May 17, 2021

உலகின் முதலாவது கடலுக்கு அடியிலான டென்னிஸ் மைதானம் தயாராகுது!

அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் எங்கு பார்த்தாலும் வானை தொடும் வகையில் உயரமான கட்டிடங்கள் காணப்படும். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடமும் துபாயில் தான் உள்ளது. 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரம் கோடி) செலவில் 828 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இது போன்ற விண் முட்டும் கட்டிடங்களை உலகமே வாய் பிளக்கும் வகையில் கட்டி சுற்றுலாவுக்கு வரும் மக்களிடம் காசு பார்ப்பதுதான் அந்நாட்டின் புது ட்ரெண்ட்.

dubai nov 29

அந்த லிஸ்ட்டில் இதோ கீழ்வரும் டென்னிஸ் மைதானமும் இணைகிறது. முன்னதாக கட்டப்பட்ட துபாயின் பிரமாண்ட 304.8 மீட்டர் உயர புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மேல் கட்டப்பட்ட டென்னிஸ் மைதானம் குறித்துத்தான் இன்றுவரை அனைவரும் பேசிவந்தனர். பல ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள ஹெலிபேட்டில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு உலகின் முன்னணி வீரர்கள் இங்கு விளையாடினர் .இதன மூலம் உலகின் உயரமான இடத்தில் அமைந்த‌ டென்னிஸ் விளையாட்டு மைதானம் என்ற சாதனையையும் இந்த ஹோட்டல் பெற்றது. இங்கு ஒரு இரவு தங்குவதற்கு குறைந்த பட்ச வாடகை ரூ 2 லட்சத்திற்கு மேலாகும்

ஆனால் தற்போது துபாயின் ஆழ்கடலில் 7 டென்னிஸ் மைதானங்களை உருவாக்கி வருவதால் புர்ஜ் கட்டிட மைதானம் என்பது இனி பழங்கதைதான். தற்போது புர்ஜ் அல் அராபுக்கும் பார்ம் ஜூஸ்ரா தீவுகளுக்கும் இடையே பெர்சியன் வளைகுடா ஆழ்கடலில் டென்னிஸ் மைதானம் வடிவமைக்கும் பொறுப்பை போலந்து கட்டிடக்கலைஞர் க்ரைஸ்டாஃப் கொடாலா ஏற்றுள்ளார். திட்டமிட்டபடி, தண்ணீருக்குள் வெற்றிகரமாக டென்னிஸ் மைதானம் சாத்தியமானால் உருவாக்கப்படும் 7 டென்னிஸ் மைதானங்களிலும் உலகமே விளையாடி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். மைதானத்தின் மேலே மீன்கள் உலவும் அக்வாரியமும் கீழே மைதானமும் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இரட்டை விருந்து நிச்சயம். எதிர்காலத்தில் இங்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளை நடத்தவும் துபாய் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் சாத்தியமா? என்ற சந்தேக சர்ச்சைகளும் எழாமலில்லை.

முதலில் மொத்த மைதானமும் கடல் நீர் உட்புகாதவாறு அதன் அழுத்தத்தை சமாளித்து தாங்கும் விதத்தில் 33 மீ. அகலத்தில் 9 ஆயிரத்து 718 கி.கி எடையிலான கண்ணாடியை அமைக்கவேண்டுமே என லாஜிக் கேள்விகளை கேட்கிறார் லண்டன் பொறியியல் நிறுவன இயக்குநரான சாரா ஃப்ரே.அது மட்டுமல்லாமல், சுனாமி, நிலநடுக்கம் நிகழ்வுகளைத் தாக்குப் பிடிக்கும் வகையிலும், வெளிச்சம், விபத்தின்போது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் உள்ளிட்டவற்றையும் யோசிப்பது அவசியம் என பொறுப்பாகப் பேசுகிறார் சாரா.

2 பில்லியன் டாலர்களை தண்ணீருக்கடியில் செலவழித்து உருவாகும் இந்த ஆழ்கடல் மைதானங்களைக் குறித்த விமர்சனங்களுக்கு, நீரின் அழுத்தத்தை எதிர்கொண்டு அழுத்தம் தாங்கும் செங்குத்து பார்களைக் கொண்ட கண்ணாடியினால் 95 சதவிகித பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம் என கேஷூவலாக தீர்வுகளைப் பேசுகிறார் கட்டிட டிசைனர் க்ரைஸ்டாஃப் கொடாலா. எப்படியாவ 2020 ஆம் ஆண்டு துபாய் தொழில் கண்காட்சிக்குள் மைதானத்தை தயாராக்க பரபரவென தீயாய் வேலை செய்து வருகிறது டிசைனர் குழு என்று பார்த்துக் கொள்ளுங்களேன்.