இனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்!

இனி 10 ஆண்டுக்கு ஒரு முறைதான் கட்சிகள் அங்கீகாரம் ரினீவல்!

இந்தியாவில் இதுவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சிகளின் அங்கீகாரம் பற்றி தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து முடிவு எடுத்தது. இந்த 5 ஆண்டுகால வரையறையை 10 ஆண்டுகள் என தேர்தல் கமிஷன் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, தேசிய கட்சிகள் என்றால் தொடர்ச்சியாக நடைபெறும் இரு பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னரும், மாநில கட்சிகள் என்றால் 2 சட்டசபை தேர்தல்களுக்கு பின்னரும் அவற்றின் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்வது என தேர்தல் கமிஷன் தீர்மானித்து இருக்கிறது.

ec aug 23

இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், தொடர்ச்சியாக நடைபெறும் இரு பாராளுமன்ற அல்லது சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு (10 ஆண்டுகள்) கட்சிகளின் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்யும் வகையில் 1968–ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) தொடர்பான உத்தரவின் 6 சி பத்தியில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

நம் நாட்டில் தற்போது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் உள்ளன. இது தவிர, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் உள்ளன. பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, தேசிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற தவறினால், அவை தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்க நேரிடும். இதேபோல், மாநில கட்சிகள் (பிராந்திய கட்சிகள்) சட்டசபை தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெறாவிட்டால், அவை மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.

அதாவது, ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் 2 சதவீத வாக்குகளை பெற்று இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டசபை தேர்தலிலோ செல்லுபடியான மொத்த வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை பெற்று இருக்கவேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 4 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்று இருக்கவேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் பயன்படுத்தும் சின்னங்களை வேறு கட்சிகள் பயன்படுத்த முடியாது. அங்கீகரிக்கப்படாத பிற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தலின் போது தேர்தல் கமிஷன் ஒதுக்கும் சின்னங்களில் இருந்து ஏதாவது ஒரு சின்னத்தைத்தான் பெற்றுக்கொள்ள முடியும்.

இதனிடையே கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை போதிய சதவீத வாக்குகளை பெறாததால், அவை தேசிய கட்சிகள் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக, அப்போது தேர்தல் முடிந்ததும் அந்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பி இருந்தது.ஆனால் இப்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்வது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்து இருப்பது அந்த கட்சிகளுக்கு பெரிய நிவாரணம் அளிப்பதாக அமைந்து உள்ளது.

error: Content is protected !!