March 31, 2023

உங்க அப்பா கருணாநிதியாலேயே அதிமுகவை அசைக்க முடியலை! பழனிச்சாமி கிண்டல் பேச்சு!

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று காலை வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட உத்தம சோழபுரத்தில் 70 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய போது, “எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு இந்த கட்சி இருக்காது என்று தப்புக்கணக்கு போட்டார்கள் அப்போதைய தி.மு.க. தலைவர். அதையும் அப்போதைய தலைவர்கள் தவிடு பொடியாக்கினார்கள். இந்த கழகத்தை தோற்றுவித்தபோது தி.மு.க.வால் எவ்வளவோ, பிரச்னை களை சந்தித்தார். எவ்வளோ சோதனைகளையோ சந்தித்தார். அத்தனையும் தாக்குப்பிடித்துதான் தமிழகத்திலேயே சிறப்பான ஆட்சியை தந்தார்.

அம்மா அவர்கள் புரட்சி தலைவர் வழியிலேயே நின்று கழகத்தை கட்டிக் காத்தபோது திராவிட முன்னேன்ற கழகம் என்ற தி.மு.க. எதிரிகளால் எவ்வளவோ பிரச்னைகள் சோதனைகளை சந்தித்தார். அத்தனையும் மக்கள் துணை கொண்டு, கழகத்தினுடைய நிர்வாகிகள் துணை கொண்டு எதிரிகளை வென்று தலை நிமர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி தந்தவர் அம்மா அவர்கள். இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சி தலைவரும் அவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது.

தி.மு.க.வைபோல் குடும்ப அரசியல் கிடையாது. யார்? சிறப்பாக செயல்படுகின்றார், யார்? விசுவாசமான இருக்கின்றார். யார் மக்களிடத்திலேயே செல்வாக்கு பெறுகின்றார். மக்களுக்கு சேவை செய்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பதவி வழங்கினார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட எம்.எல்.ஏ., எம்.பி. ஆக முடியும்.

தி.மு.க.வில் இப்படி பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஜனநாயக இயக்கம். ஜனநாயக கட்சி. ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். அ.தி.மு.க.தொண்டர்கள் நிறைந்த கட்சி. தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. இந்தியாவிலேயே அதிக தொண்டர் கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். துவரைக்கும் 1 கோடியே 20 லட்சம் பேர் சேர்ந்து விட்டனர். இன்னும் 30 லட்சம் பேர் சேர உள்ளனர்.மேலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மூலம் 50 ஆயிரம் தொண்டர்கள் என மொத்தம் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.அனைவரின் ஒத்து ழைப்போடு இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந் நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதையெல்லாம் பொறுக்க முடியாத தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக வும் இருக்கிறார். இப்போது தி.மு.க. தலைவராகவும் இருக்கிறார். உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்போதே அ.தி.மு.க.வை ஒன்னும் பண்ண முடியவில்லை. நீங்கள் என்ன பண்ண போறீங்க சொல்லுங்க பார்ப்போம். அவர் நல்லா இருக்கின்ற போது எவ்வளவு பிரச்னை உண்டாக்கினாங்க, துன்பத்தை உண்டாக்கினாங்க என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அத்தனையும் தாக்குப் பிடித்து தான் இன்றைக்கு தமிழகத்திலேயே 28 ஆண்டுகாலம் ஆட்சியில் உள்ள ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

நீங்கள் எங்களை மிரட்டி பார்க்கிறீங்க. ஒன்னும் நடக்காது. சொந்த உழைப்பு வலுமையாக இருக்கும். ஆள் வைத்து செய்கிற பணி அரை பணியாகத் தான் இருக்கும். தி.மு.க. கட்சி ஆள் வைத்து செய்கிற கட்சி. அ.தி.மு.க. சொந்தமாக உழைக்கின்ற கட்சி. இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது என்பதை இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை, இந்த ஆட்சியில் மக்கள் எந்த பயனும் அனுபவிக்க வில்லை என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். இந்த ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை அம்மா கொடுத்து இருக்கிறார்.

தி.மு.க. வினர் தினந்தோறும் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் பார்த்தாலும் பொய் அறிக்கைத்தான். எந்த கூட்டத்தில் பார்த்தாலும் பொய்யான செய்தியைத் தான் ஸ்டாலின் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். எந்த காலத்திலும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது. இதனி டையே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் விசாரணை ஸ்டாலின் மீதுதான் வந்தது. திமுகவைச் சேர்ந்த 10,11 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன. அத்தனை வழக்குகளையும் தனி நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று முதல்வர் பழனிசாமி  பேசினார்.