எலெக்ட்ரிக் கார்கோ சைக்கிள்ஸ் எனப்படும் மின் ஊர்தி!- வீடியோ!

புவி வெப்பமயமாதலின் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை ஒட்டி வரவுள்ள 2030 ஆம் ஆண்டுக்குள் 1990 ஆம் ஆண்டின் நிலைக்கு பூமியை மீட்டுக் காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை உலக நாடுகள் பாரிஸ் ஒப்பந்தம் மூலம் முன் நிறுத்தியுள்ளன. இதனையொட்டி உலகின் முதல் மூன்று மாசுபாட்டு நாடுகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியன பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு தனியார் நிறுவனங்கள் எந்தளவிற்கு சூழல் மாசைக் குறைக்கின்றனவோ அதைப் பொறுத்தே மாசின் அளவைக் குறைக்க இயலும். அதன்படி பல நிறுவனங்கள் நெகிழி ஒழிப்பு, கதிரொளி ஆற்றல், மின்சார ஊர்திகள் எனப் பல விதங்களில் மாற்று எரிசக்தி வளங்களை ஊக்குவிக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் முன்னணி சரக்குப் போக்குவரத்து நிறுவனமான டி ஹெச் எல் தனது உள்ளூர்ப் பயன்பாட்டிற்கு மின் ஊர்திகளை அறிமுகம் செய்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கோ சைக்கிள்ஸ் எனப்படும் இந்த சிறு ரக டிரக்கில் பொருட்களை எந்த ஒரு சந்து பொந்திலும் எடுத்துச் சென்று சேர்ப்பிக்கலாம். இப்படி ஒரு வடிவத்தில் ஊர்தியை வடிவமைத்து தங்களின் வணிகமும் கெடாமல் அதே சமயம் சூழலைக் காப்பதிலும் அக்கறைக்காட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது டி ஹெச் எல். ”காரும், சைக்கிளும் இணைந்தது போன்ற இந்த ஊர்தி பைக் போன்றும் இயங்கும். தேவையென்றால் முழுமையாக அதை மின்சாரத்திலும் செலுத்தலாம் என்கிறார் நிறுவனத்தின் அமெரிக்க தலைமைச் செயல் அதிகாரியான கிரெக் ஹெவிட்.

இந்தியாவில் இது போன்ற முயற்சிகள் நடக்காமல் இல்லை. ஏற்கனவே பொதுப் போக்குவரத்தில் மின் பேருந்துகளை மாநில அரசுகள் அறிமுகம் செய்துள்ளன. மின் ஸ்கூட்டர்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். மாநகராட்சி சுகாதாரப் பிரிவுகளில் மின் குப்பை அள்ளும் ஊர்திகள் வந்து விட்டன. இந்நிலையில் மாசைக் குறைக்க அரசு என்னவிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பட்டியலிட்டால் அதில் முதலாவதாக வருவது எண்ணெய் எரிபொருளின் தேவையைக் குறைப்பதாகும். பொதுப் போக்குவரத்து மலிவாக இருந்தால்தான் மக்கள் பயன்படுத்துவர். இதனால் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயலும்.

மேலும் எண்ணெய் இறக்குமதி அளவையும் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்துக் குறைக்க வேண்டும். எண்ணெய் எரிபொருளை ஜி எஸ் டி வரியின் கீழ்க் கொண்டு வந்து வாகனங்களின் வகையைப் பொறுத்து 5,12,18 மற்றும் 28 விழுக்காடுகளின் கீழ் இவற்றிற்கு வரி விதிக்க வேண்டும். மேலும் அரசுப் பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படும் எண்ணெய்க்கு வரி விலக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் தனியார் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த எண்ணெய்யில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் தேவை. இதனால் எரிபொருளின் உண்மையான மதிப்பறிந்து செயல்பட மக்கள் முன் வருவார்கள். இதன் மூலம் மாசைக் குறைக்கலாம்.

தனியார் வாகனங்களின் உள்நாட்டு விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதோடு அவற்றை மின் வாகனங்கள் உற்பத்தியின் பக்கம் கவனம் செலுத்தத் திருப்ப வேண்டும். மின் வாகனங்களின் உற்பத்திக்கு அதிக ஊக்கம் கொடுக்க வேண்டும். மின் வாகனங்களின் மீதான ஜி எஸ் டிக்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இன்னும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. கதிரவ ஆற்றலை இயன்ற வரைப் பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மின் கலன்களைச் சார்ந்திருப்பதும் குறையும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு