அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி!

ண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அண்ணா தி.மு.க. பொதுக்குழுவில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கைத்தட்டி பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளரை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவரை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணி அளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்தவித தடையும் இல்லை என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். பொதுக்குழு கூட்டம் கண்டிப்பாக நடத்தப்படும் என்பதில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, இதற்கான ஏற்பாடுகளை கடந்த ஒருவார காலமாக விரிவாக செய்து வந்தார்.

ஆனாலும் பொதுக்குழு கூட்டம் முறையாக சட்டத்திட்ட விதிப்படி நேர்மையாக நடத்த வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் எச்சரிக்கையாகவும், கவனத்துடனும் இருந்தார். போலியாக யாரும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்துவிட கூடாது என்பதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடையாள அட்டையில் கியூ ஆர்கோடு பதிவிடப்பட்டிருந்தது. இன்று பொதுக்குழுவிற்கு வந்த அனைவரும் அடையாள அட்டை காட்டி உள்ளே சென்றனர். வீடியோ புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. மொத்தம் 16 நுழைவுவாயில்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி தனது அடையாறு கிரீன்வேஸ் சாலை இல்லத்திலிருந்து காலை 7 மணி அளவில் வேனில் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் பெருமளவில் கூடிநின்று எழுச்சிமிகு வரவேற்பு அளித்தார்கள். பொதுக்குழு கூட்டம் நடந்த பகுதியில் ஏராளமான அண்ணா தி.மு.க. கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

வானரகத்தில் செயற்குழு, பொதுக்குழு நடத்துவதற்கு தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவு வந்ததும், செயற்குழு கூட்டம் துவங்கியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி வணங்கினார். செயற்குழு மேடையில் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொன்னையன், கே.பி.முனுசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். செயற்குழு கூட்டம் முடிந்ததையடுத்து பொதுக்குழு கூட்டம் துவங்கியது. அண்ணா தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகளை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தொகுத்து வழங்கினார்.

இதன் பின் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலாவதாக 8 தீர்மானங்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் படித்தார்.

அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

இதனையடுத்து மீதியுள்ள 8 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் படித்தார். அந்த தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இரட்டை தலைமை ரத்து

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களின் உணர்விற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவினால் வலிமை சேர்க்கப்பட்ட, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் ‘கழக பொதுச்செயலாளர்’ என்ற தலைமையை மீண்டும் உருவாக்கி, தற்பொழுது உள்ள இரட்டைத் தலைமையான கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில், கழக சட்ட திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. கழக சட்ட திட்ட விதி–43ன்படி ‘கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும் – திருத்தவும் – நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும்’’. 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில் திருத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள், 23.6.2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவில் வைத்து அனுமதி பெறாததால், மேற்படி திருத்தங்கள் தானாகவே காலாவதி ஆகிவிட்டது.

இந்த காலாவதியான சட்டத் திருத்தங்கள் அனைத்தும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு முறை பற்றி தான். இந்த திருத்தங்கள் காலாவதியானாலும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர்கள், கழகத்தின் நடைமுறையில் உள்ள சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக அமைப்புத் தேர்தல்கள் உட்பட அனைத்து செயல்களையும் இப்பொதுக்குழு ஏற்றுக்கொள்கிறது.

ஒற்றை தலைமை

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு, கழகத்தில் ஏற்பட்ட பிளவுகளை சரிசெய்து, ஒன்றுபட்ட, ஒருங்கிணைந்த அண்ணா தி.மு.க.வை உருவாக்கிட வேண்டி, பொதுச்செயலாளர் பொறுப்பை ரத்து செய்து, கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை கொண்டு வரப்பட்டது.

பொதுச்செயலாளர் என்ற அதிகாரம் மிக்க தெளிவான, வலிமையான தலைமை இல்லாமல், இரட்டை தலைமை ஏற்பட்ட பிறகு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முடிவு எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் பல்வேறு சங்கடங்கள், தாமதங்கள் ஏற்பட்டன. இதனால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகப் பெரிய ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள இந்த காலகட்டத்தில் தி.மு.க. அரசையும், கட்சியையும் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றால் தெளிவான மற்றும் வலிமையான ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயமாகும். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எண்ணமும், பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவே ஆகும்.

கடந்த 14.6.2022 அன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற தலைமை கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட, இரட்டைத் தலைமையால் கழகம் நிர்வாக சிக்கல்களும், சங்கடங்களும், உடனுக்குடன் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஆவதால், ஒரு வலிமையான ஒற்றை தலைமை தேவை என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது.

