June 25, 2021

அதிமுக-விலிருந்து சசிகலா & தினகரனை நீக்க எடப்படி + பன்னீர் டீம் தயார்!

ஜெ. மறைவுக்கு பின்னர் உடைந்து போன அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் தற்போது இணைந்த பிறகு தமிழ்க அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தினகரன் தான் துணைப்பொதுச்செயலாளர் என்ற நிலையில் அடுத்தடுத்து கட்சி மாவட்டச்செயலாளர்களை நீக்கி புதிய மாவட்டச்செயலாளர்களை நியமித்து வருவதால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக நேற்று முதலமைச்சர் பழனிசாமியின் கட்சிப்பதவியையே தினகரன் பறித்தார்.

மேலும் தினகரன் ஆதரவு தரப்பினர் 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். தனி அணியாக இயங்கி வருகின்றனர்.இந்நிலையில் இன்று திட்டமிட்டப்படி அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டம் துவங்கியது. இந்த நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் முக்கிய தீர்மானமாக சசிகலா மற்றும் தினகரனை நீக்குவது என்ற முடிவை எடுத்துள்ளனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1) சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் , நீக்கம் செல்லாது.

2) நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. ஊடகங்களை ஜெயலலிதா புகழ்பாடும் ஊடகங்களாக மாற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கட்சியே நடத்தும்.

3) செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாக கூட்டப்பட வேண்டும்.

4) சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது.

என 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களை நாஞ்சில் சம்பத் சந்தித்தார்: அப்போது அவர், “முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று 21 எம்எல்ஏக்களும் கூறியதுமே எடப்பாடியார் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து முதல்வர் பதவியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார். நமது எம்ஜிஆர் பத்திரிகையும், ஜெயா தொலைக்காட்சியும் தனியாருக்கு சொந்தமான சொத்துக்கள். அவற்றைக் கைப்பற்றுவோம் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதில் இருந்தே, ‘420’ என்று அவர்களை தினகரன் முன்பு கூறியதை மீண்டும் அவர்களே நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி, நமது எம்ஜிஆர் பத்திரிகையையும் மற்றும் ஜெயா தொலைக்காட்சியையும் கைப்பற்ற முயன்றால் விளைவுகள் விபரீதமாகும் என்று எச்சரிக்கிறேன் என நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட 4 தீர்மானங்களுமே அடிப்படையற்றவை செல்லாது என்றும் சம்பத் தெரிவித்தார்.