அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம்!

மிகச் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் டி டி வி தினகரனை பொதுச் செயலாளாரக அங்கீகரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து கொண்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு டிடிவி.தினகரன் தலைமையில் ஓர் அணியும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படத் தொடங்கின. இதனிடையே, ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சை யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதையடுத்து இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்டெடுக்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கிய தினகரன் அதன் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். பின்னர் அமமுக பொதுச் செயலாளரானார்.

இந்த அமைப்பை இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியாக முறைப்படி பதிவு செய்து, பொதுச் சின்னம் வாங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதற்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையடுத்து அதிமுக பேரில் சிலவும், பல தனி நபர்களும் அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யக்கூடாது என்று ஆட்சேபித்து மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

பின்னர் அவற்றுக்கு அமமுக சார்பில் உரிய விளக்கம் அளிக் கப்பட்டது “சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அமமுக கட்சி முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது” என்று அக்கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும், “அமமுகவை பதிவு செய்யக் கோரி இந்தாண்டு ஏப்ரல் 22-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29A-ன்படி கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தோம்.

அதையடுத்து அதிமுக, அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும், தனி நபர்களும் ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்தனர். அவற்றுக்கு உரிய விளக்கம் அளித்து நாங்கள் மனுக்கள் தாக்கல் செய்தோம். இரண்டு தடவை நீதிமன்ற நடைமுறை போலவே விசாரணை நடைபெற்றது.

மேலும் பல கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தோம். இறுதியாக அமமுக என்ற கட்சி முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதற்கான உத்தரவை வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் வழங்கும்” என்றார்.