2190 உறுப்பினர்கள் ஆதரவு

23.6.2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவில் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை, இந்தப் பொதுக்குழுவிலேயே அறிவித்து, அடுத்து கூடும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை கடிதமும் கொடுக்கப்பட்டது.

100 ஆண்டுகள் அண்ணா தி.மு.க. நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற அம்மாவின் வாக்கு நிறைவேற வேண்டும் என்றால், மீண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.ஆட்சி, புரட்சித்தலைவி அம்மா ஆட்சி மலர வேண்டும் என்றால், வலிமையான ஒற்றைத் தலைமை உருவாக்கப்பட வேண்டும்.

மீண்டும் பொதுச்செயலாளர்

எனவே, கழக அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்திற்கும், எதிர்பார்ப்புக்கும், கோரிக்கைக்கும் ஏற்பவும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கழக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

கழக பொதுச்செயலாளர் என்பது கழகத்தின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பொறுப்பாகும். அவர் கழகத்தை வழிநடத்தக் கூடியவர் ஆவார். கழகத்தையும், தொண்டர்களையும் வழிநடத்தக் கூடிய தலைமை பொறுப்புக்கு போட்டியிடுபவர்களுக்கு முறையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ளவைகளைக் கருத்தில் கொண்டு, கழகத்தின் சட்டதிட்ட விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் பின்வருமாறு செய்யப்படுகின்றன.

விதிகளில் திருத்தம்

1. கழகத்தின் சட்டதிட்ட விதிமுறைகளில் விதி எண்.20 ரத்து செய்யப்படுகிறது

2. கழகத்தின் சட்டதிட்ட விதிமுறைகளில், எங்கெல்லாம் ‘கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்’ என்ற சொற்றொடர்கள் வருகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கு பதிலாக ‘கழக பொதுச்செயலாளர்’ என்று மாற்றி அமைக்கப்படுகிறது.

எங்கெல்லாம் ‘கழக துணை ஒருங்கிணைப்பாளர்’ என்ற சொற்றொடர் வருகின்றதோ, அங்கெல்லாம் ‘கழக துணைப் பொதுச்செயலாளர்’ என்று மாற்றி அமைக்கப்படுகிறது.

3. அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதி எண்.20அ பிரிவு – 1 கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளில் வரையறுக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ள அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள், பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட தகுதி உடையவர் ஆவார்கள்.

* பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர், அண்ணா தி.மு.க.வில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

* பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர், தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

* பொதுச் செயலாளர் பொறுப்பி்ற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினரின் பெயரை, அண்ணா தி.மு.க. அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில், குறைந்தது 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் மற்றும் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில் குறைந்தது 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.

மாவட்டச் செயலாளர், ஒரு வேட்பாளருக்கு மட்டும்தான் முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ வேண்டும்.

4. அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளில், விதி – 20அ பிரிவு – 2 ‘‘பொதுச் செயலாளர், அண்ணா தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்’’ என்று மாற்றி அமைக்கப்படுகிறது.

5. அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளில், விதி – 20ஆ பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

துணைப் பொதுச் செயலாளர் :

துணைப் பொதுச் செயலாளர்களை, பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.

துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளை வகிப்போர், அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு தங்கள் கடமைகளையும், பணிகளையும் நிறைவேற்றுவர்.

6. அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளில், விதி – 20இ நீக்கப்படுகிறது.

7. அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளில், விதி எண்.43–ல் பின்வருவன சேர்க்கப்படுகிறது:

‘‘அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள ‘‘பொதுச் செயலாளர்’’ அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல’’.

8. அண்ணா தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளில், விதி எண்.45–ல் பின்வருவன சேர்க்கப்படுகிறது:

‘‘சட்ட திட்ட விதிகளின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள ‘‘பொதுச் செயலாளர்’’ அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை’’

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, செயல்படாத நிலை ஏற்பட்டாலோ, அப்பொறுப்பு காலியாகும் நிலை ஏற்பட்டால், கழகத்தை வழிநடத்துவதில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதைத் தவிர்க்கும் பொருட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். எனவே, கழக சட்ட திட்ட விதிமுறையில் இதற்கேற்ற வகையில்திருத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

கழக சட்ட திட்ட விதி எண் 20அ பிரிவு –7 கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

கழகப் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், தலைமைக் கழக செயலாளர்களும் அந்த கழகப் பொதுச் செயலாளர் பதவிக் காலம் வரையில் நீடிப்பர்.

