தெலுங்கானா :பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..!

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலையாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என நாடு முழுவதும் ஆவேசக்குரல் எழுந்தது. பாராளுமன்றத்திலும் இதுகுறித்து பெண் எம்பிக்கள் ஆவேசமாக தங்கள் கருத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் கொலையாளிகள் 4 பேர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது திடீரென 4 பேர்களும் தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதனையடுத்து போலீசார் அவர்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த பெண், அந்தப் பகுதியில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிவந்துள்ளார். அவர், கடந்த மாதம் 27-ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் போது, நான்கு பேரால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திட்டமிட்டு அந்தப் பெண்ணின் வண்டியைப் பஞ்சர் செய்து, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அவருக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து, மயக்கமடைந்த நிலையில் அவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தில், முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

`இப்படியொரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துவருகிறது. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 7 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சம்பவம் நடந்த தொண்டுபள்ளி டோல் கேட், ஷாத்நகர், ஷம்ஷாபாத் மற்றும் பெண் எரித்துக் கொல்லப்பட்ட பாலம் ஆகிய இடங்களுக்குக் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் நிறுத்தப்பட்டு, சம்பவம் எப்படி நடந்தது, யார் கொலை செய்தார்கள் என்பதைச் செய்து காட்டச் சொல்லி காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

பெண் மருத்துவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சட்டான்பள்ளி பகுதியில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, நான்கு பேரும் நான்கு திசைகளில் தப்பி ஓட முயன்றதாகவும், அந்த நேரத்தில் காவலர்கள் அவர்களை என்கவுன்டர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் காடு போல உள்ள இடம் என்பதால், அங்கிருந்து தப்பித்தால் பிடிக்கமுடியாது என நான்கு பேரும் நினைத்துள்ளனர். ஓடியவர்களைக் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தற்போது மூத்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயம் போலீஸாரின் இந்த என்கவுண்டர் அதிரடிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளது.