October 4, 2022

திரெளபதி – விமர்சனம்

சினிமாக்களில் சில படங்கள் காதலை முன்னிலைப்படுத்தி இருக்கும்.. சில படங்கள் அன்பை விதைத்திருக்கும்.. சில படங்கள் சிரிப்பை வரவழைக்கும்..மேலும் சில படங்கள் கண்ணீரை வரவழைக்கும்.. மிகச் சிலப் படங்கள் ரசிக்கவும் வைத்து யோசிக்கவும் வைத்து விடும்.. அந்த லிஸ்டில் இணைந்திருப்பதுதான் ‘திரெளபதி’ திரைப்படம். இந்த திரெளபதி ஓரிரு குறிப்பிட்ட சாதீகளை சுட்டிக் காட்டினாலும் சுட்டிக் காட்டும் விரல் நமக்கு சொந்தமானது என்பதாலும் அந்தக் காலத்திலேயே முதலியார் தொடங்கி, பிராமணன், தேவர் மற்றும் தலித் சாதிகளை சாடியும், சப்போர்ட் பண்ணியும் வந்த படங்களை விட இது ஒன்றும் மோசமில்லை என்பதாலும் உறுத்த வில்லை.. மாறாக கவனிக்க வைக்கிறது..கூடவே இப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே இது குறித்து தியேட்டரில் நம் அருகில் இருப்போருடன் ஆலோசிக்கவும் தோன்றியது.

திரெளபதி என்ற தலைப்பில் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் 2004ல் பாமக ராமதாஸ் சுட்டிக்காட்டிய விசயம் என்று இன்றைக்குக் கூட நினைவூட்டி பெருமைப் பட்டிருக்கிறார். அதாவது திருமண பத்திரப்பதிவு முறையில் நடக்கும் கோளாறுகளும், மோசடியின் பின்னணியும்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் வட தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் ரிச்சர்ட்.. தன் முறைப்பெண்ணான ஷீலாவை அதாவது திரெளபதியை திருமணம் செய்து வாழ்க்கை கழித்து கொண்டிருந்தவர் திடீரென்று மனைவி திரெளபதி மற்றும் அவரது தங்கையை கொலை செய்ததாக அதுவும் ஆணவக் கொலை குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்று ஆறாவது மாசம் ஜாமீனில் விடுதலையாவதில் இருந்துதான் கதை தொடங்கு கிறது. வெளியே வந்த அவர் சொந்த ஊருக்கே போகாமல் திரெளபதியின் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மர்மமாகச் சொல்லியபடி சிங்காரச் சென்னைக்கு வந்து ஓரிரு கொலைகளை கச்சிதமாகச் செய்து முடிக்கிறார். அப்படி என்ன திரெளபதியின் சபதம்? ஏன் ஜாமீனில் வந்தவர் கூட அடுத்தடுத்து ஏனிந்த கொலை செய்கிறார் என்பது தான் படத்தின் கதை.

தொடக்கக் காட்சியில் வரும் நடிகர்கள் தொடங்கி கேமரா மற்றும் இசை போன்ற பல விஷயங்கள் டிவி டிராமா-வை நினைவுப் படுத்தியது. ஆனாலும் ரிச்சர்ட் பழி வாங்க சென்னை வந்து தலையில் தொப்பி மட்டும் வைத்துக் கொண்டு மறைந்த படி கொலை செய்பவர், முன்னதாக கிராமத்தில் சிலம்பாட்ட வாத்தியார் என இரட்டை ரோல். இரண்டுக்கும் முடிந்த அளவு வித்தியாசம் காட்டுகிறார். இதில் கிராமத்து ரிச்சர்ட் அசத்துகிறார். அவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமார் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார். அதிலும் அவர் பேசும் சில வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் விழுகின்றன. கருணாஸ் எம் எல் ஏ ஆகி விட்டதால் அசெம்பளியில் பேசுவது போல் கிளிப் பிள்ளை மாடுலேசனில் ஒப்பேற்றி விட்டு போகிறார். போலீஸ், மற்ற நண்பர்கள், வில்லன்கள் செட் பிராப்பர்ட்டி-யாட்டம் சமாளிக்கிறார்கள்.

மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும், ஜூபினின் பின்னணி இசையும் ஓ கே ரகம்.

ஆக.. நாட்டில் நடக்கும் பதிவுத் திருமணங்களில் பெரும்பாலும் போலியானவை, வசதியான வீட்டு பெண் பிள்ளைகளை குறி வைத்து பெற்றவர்களிடம் பணம் பறிக்கவே இப்படி எல்லாம் நடக்கின்றன எனச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. அத்துடன் ஒவ்வொரு பதிவுத் திருமண மும் சிசிடிவி முன் நடைபெற வேண்டும், அதை அரசு பாதுகாக்க வேண்டு. அது மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணும் பெற்றோர் முன்னிலையில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். இதில் விவாதம் செய்வதற்கும், விசாரணை செய்வதற்கும் நிறைய இருக்கிறது. அந்த வகையில் திரெளபதி படம் உருவாக ஐடியா கொடுத்த ராமதாஸூக்கு ஒரு சல்யூட்.

அதே சமயம் ராமதாஸ் கொடுத்த ஒன் லைனை கையில் எடுத்த இயக்குநர் மோகன் ஜி அதை திரையாக்குவதில் பொருளாதார பிரச்னைக் காரணமாக(வே) நடிக, நடிகைகள் தேர்விலும், ஸ்கீரின் பிளேயிலும் அசட்டையாகி விட்டார் என்றே நம்பலாம்.. சென்னை போன்ற நகரில் ஒரு அசிஸ் டெண்ட் கமிஷனர் தனிப்பட்ட முறையில் ஒரு சாதாரண போலீசை அனுப்பி கொலையை விசாரிக்கச் சொல்வதும், அதுவும் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து என்கவுண்டர் செய்யும்படி சொல்வதெல்லாம் நாடகக் காதலை விட ஆர்டிபிஷியலாக இருக்கிறது.. இப்படி இந்த சினிமா என்றில்லை எல்லா திரைப்படங்களிலும் குறை இருக்கத்தான் செய்யும்..ஆனால் இந்த திரெளபதி மூலம் சில பல விஷயங்களில் எல்லா தரப்பினருக்கும் கொஞ்சம் விழிப்புணர்வைக் கொடுக்க முயன்று அதில் பாஸ் மார்க்-கும் வாங்கி விட்டார் இயக்குநர் மோகன் ஜி என்பதே நிஜம்

மொத்தத்தில் இந்த திரெளபதி-க்கு மஞ்சள் சட்டை அணிவதை தவிர்த்திருக்கலாம்.

இந்தப் படத்தை சகல ஜாதியினரும் குடும்பத்தோடு போய் பார்க்கலாம்..!

மார்க் 3.5 / 5