November 28, 2021

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் சொல்வது உண்மையல்ல – அரசு விளக்கம்

நம்ம சென்னை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் உற்பத்தியாகும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் கேன் தண்ணீர் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளைவிட மிகக் குறைந்த தரத்திலேயே உற்பத்தியாகி விற்பனைக்கு வருகிறது என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தமிழகம் நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து , வருகின்ற 3-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள், “குடிநீர் தேவைக்காக மட்டுமே நாங்கள் நிலத்தடி நீர் எடுக்கிறோம். தொழில்துறையின் தேவைக்காக எடுக்கவில்லை. குடிநீர் ஆலை கள் எளிய முறையில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற அரசு உடனடியாக கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருப்பதால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. பல இடங்களில் கேன் தண்ணீர் இல்லை என்ற நிலை தோன்றி உள்ளது.

இதை பயன்படுத்தி சிலர் கூடுதல் விலைக்கு கேன் தண்ணீரை வழங்குகிறார்கள். ஆனால் இந்த கேன் தண்ணீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டது தானா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்று மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உரிமம் பெறாத தனியார் குடிநீர் ஆலைகளை இன்று அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 215 குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து தினமும் 5 லட்சம் குடிநீர் கேன் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

4 மாவட்டங்களில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதால் கேன் தண்ணீர் சப்ளை இன்று கணிசமாக குறைந்தது.

சென்னையில் இன்று காலை 5 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 8 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூரில் 33 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் முடக்கப்பட்டுள்ளன.

குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தொடங்கி உள்ளது.

சென்னையில் 90 சதவீதம் பேர் கேன் தண்ணீரைதான் நம்பி உள்ளனர். அவர்களுக்கு கேன் தண்ணீர் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலர் கூடுதலாக கேன் தண்ணீரை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் தண்ணீரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். பொதுவாக கேன் தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது.

ரூ.25 முதல் ரூ.40 வரை கேன் தண்ணீர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீர் ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

சீல் வைக்கப்பட்டுள்ள கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் உடனடியாக தண்ணீரை உற்பத்தி செய்யும் பணியை தொடங்க இயலாது. எனவே கேன் தண்ணீர் சப்ளை பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் “நீர் எடுக்கக்கூடிய பகுதிகள் 4 பகுதிகளாக வரையறுக்கப்பட்டு, அதன் அடிப்படை யில் உரிமம் வழங்கப்படுகிறது. குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில்லை என்ற புகாரில் உண்மையில்லை. நிலத்தடி நீரை எடுக்க வகுக்கப்பட்ட வரைமுறைகளின்படி ஆலை களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது” என்று கேன் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நிலத்தடி நீர் எடுப்பதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நிலத்தடி நீர் எடுக்கப்படும் இடங்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 விதமாக நிலத்தடி நீர் எடுப்பதற்கு குறுவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீர் எடுக்க முடியாத பகுதியாகும். அங்கு குடிநீர் உறிஞ்சி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதி அபாயகரமான பகுதி மற்றும் சராசரியான பகுதிகளில் குடிநீர் உற்பத்தி ஆலைகள் அமைக்கலாம். அந்த பகுதிகளில் கேட்கப்படும் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு உரிமம் வழங்குவது இல்லை என்ற தகவலில் உண்மையில்லை. அனுமதி இல்லாத குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சீல் வைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது