October 5, 2022

நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை!

பிரதமர் மோடியின் கடந்த இரண்டரை ஆண்டுகால நிர்வாகத்தில் எத்தனையோ அரசுத் திட்டங்கள் அதிவிரைவாக நடைபெற்றுள்ளன.பல சிறப்புகள் உள்ள இடத்தில் ஒரு சிறு குறையாவது இல்லாமல் இருக்காது என்பதுபோல, மத்திய அரசு நிர்வாகத்தில் தெரிவது கல்வித் துறை ஒன்றுதான். நம் நாட்டைப் பொருத்தவரை கல்வித் துறை தனி அமைச்சகமாக இல்லாமல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்பதாக பல துறைகளின் சங்கமமாக உள்ளது.இந்தியாவின் கல்வி வளர்ச்சி என்பது சர்வதேச தரத்துடன் போட்டியிடுவதாக இல்லை. ஒருநாட்டின் கல்வி வளர்ச்சி, அந்த நாட்டின் கல்வியறிவு சதவீதம், தொடக்கக் கல்வியில் மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு கூறுகள் மூலம் அளவிடப்படுகிறது.

education mar 17

நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. கடந்த 2012-இல் வெளியான ஒரு சர்வதேச ஆய்வில் பின்லாந்து, தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், யுனைட்டெட் கிங்டம், நெதர்லாந்து, நியூஸிலாந்து, ஸ்விட்சர்லாந்து, கனடா, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, ரஷியா ஆகிய நாடுகளே முதல் 20 இடங்களில் இருந்தன.

கடந்த 2016-இல் நடைபெற்ற ஒரு சர்வதேச ஆய்வில், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், பின்லாந்து, யு.கே., கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, போலந்து, டென்மார்க், ஜெர்மனி, ரஷியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இஸ்ரேல், பெல்ஜியம், செக் குடியரசு, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களைப் பெற்றுள்ளன.

இதில் ஒரு ஆய்வில் இந்தியா 92-ஆவது இடத்திலும், மற்றொரு ஆய்வில் 105-ஆவது இடத்திலும் இடம் பெற்றிருந்தது. இந்த ஆய்வு தவறானது என மறுத்துவிட முடியாது. Program for International Students Assessment – PISA என்ற தேர்வில் பங்கேற்பதை நாம் தவிர்த்து வருவது மேற்கண்ட ஆய்வுகள் உண்மை என்பதையே கூறுகின்றன. Organization of Economic Co operation and Development-OECD அமைப்பு சர்வதேச அளவில் 15 வயது மாணவர்களிடம் அறிவியல் முறைப்படி இந்த தேர்வை நடத்தியது.

கடந்த 2009-இல் நடைபெற்ற இந்த மதிப்பீட்டுத் தேர்வில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, இமாச்சல பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற 74 நாடுகளில் இந்தியா 72-ஆவது இடத்தையே பிடித்தது. அதன்பிறகு இந்தத் தேர்வை இந்தியா புறக்கணித்துவிட்டது.இந்தத் தேர்வில் இந்திய மாணவர்கள் பங்கேற்பதற்கான முன்னெடுப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோவின் தகவல்படி ஆசிய நாடுகளில் கல்வித் துறைக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்றைய நிலையிலும் இந்திய மக்கள்தொகையில் சுமார் 28.20 கோடி பேர் (33 சதவீதம்) எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர். ’பிரிக்ஸ்’ நாடுகளில் இந்தியாவைத் தவிர்த்து உள்ள 4 நாடுகளில் எழுத்தறிவு 90 சதவீதத்துக்கும் அதிகம்.

தொடக்கக் கல்வியில் மட்டுமல்லாது உயர்கல்வியிலும் நாம் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியது உள்ளது. குறிப்பாக, நம் நாட்டில் இணையவழிக் கல்வியை மத்திய அரசு இன்னும் முழுமையாக ஊக்குவிக்கவில்லை. தேர்வுக்கு விண்ணப்பிப்பது, தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது, போட்டித் தேர்வுகள் எழுதுவது, வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வது போன்ற பணிகள் மட்டுமே இதில் நடைபெற்று வருகின்றன.

ஆனால், பெரும்பாலான வெளி நாடுகளில் இணையவழிக் கல்வி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், உயர்கல்வி எளிதாவதோடு, கல்வித் துறையில் செய்யப்படும் உள்கட்டமைப்புக்கான இடம், செலவு, போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு போன்றவை பலமடங்கு குறையும்.அதோடு, எளிதாக வேலை கிடைக்கும் வகையில் பல வகையான பாடத்திட்டங்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற பாடங்கள் இந்தியாவில் இளநிலை கல்வியாக இல்லாமல் முதுநிலைக் கல்வியாகவும், ஆராய்ச்சிப் பாடமாகவும் மட்டுமே உள்ளன.

இந்தப் பாடங்கள் தற்போது அந்தந்த நாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் இணையவழிக் கல்வியாக வழங்கப்பட்டாலும் இன்னும் அனைத்து தரப்பு மாணவர்களையும் அது சென்றடையவில்லை. மேலும், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் மாணவர் உறவு தொழில் சார்ந்ததாக இல்லாமல், உணர்வு சார்ந்ததாக உள்ளதாகவும், பாடத்திட்டங்களில் செய்முறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் இங்கிருந்து அங்கு சென்று பயிலும் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

\இந்தியாவில் கல்வி பயிற்றுவித்தலை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. உரிய நடவடிக்கைகளை சரியான நேரத்தில் நம்முடைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் எடுக்கவில்லையெனில், சீனா, ஜப்பான், கொரியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் நம்மை மீளமுடியாத அளவுக்கு பின்னுக்குத் தள்ளிவிடும்.

இதன் முதல்படியாக, இந்திய மாணவர்கள் அனைவரையும் OECD நடத்தும் சர்வதேச மாணவர் தேர்வை எழுத ஊக்குவிக்க வேண்டும்.மாணவர்கள் இந்த உலகில் எங்கும் வசிப்பதற்கு, வேலை செய்வதற்கு, விளையாடுவதற்கு ஏற்ப நம் கல்வியில் தியரி மற்றும் செய்முறை பாடங்களை கற்பிக்கும் இடங்களாக பள்ளியையும் பல்கலைக்கழகங்களையும் மாற்ற வேண்டும்.

இரா. மகாதேவன்