January 18, 2022

பெரியார் – மணியம்மை திருமணம் – கொஞ்சம் ஃப்ளாஷ் பேக்!

ஈ வெ ரா பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தார். அதையொட்டி அவ்ர் தலை மையில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில் அப்போது விடுதலையின் அலுவலகப் பொறுப்பை கவனித்து வந்த ஈ.வெ.கி. சம்பத் (பெரியாரின் அண்ணன் மகன்), தனது எதிர்ப்பினைக் காட்டுவதற்காக திராவிடக் கழகத்தை விட்டு விலகினார். அவர் விலகியதைத் தொடர்ந்து ஏ.கோவிந்தசாமி, அரங்கண்ணல், குத்தூசி குருசாமி ஆகியோரும் விலகினார்கள். பின்னர் பெரியாரின் மணம் குறித்து பேசுவதற்காக்வே திராவிடக் கழகத்தலைவர்கள் பிரமுகர்கள் கூட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், என்.வி.நடராசன், குத்தூசி குருசாமி, குடந்தை கே.கே.நீல மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் இந்த திருமணம் வேண்டாம் என்று பெரியாரைச் சந்தித்து வற்புறுத்த ஒரு நல்லெண்ணக்குழு அமைக்கப்பட்டது. குடந்தை நீலமேகம், என்.வி. நடராசன், குத்தூசி குருசாமி ஆகியோரைக் கொண்ட இந்தக்குழு ஏற்காடு சென்று, அங்கு தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்துப் பேசியது.

ஆனால் தன் முடிவை மாற்றிக்கொள்ள பெரியார் மறுத்துவிட்டார். பிறகு, காஞ்சி மணிமொழியார், டி.எம்.பார்த்த சாரதி, கே.எம். கண்ணபிரான், சி.வி.ராசன் ஆகியோரைக்கொண்ட இரண்டாவது குழுவை அண்ணா அமைத்தார். இந்த இரண்டாவது குழுவின் கோரிக்கையை ஏற்கவும் பெரியார் மறுத்துவிட்டார். பின்னர் திராவிடக் கழகத்தின் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 32 பேர் கையெழுத்திட்டு பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினர். திட்டமிட்டபடி திருமணம் நடந்தால், நாங்கள் கட்சியை விட்டு விலக நேரிடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இதையெல்லாம் பெரியார் பொருட்படுத்தவில்லை.

9.7.1949 ல் திராவிடக் கழக பிரமுகர் சி.பி.நாயகத்தின் இல்லத்தில், திருமணப் பதிவாளர் முன்னிலையில் பெரியார் மணியம்மை திருமணம் திட்டமிட்டபடி நடந்தேறியது.

ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.

1. மணியம்மை. 30 வயது நிரம்பியவர். திருமணம் ஆகாதவர். இவருடைய மறுபெயர் காந்திமதி. தந்தை பெயர் கனகசபாபதி முதலியார்.

2. ராமசாமி நாயக்கருக்கு வயது 70. மனைவியை இழந்தவர். பெரும் நிலச்சுவான்தார்.

இந்த திருமணம் குறித்து, பெரியார் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது:-

மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண்.

அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம்.

மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார்.

ஆகவே, இந்தத் திருமணம், பொருத்தமற்றதோ, அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமோ அல்ல.

மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமோ, கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்பட்ட திருமணமும் அல்ல.

இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை.

என்னைப்போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை.

ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்.

இவ்வாறு அறிக்கையில் பெரியார் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜாஜியின் ஆலோசனையின் பேரிலேயே மணியம்மையை பெரியார் மணந்தார் என்று அக்காலத்தில் பேசப்பட்டது. ஆனால், உண்மையில் இத்திருமணத்தை ராஜாஜியும் ஏற்கவில்லை. வேண்டாம், இந்தத் திருமணம் என்று தான் பெரியாருக்கு ஆலோசனை கூறினார். இதுகுறித்து, பெரியாருக்கு ராஜாஜி ஒரு கடிதம் எழுதினார். அப்போது ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்ததால், டெல்லியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து 21.2.1949 தேதியிட்டு அக்கடிதத்தை ராஜாஜி எழுதியுள்ளார். கடிதத்தின் தலைப்பில், அந்தரங்கம் என்று ராஜாஜி குறிப்பிட்டிருந்ததால், கடித விவரங்களை பெரியார் வெளியிடவில்லை.

கண்டனங்களை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் வழக்கம் உடைய ராஜாஜியும், பெரியாரின் திருமணத்தை நான் ஆதரிக்கவில்லை என்று அப்போது அறிவிக்கவில்லை. ராஜாஜியின் கடிதத்தை, பெரியார் தன் பெட்டியில் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகுதான் இக்கடிதத்தை மணியம்மை பார்த்து, கி.வீரமணியிடம் கொடுத்தார். இருபெரும் தலைவர்களும் மறைந்த பின்னரும் வரலாற்று முக்கியம் வாய்ந்த இக்கடிதத்தை மூடி மறைப்பது சரியல்ல என்ற கருத்துடன், கடித விவரத்தை நிருபர்களிடம் வீரமணி வெளியிட்டார். ராஜாஜியின் கடிதம் வருமாறு:-

தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன். என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு, நாட்டுக்கு எந்த விதத்திலாவது உதவும். தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில், ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது, என்னுடைய பதவி.

இந்தப் பதவியை வகிப்பவன், அந்தப்பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது, இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்திற்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள்.

என் அன்புக்கு அடையாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேமொழிய சாட்சிக் கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.

இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண், தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும், அன்பும் இருந்த போதிலும், சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்புவதில் பயனில்லை.

அதற்காக நிபந்தனைகள் வைத்து சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும், நீடித்த வியாச்சியங்களுக்கும்தான் காரணமாகும்.

இதையெல்லாம் யோசித்து எப்படி செய்ய வேண்டுமோ அப்படிச்செய்வீர்கள். தங்களுடைய வயதையும் நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்.

ஆகையால் ஒரு வருடமாவது ஒத்தி வைத்து, பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டபின் செய்வது நலம்.

எழுதத்தோன்றியதெல்லாம் எழுதினேன். மன்னிக்க வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.