October 19, 2021

என்டிடிவி-க்கு தடை ஏன்? மத்திய அரசின் விளக்கமும், எடிட்ர்களின் எதிர்ப்பும்!

பதான்கோட் தாக்குதல் சம்பவத்தை ஒளிபரப்பியபோது ஊடக நெறிகளுக்குப் புறம்பாக என்டிடிவி தொலைக்காட்சி செயல்பட்டதால்தான், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் வெவ்வேறு சேனல்கள் மீது 28 முறை முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ndtv nov 5

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்த பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை வீழ்த்த பதில் தாக்குதல் நடத்தியபோது, அதுதொடர்பாக பல்வேறு சேனல்கள் நேரலையாக செய்திகளை ஒளிபரப்பின. அவற்றில் என்டிடிவி ஹிந்தி தொலைக்காட்சியானது, பதான்கோட் ராணுவ முகாமுக்குள் எந்த இடத்தில் வெடிபொருள்கள் உள்ளன?, பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகள் எவை? என்பன குறித்து செய்திகளை வெளியிட்டது. பயங்கரவாதிகள் அந்தப் பகுதிக்குள் பதுங்கியிருக்கும்போது, இத்தகைய ரகசியங்களை வெளியிடுவது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று கூறிய மத்திய அரசு, இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர் நிலைக் குழுவொன்றை அமைத்தது.

விசாரணையின் முடிவில் என்டிடிவி ஹிந்தி சேனல், பொறுப்பற்ற வகையில் செயல்பட்டதாகக் கூறி, அதன் ஒளிபரப்பு சேவைக்கு ஒரு நாள் தடைவிதித்து. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நெருக்கடி நிலையில் நாடு இருப்பதைப் போன்று உணர்த்துகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் – ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் , “ஊடக நெறிமுறைகளை மீறி விதிகளுக்குப் புறம்பான செய்திகளை ஒளிபரப்பும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக் காலங்களில் இதுபோன்று விவேகமற்ற செய்திகளை வெளியிட்ட சேனல்கள் மீது 28 முறை நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. ஒரு நாளில் இருந்து 2 மாதங்கள் வரை அவற்றின் ஒளிபரப்பு சேவைகளுக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. தற்போதும் அதுபோன்றதொரு நடவடிக்கையையே மத்திய அரசு எடுத்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “என்.டி.டி.டி.வி சேனல் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதை கடும் கண்டனத்துக்குரியது. ஜனவரி 2-ந் தேதி பதன்கோட் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு முக்கிய தகவல்களை என்டிடிவி கிடைக்க செய்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் என்டிடிவி நிர்வாகமோ, மற்ற ஊடகங்கள் ஒளிபரப்பாத எந்த ஒரு தகவலையும் நாங்கள் வழங்கவில்லை என விளக்கம் அளித்திருக்கிறது. ஒரு டிவி சேனலை நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்ய தடை விதிப்பது என்பது ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். இது எமர்ஜென்சி காலத்தை எதிரொலிப்பதாக உள்ளது. ஒரு ஊடகம் பொறுப்பற்ற முறையில் செய்திகளை கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதை செய்யாமல் ஊடகங்களுக்கு தடை விதிப்பது என்பது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகும். என்டிடிவி சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.வழக்கு, விசாரணை எதுவுமின்றி, இப்படி ஒளிபரப்புக்கு தடை விதிப்பது ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்யும் உரிமை மீறலாகும்”என இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.