இடைக்கால பொதுச்செயலாளர்

இடைப்பட்ட காலத்தில் அதாவது, கழகப் பொதுச் செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, செயல்படாத நிலை ஏற்பட்டாலோ அல்லது அப்பொறுப்பு காலியாகும் நிலை ஏற்பட்டாலோ, புதிய கழகப் பொதுச் செயலாளர் தேர்ந்து எடுக்கப்பட்டு, அப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளும் வரையில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார். கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், கழகப் பொதுச் செயலாளருக்கான பணிகளையும், கழக நிர்வாகத்தையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

கழக இடைக்காலப் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டி, முந்தைய கழகப் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழகச் செயலாளர்களுக்கு, உடனடியாக கழகப் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேற்படி கூட்டம் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற, கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பெரும்பான்மை முடிவின்படி, விதி எண் 20அ–வின்படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்து எடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண் 20அ பிரிவு –7–ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதன்படி, பெரும்பான்மையான கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை, கழகத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டி, இப்பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுகிறார். அதன்படி, பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை கழக சட்ட திட்ட விதி எண் 20அ பிரிவு –7–ன்படி, இப்பொதுக்குழு கழக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து, நியமனம் செய்யப்படுகிறார் என்பதை ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

கழகப் பொதுச் செயலாளருக்கு கழக விதிகள் தரும் அனைத்து அதிகாரங்களையும், கழக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முயைில் கழக நிர்வாகத்தை நடத்திவர, இந்தப் பொதுக்குழு ஒருமனதாக அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

4 மாதங்களுக்குள் தேர்தல்

பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் விரைந்து நடத்தி முடிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலில், இன்றைய தேதி வரை, அதாவது 11.7.2022 வரை, அண்ணா தி.மு.க. உறுப்பினர்களாக பதிவேட்டில் உள்ளவர்கள், வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். மேற்படி, உறுப்பினர்களுக்கு அவர்களின் உறுப்பினர் உரிமைச் சீட்டு புதுப்பிக்கப்பட்டு, புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படும்.

பொதுச் செயலாளருக்கான தேர்தல் இன்றைய தேதியில் இருந்து 4 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலை நடத்துவதற்காக, அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் எம்.எல்.ஏ., தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இப்பொதுக்குழுவால் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

அண்ணா தி.மு.க. இரட்டைத் தலைமையால் தொய்வுற்றிருக்கும் நிலையில் இருந்து மீண்டுவர, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப் போல, ஒற்றைத் தலைமையின் கீழ் கழக நிர்வாகிகளுக்கும், கழக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும், உத்வேகம் அளிக்கும் வகையில், அரசியல் வியூகங்களை விரைந்து செயல்படுத்துவதற்கும், கழக தலைமை நிலையச் செயலாளர், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அண்ணா தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, கழகத்தை வீறுகொண்டு எழுச்சிபெற, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரது வழியில் தலைமையேற்று நடத்துமாறு ஒன்றரைக் கோடி தொண்டர்களின் சார்பில் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

இதற்கிடையில் பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் இன்று காலை அதிமுக அலுவலகம் நோக்கி சென்றார். இந்நேரத்தில் அங்கிருந்த பழனிசாமி ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி வன்முறை கூட்டத்தினரை கலைத்தனர்.பன்னீர்செல்வம் அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்கள் புடைசூழ உன்ளே நுழைந்தார். தற்போது அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வருவாய் கோட்டாட்சியர்கள் சார் வர்த்தினி, ஜெகஜீவன்ராம் தலைமையில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர் . அங்கு இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து அலுவலக கதவுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.

சட்டப்பிரிவு 145 ன் படி அதிமுக தலைமையகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். சட்டப்பிரிவு 146 ன் படி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க., அலுவலகம் மயிலாப்பூர் தாசில்தார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. முதல் தகவல் அறிக்கை மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், சிவில் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவை பெற்று கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்

அதிமுகவை பொறுத்தவரை மாநில கட்சியாக இருந்தாலும் தேசிய அளவிலும் கவனம் பெறக்கூடிய மிகப் பெரிய வெற்றி என்பதும் அக்கட்சிக்கு பல தொழில் அதிபர்கள் கோடிக்கணக்கில் தேர்தல் நேரத்திலும் சாதாரண நேரத்திலும் நன்கொடை அளித்து வருவார்கள் என்பதும் கடந்த 2020 – 21 ஆம் ஆண்டு நிலவரப்படி அதிமுகவுக்கு ரூ.260.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன என்பதும் அந்த ஆண்டில் மட்டும் 42.37 கோடி வருமானம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!