகுதிகளில் பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறுகிறது. 6-வது கட்ட தேர்தல் 7 மாவட்டங்களில் 49 தொகுதிகளில் மார்ச் 4-ல் நடைபெறுகிறது. இறுதியாக 7 மாவட்டங்களில் 40 தொகுதிகளில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் மார்ச் 8-ல் நடைபெறுகிறது.

கோவா மாநிலத்தில்…

கோவா மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 18. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 20.

மணிப்பூரில் 2 கட்ட தேர்தல்:

மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 4 மற்றும் மார்ச் 8 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு பிப்ரவரி 8-ல் அறிவிக்கை வெளியாகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 8. அவற்றை திரும்பப்பெற கடைசி நாள் பிப்ரவரி 18. 38 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் மார்ச் 4-ல் நடைபெறும்.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிப்ரவரி 11-ல் அறிவிக்கை வெளியாகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 18. அவற்றை திரும்பப்பெற கடைசி நாள் பிப்ரவரி 22. இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 8-ல் நடைபெறும்.

உத்தராகண்டில் பிப்.15-ல் தேர்தல்:

உத்தராகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 27, வாபஸ் பெற ஜனவரி 30 கடைசி.

பஞ்சாபில் ஒரே கட்டமாக தேர்தல்:

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை ஜனவரி 11-ல் வெளியாகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜனவரி 18 கடைசி நாள். திரும்பப்பெற ஜனவரி 21 கடைசி நாள்.

புதிய அறிவிப்புகள்:

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக பெண்களுக்காக பெண் அலுவலர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்காளர்கள் ரகசியம் காக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் மேசையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பின் உயரம் உயர்த்தப்படும். ராணுவ வீரர்கள் இணையத்தின் வழியாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது போன்ற அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.